மலேசியாவைச் சேர்ந்த மோகன் சுவாமி, சுவாமி ராமாவால் ஈர்க்கப்பட்டு இமயமலைக்குச் சென்றார். பின்னர் சுவாமி ராமாவின் நேரடி சீடரான அவர், தனது நேரடி அனுபவங்களை நூலாக ஆங்கிலத்தில் `Journey With a Himalayan Master Swami Rama’ என்ற தலைப்பில் நூலாக எழுதியிருக்கிறார்.
அதன் தமிழ்ப் பதிப்பாக சுபா மொழிபெயர்த்துள்ள `இமயகுருவுடன் ஓர் இதயப்பயணம்’ நூலுக்கு நடிகர் ரஜினிகாந்த் அணிந்துரை எழுதியிருக்கிறார். மோகன் சுவாமியை சந்தித்த நிகழ்வுகள் குறித்தும் மலேசியாவில் அவருடன் பழகிய நாள்கள் குறித்தும் இந்த நூல் தனது மனதுக்கு எவ்வளவு நெருக்கமானது என்பது குறித்தும் நடிகர் ரஜினி, அந்த அணிந்துரையில் நெகிழ்ந்திருக்கிறார்.
இமயகுருவுடன் ஓர் இதயப்பயணம்’ நூலுக்கு ரஜினியின் அணிந்துரை கீழே…
“மலேசியாவில் கபாலி படப்பிடிப்பு. அப்போதுதான், மோகன் சுவாமியை முதன்முறையாகச் சந்தித்தேன். அது என் வாழ்வின் மிகப் பரபரப்பான நேரம். மலேசியாவில் நீண்ட நாட்கள் தங்கியிருந்ததால், என்னைச் சந்திக்கவும், என்னுடன் புகைப்படம் எடுத்துக்கொள்ளவும் நிறைய பேர் விரும்பினார்கள்.
மோகன் சுவாமியும் என்னைச் சந்திக்க நேரம் கேட்டிருந்தார். வந்தார். பார்த்தவுடன், என்னை இறுக அணைத்துக்கொண்டார். என்னையறியாமல் நானும் அவரைக் கட்டிப்பிடித்தேன். வெகு காலம் பழகிய நண்பரை அணைப்பது போலவே உணர்ந்தேன். அதற்கு முன் அப்படியோர் உணர்வு ஏற்பட்டதேயில்லை. அவரிடம் இருந்த ஏதோ ஒரு சக்தி, என்னை ஈர்த்தது. சுவாமி ராமாவின் நேரடி சீடர் அவர் என்று கேள்விப்பட்டபோது, என் காதுகளை என்னாலேயே நம்ப முடியவில்லை.
கோலாலம்பூருக்கு வந்தபோதெல்லாம் சுவாமி ராமா, அவர் வீட்டில்தான் தங்கியிருந்தார். நானும் சுவாமி ராமாவிடம் ஆழ்ந்த பற்றுடைய சீடன்.
‘Living with the Himalayan Masters’ புத்தகத்தைப் படித்த பிறகுதான் இமயத்துக்கு அடிக்கடி செல்ல ஆரம்பித்தேன். அவரைச் சந்திப்பதற்குப் பலமுறை முயற்சி செய்தேன். 1996-ல் அவர் மகா சமாதி அடைந்துவிட்டார் என்று பின்னர் அறிந்தேன். அவரைச் சந்திக்க இயலாமல் போய்விட்டதே என்ற வலி இன்றைக்கும் எனக்கு உண்டு. அவருடன் நெருங்கிப் பழகிய யாரையாவது சந்திக்க முடியுமா என்று ஏங்கியிருக்கிறேன்.
சந்திக்கும் முன், மோகன் சுவாமிக்குப் பத்து நிமிடங்களே ஒதுக்கியிருந்தேன். ஆனால், கிட்டத்தட்ட ஒன்றரை மணி நேரம் ஆன்மிகம் பற்றியும், சுவாமி ராமா பற்றியும் பேசிக்கொண்டிருந்தோம். வெளியில் பலர் எனக்காகக் காத்திருப்பது நினைவுபடுத்தப்பட்டபோது, மனமின்றி சந்திப்பை முடிக்கவேண்டியிருந்தது. அவருடைய வீட்டுக்கு மறுநாள் வருவதாகச் சொன்னேன். என்னைவிடப் பரபரப்பான வாழ்க்கை முறை இருந்தும், அவர் என் கோரிக்கையை உடனே ஏற்றார்.
