குறுக்கு வழியில் முன்னேறுபவர்களால் நேர்வழியில் நியாயமாக முன்னேறுபவர்களின் வாழ்க்கை எவ்வளவு பாதிக்கப்படுகிறது என்பதைக் குறுக்கு புத்திக் காரர்களின் மனசாட்சியைப் பிடித்து உலுக்கி எடுத்துச் சொல்லியிருக்கிறார் இயக்குனர் அஸ்வத் மாரிமுத்து.
அத்துடன் கல்விதான் எல்லா முன்னேற்றங்களுக்கும் அடிப்படை என்பதையும் சொல்லியிருக்கிறார்.
கேட்பதற்கு பழமைவாதம் போலத் தோன்றினாலும் அதை இன்றைய இளைஞர்களுக்குப் பிடித்த நவீனங்களுடன் சொல்லி இருப்பதால் அதிரி புதிரியாகி இருக்கிறது படம்.
லவ் டுடே படத்தில் இளைஞர்களின் மனதைக் கொள்ளையடித்த பிரதீப் ரங்கநாதன்தான் ஹீரோ என்பதைச் சொல்ல வேண்டியதில்லை. அவருக்கான தகுதித் தேர்வாக அமைந்த படம் இது – அதில் வென்றிருக்கிறார்.
பள்ளி இறுதிப் பருவம் தொட்டு கல்லூரிப் பருவம், அதற்கடுத்து வேலைக்குச் செல்லும் பருவம் என்ற மூன்று பருவங்களுக்கும் பொருத்தமான ஹீரோவாக இருக்கிறார் பிரதீப்.
அவரது தோற்றத்துக்கும், இமேஜுக்குமான பாத்திரமே முதல் வெற்றியைத் தந்து விடுகிறது. அங்கங்கே தனுஷையும், எஸ்.ஜே. சூர்யாவையும் நினைவுபடுத்துவதைத் தவிர்ப்பது அவரது தனித்தன்மைக்கு நலம்.
நாயகி அனுபமா பரமேஸ்வரன், முன்பு பார்த்ததை விட இளமையும் அழகும் கூடித் தெரிகிறார். ஒரு கட்டத்தில் பிரதீப் தன்னை விட்டால் போதும் என்று நினைப்பவர் பின்னால் அவர் முன்னேற உந்து சக்தியாக இருப்பதில் முந்துகிறார்.
முதல் நாயகி அனுபமா தவறவிட்ட கிளாமர் ஏரியாவை இரண்டாவது நாயகி காயடு லோஹர், தவற விடாமல் கவர்கிறார்.
மூன்றாவது நாயகி யார் என்கிற சஸ்பென்ஸ் உடைகையில் தியேட்டர் கைத்தட்டல்களில் அள்ளுகிறது.
இவர்களுக்கு ஈடாக, தான் வரும் ஒவ்வொரு காட்சியிலும் ரசிக்க வைப்பவர் இயக்குனர் மிஷ்கின். கல்லூரி முதல்வராக வரும் அவரே பிரதீப்புக்கு வில்லன் ஆவது அமர்க்களம்.
இந்த முன்னணி பாத்திரங்களைத் தூக்கிச் சாப்பிடும் அளவில் நடித்திருக்கிறார் பிரதீப்பின் தந்தையாக வரும் மரியான். இப்படி ஒரு தந்தை அமையப்பெற்றால் எப்படிப்பட்ட உதவாக்கரை மகனும் ஒரு கட்டத்தில் திருந்தி விடுவான்.
அங்கங்கே சிரிப்புக்கு உத்தரவாதம் தருகிறார்கள் விஜே சித்து, ஹர்ஷத் கான்.
கெளதம் மேனன், கே.எஸ்.ரவிக்குமார், பி.எல்.தேனப்பன் அனைவரது பங்களிப்பும் கச்சிதம்.
லியோன் ஜேம்ஸ் இசையில் பாடல்களும், பின்னணி இசையும் இளமையில் முக்கி எடுத்து நம்மை நனைத்திருக்கிறது.
படத்தின் பிரமாண்டத்தையும், அழகியலையும் உறுதி செய்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் நிகேத் பொம்மி.
எழுதி இயக்கியிருக்கும் இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து, ஒரு முக்கிய பாத்திரத்தில் வந்து முத்திரை பதிக்கிறார். இனி இவரை முன்னணி நடிகர்கள் தேடிப் பிடிப்பார்கள்.
இளைஞர்களுக்கான படம் என்றாலும் குடும்பத்துடன் அனைத்து வயதினரும் ரசித்துப் பார்க்கும் வகையில் அமைந்திருப்பதால் பிளாக் பஸ்டர் லிஸ்டில் இடம் பிடித்து விடுகிறது இந்தப்படம்.
அதில் லாஜிக் குறைபாடுகள் எல்லாம் கரைந்து காணாமல் போகிறது.
டிராகன் – ஃப்ரூட்..!
– வேணுஜி