மறுநாள் என்னால் வேலையில் ஒழுங்காக கவனம் செலுத்தவே இயலவில்லை. படப்பிடிப்பு எப்போது முடியும், எப்போது மோகன் சுவாமி வீட்டுக்குப் போகலாம் என்ற தவிப்பு ஆட்டிப்படைத்தது. ஒரே டேக்கில் பொதுவாக முடியக்கூடிய சில ஷாட்கள், பத்து பதினைந்து டேக் வாங்கின. எனக்கு என்ன ஆயிற்று என்று இயக்குநர் குழம்பிக் கொண்டிருந்தார்.
ஒருவழியாக படப்பிடிப்பு முடிந்ததும், மோகன் சுவாமியின் வீட்டுக்குப் பயணப்பட்டேன். வரவேற்கக் காத்திருந்தார். அரண்மனை போன்ற வீடு. வீடு என்பதைவிட ஆலயம் என்று சொல்லலாம். நுழைவாயிலில் விநாயகர் சிற்பம். உள்ளே சிவலிங்கம். ஏழடி உயரத்தில் அன்னை மகிஷாசுரமர்த்தினியின் சிற்பம். நான்கடி உயரத்தில் மதுரை வீரனின் சிற்பம். தவிர, சுவாமி ராமாவின் புகைப்படம் ஒன்று.
வீடே ஆன்மிகத்தில் பரிமளித்தது. பார்த்த ஒவ்வொன்றும் என்னை வசீகரித்தது. முக்கியமாக மதுரை வீரனின் சிற்பம். அந்த மாதிரியான அளவில் அதற்குமுன் நான் பார்த்ததில்லை.
அவர் எப்போது என்னை தன் குருதேவின் அறைக்கு அழைத்துச் செல்வார் என்று தவிப்புடன் காத்திருந்தேன். அதைப் பார்க்காமல் என் மனம் அமைதியாகாது என்பதை என் எண்ண ஓட்டத்தில் படித்தது போல, மோகன் சுவாமி அந்த அறைக்குக் கூட்டிச் சென்றார்.
குரு பெங்காலி பாபா, ஆப்பிள் அளவில் ஒரு ருத்திராட்சத்தைப் பாதுகாக்கச் சொல்லி தன் சீடர் சுவாமி ராமாவிடம் கொடுத்திருந்தார். அதுபற்றி ‘At the feet of the Himalayan Masters’ என்ற புத்தகத்தில் படித்திருந்தேன். அதைத் தன் சீடர் மோகன் சுவாமியிடம் விட்டுச் சென்றிருக்கிறார் சுவாமி ராமா என்று கேள்விப்பட்டபோது, மயிர்கூச்செறிந்தது.
“அந்த ருத்திராட்சத்தை நான் தொட்டுப் பார்க்கலாமா..?” என்று கேட்டேன். “நீங்கள் அதை நிச்சயம் தொடலாம்..” என்றார். ‘நீங்கள்’ என்ற சொல்லில் அவர் ஏன் அழுத்தம் கொடுத்தார் என்று எனக்குப் புரியவில்லை.
“இங்கே எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் செலவு செய்யுங்கள். வெளியில் காத்திருக்கிறேன்…” என்றார்.
அறைக்குள் நுழைந்தேன். இமயத்தில் இருக்கும் குகை ஒன்றில் நுழைவதைப் போலவே உணர்ந்தேன். அறை பொதுவாக இருட்டாக இருந்தது. ஒரு சுடரொளி மட்டுமே தெரிந்தது. அந்த ருத்திராட்சத்தின் அருகில், எரியும் தூங்கா விளக்கின் சுடரொளி அது.
ஒரு சிறிய கட்டிலும், ஒற்றை நாற்காலியும் தென்பட்டன. அறையில் அதன்முன் நான் அனுபவித்திராத ஓர் ஆனந்தமான சுகந்தம். சுவாமி ராமா அங்கு இருப்பதாகவே உணர்ந்தேன். எங்கும் நிசப்தம், அசைவற்ற அமைதி. ஆழமான நிசப்தத்திலிருந்து ‘ஓம்’ என்ற ஒலி, எனக்கு மட்டுமே கேட்பதாகத் தோன்றியது.
சுவாமி ராமாவின் கட்டிலை ஸ்பரிசித்தேன். உரிய மரியாதையை இதயத்திலிருந்து செலுத்தினேன். அவர் அமரும் நாற்காலிக்கும் அதே மரியாதையைச் செலுத்தினேன். அதன் பிறகு, சுடரொளியை நெருங்கினேன். குரு பெங்காலி பாபா கொடுத்திருந்த ருத்திராட்சத்தை நெருக்கத்தில் பார்த்தேன். ஒரு மின்சாரம் தாக்கியது போல் உணர்ந்தேன். உறைந்தேன். ஒரு பாம்பைச் சந்திப்பதுபோல் இருந்தது. மண்டியிட்டேன். என்னுடைய வந்தனங்களை பெங்காலி பாபாவுக்கும், சுவாமி ராமாவுக்கும் சமர்ப்பித்தேன்.
என் கைகள் தாமாக நீண்டன. ருத்திராட்சத்தை எடுத்தன. அடுத்த கணம் எனக்கு என்ன நேர்ந்தது என நினைவில்லை. இருளோடு கலந்தேன். ஒலி இல்லை. உணர்வில்லை. உடல் இல்லை. மனமில்லை. முற்றிலும் இருள் மட்டுமே சூழ்ந்திருந்தது.
இதுதான் மகா காளியா..? மகா காளியுடன் நான் ஐக்கியமாகி விட்டேனா..? என்னுடைய கண்கள் மூடியிருந்தன. சில கணங்களுக்கு மின்னலைப் போல் ஓர் அபாரமான ஒளி. என்னுடைய உடல் நடுங்கியது. இமைகளை மெல்லத் திறந்தேன்.
இப்போது அறை வித்தியாசமாகத் தெரிந்தது. பதினைந்து மணி நேரம் இடைவிடாமல் தூங்கியதைப் போல் உடலும் மனமும் புத்துணர்ச்சி பெற்றிருந்தன. கண்கள் தாமாகக் கண்ணீரைச் சொரிந்தன. அதுவரை அனுபவித்திராத ஒரு பரவசத்தை அனுபவித்தேன். ருத்திராட்சத்தை என்னுடைய தலை மீது வைத்தேன். அதன் ஆசிகளைப் பெற்று, அதனுடைய இருப்பிடத்துக்குத் திருப்பினேன்.
மெல்ல அறையை விட்டு வெளியில் வந்தேன். வெளியில் ஒரு சோஃபாவில் காத்திருந்த மோகன்ஜி, என்னை நெருங்கினார். பெரும் புன்னகையுடன் என் கைகளைப் பற்றிக்கொண்டார். இருவரும் 2, 3 நிமிடங்களுக்கு எதுவுமே பேசவில்லை. அந்த நிமிடங்களில் மௌனமாக எங்களுக்குள் என்ன பரிமாறிக்கொண்டோம் என்று எனக்குச் சொல்லத் தெரியவில்லை.
“வெகு நேரம் காக்க வைத்துவிட்டேனா..?”
“கிட்டத்தட்ட 28 நிமிடங்கள் உள்ளே இருந்தீர்கள்” என்றார்.
ஐந்து நிமிடங்கள்தான் எனக்கு நினைவில் இருந்தது.
கீழே அவருடைய வரவேற்பறைக்குச் சென்றோம். உலக நடப்புகள் பற்றிப் பேசினோம். அப்போதுதான் அவர் வர்த்தகத்தில் எவ்வளவு பெரிய புள்ளி என்பதைப் புரிந்துகொண்டேன். அவருடைய தொடர்பு வட்டத்தில் அரசாங்கத்தின் உயர்ந்த அதிகாரிகளும், முதல் மந்திரிகளும், பிரதம மந்திரிகளும் இருந்தனர். “அதைப் பற்றியெல்லாம் பேசாமல் ஆன்மிகத்தைப் பற்றி மட்டும் பேச விரும்புகிறீர்களே’’ என்று கேட்டபோது, அதைப் புறங்கையால் ஒதுக்கினார்.
இரவு மணி பதினொன்று. நாலரை மணி நேரம் நழுவியிருந்தது. மறுநாள் படப்பிடிப்பு இருந்ததால், நன்றிகளைத் தெரிவித்துவிட்டுப் புறப்பட்டேன்.
அன்றிரவு என்னால் தூங்கவே இயலவில்லை. மோகன் சுவாமியின் முகம், அவர் உதிர்த்த வார்த்தைகள், சுவாமி ராமாவின் நினைவுகள், ருத்திராட்சம் எல்லாமே என் எண்ணங்களை வேட்டையாடின.
மறுநாளும் படப்பிடிப்பில் கவனம் முழுமையாக இல்லை. மிக அன்பானவரிடமிருந்து பிரிக்கப்பட்டவன்போல் உணர்ந்தேன். மறுபடியும் அவரைச் சந்திக்க வேண்டும், ருத்திராட்சத்தைப் பார்க்க வேண்டும் என்று ஆவல் எழுந்தது.
படப்பிடிப்பு முடிந்ததும், அவருடைய வீட்டுக்கு நேரே அழைத்துச் செல்லுமாறு என் ஓட்டுநரைப் பணித்தேன். போகும் வழியில் மோகன் சுவாமியை அழைத்தேன். அவருடைய வீட்டுக்கு வருவதாகத் தெரிவித்தேன்.
“மகிழ்ச்சி. உங்களைப் பற்றிதான் நினைத்துக்கொண்டிருந்தேன்” என்றார். அப்போது, வேறு எங்கோ, இன்னொரு சந்திப்பில் இருந்தார். “நீங்கள் வீட்டுக்குச் செல்லுங்கள். எவ்வளவு விரைவில் முடியுமோ, அவ்வளவு விரைவில் வந்து சேர்கிறேன்” என்றார்.
அவர் வீட்டிலிருந்தவர்கள் என்னை வரவேற்று, அமரச் சொன்னார்கள். மோகன் சுவாமி வந்து சேர்ந்தபோது, ஹாலில் நான் அமர்ந்திருப்பது கண்டு, ஆச்சரியப்பட்டார். சுவாமி ராமாவின் அறையில்தான் நான் இருப்பேன் என்று எதிர்பார்த்ததாகச் சொன்னார்.
“நீங்கள் இல்லாமல் அங்கு செல்லத் தயக்கமாக இருந்தது…” என்றேன். என்னை சுவாமிஜியின் அறைக்கு அவரே கூட்டிச் சென்றார். அங்கு சிறிது நேரம் தனிமையில் தியானம் செய்யச் சொன்னார்.
கிட்டத்தட்ட பதினைந்து நிமிடங்களுக்கு தியானத்தில் ஈடுபட்டிருந்தேன். பின்னர் மோகன்ஜியை வரவேற்பறையில் சந்தித்தேன்.
என்னுடைய தனிப்பட்ட வாழ்வு பற்றி அவரிடம் பகிர்ந்துகொள்ள ஆரம்பித்தேன். என்னுடைய பொருளாதார நிலை, அரசியல் கவனம், எதிர்காலத் திட்டங்கள் என்று என் மனைவியிடமோ, மிக நெருங்கிய நண்பர்களிடமோகூட நான் பகிர்ந்துகொள்ளாத பல விஷயங்களை, எந்தவிதத் தயக்கமும் இல்லாமல், அவருடன் பகிர்ந்துகொண்டேன். அது எனக்கே ஆச்சரியமாக இருந்தது. அவரும் எந்தத் தயக்கமும் இல்லாமல் சரளமாக உரையாடினார்.
இந்த வசதியான வாழ்க்கையைத் துறந்துவிட்டு விரைவில் இமய மலைக்குச் சென்று சந்நியாசத்தை மேற்கொள்ளப்போவதாகச் சொன்னார். அதிர்ந்துபோனேன்.
தன் பூதவுடலில் இருந்தபோது, சுவாமி ராமா அவருக்கு சந்நியாசம் வழங்க மறுத்துவிட்டார். உரிய தருணத்தில் அழைத்து வழங்குவதாகவும் சொல்லியிருந்தார். மோகன்ஜி, சுவாமி ராமாவின் இறுதி நாட்களில் மீண்டும் சந்நியாசம் பற்றி நினைவூட்டியபோதும், “நீ ஆற்ற வேண்டிய கடமைகளில் சில பாக்கியிருக்கின்றன. அவை முடிந்த பிறகு, நானே உன்னை அழைப்பேன். என்மீது நம்பிக்கை வைத்துக் காத்திரு…” என்று அவர் தெரிவித்திருந்தார். பூதவுடலைத் துறந்து, சுவாமி ராமா மகா சமாதி அடைந்த பிறகும், நேரில் வந்திருந்து அவருக்கு சந்நியாசத்துக்கான தீட்சை அளிப்பதாக வாக்களித்திருந்தார்.
விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் கோலோச்சிக்கொண்டிருக்கும் இன்றைய உலகத்தில், சமாதியடைந்த சுவாமி ராமா மீண்டும் திரும்பி வருவதாவது, மோகன்ஜிக்கு சந்நியாசத்தை வழங்குவதாவது… என்று கேலி பேசலாம். ஆனால், எங்களைப் போன்றோர் இதை முழுமையாக நம்புகிறோம்.
இதற்குமுன் நான் யார்மீதும் பொறாமைகொண்டதில்லை. ஆனால், மோகன்ஜி மீது பொறாமைகொண்டேன். என்னுடைய கடவுளர்களிடமும், குருமார்களிடமும் பணம், புகழ், அடையாளம், ஆசை, கல்யாணம் எல்லாவற்றையும் துறக்க அனுமதித்து, மோகன்ஜிக்கு வழங்கிய அதே வரத்தை எனக்கும் அருளுமாறு வேண்டினேன்.
“சுவாமி ராமாவுடன் செலவு செய்த நாட்களைப் பற்றி ஏன் புத்தகம் எழுதவில்லை..?” என்று மோகன் சுவாமியிடம் கேட்டேன். 10 வருடங்களாக அதைக் கொஞ்சம் கொஞ்சமாக எழுதிக் கொண்டிருப்பதாகவும், விரைவில் முடிக்க இருப்பதாகவும் தெரிவித்தார். எழுதியதை எனக்கு அனுப்பிவைத்தார். என் விமர்சனத்தை எதிர்பார்ப்பதாகச் சொன்னார். படிக்கப் படிக்க, பிரமித்துப்போனேன்.
‘Living with the Himalayan Masters’ புத்தகத்தின் இன்னொரு வடிவம் போன்றே எனக்கு அது தோன்றியது. தன்னுடைய குருவுடனும் மற்ற ஆன்மிக மகான்கள் மத்தியிலும் இருந்தபோது கிடைத்த அனுபவங்களை, சுவாமி ராமா, அந்தப் புத்தகத்தில் தெரிவித்திருப்பார். அவரின் சீடர் மோகன் சுவாமி, தன் குருவுடனும், கடவுளர்களுடனும் இருந்த அனுபவங்களைப் பதிவு செய்திருக்கும் புத்தகம் இது.
இந்தப் புத்தகத்தைப் பற்றிப் பேசுமுன், சுவாமி ராமாவைப் பற்றி ஒரு குறிப்பு. மகா அவதார் பாபாஜியின் நேரடி சீடர் பெங்காலி பாபா. சுவாமி ராமா, பெங்காலி பாபாவின் அருளாசியுடன் பிறந்தவர். இமயமலைச் சிகரங்களில் வசித்தவர். பெங்காலி பாபா, சுவாமி ராமாவைத் தன் சீடராக ஸ்வீகரித்துக்கொண்டார். தன்னுடைய குகையிலேயே அவரை வளர்த்தார்.
இமயத்தில் அப்போது வாழ்ந்த பல மகான்களைச் சந்தித்து, சுவாமி ராமா பயிற்சி பெற பெங்காலி பாபா ஏற்பாடு செய்தார். இமய மலையில் இருக்கும் யோகிகள், அபாரமான சக்திகள் கொண்டவர்கள். சுவாமி ராமா, எல்லாவற்றையும் பயின்று, தேர்ச்சி பெற்றார். பரகாயப்பிரவேசம் [கூடு விட்டுக் கூடு பாயும் வித்தை] முதல் ஸ்ரீவித்யா வரை, பல வழிமுறைகளைக் கற்றறிந்தார்.
பெங்காலி பாபா அலஹாபாத் பல்கலைக் கழகத்துக்கும், லண்டனில் இருக்கும் ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகத்துக்கும் சுவாமி ராமாவை அனுப்பிவைத்தார். விஞ்ஞானத்துக்கும் ஆன்மிகத்துக்கும் ஒரு பாலமாக அவரை இயங்கவைத்தார். வெளிநாட்டில் வாழ்பவர்கள் தங்களைப் பற்றியும் கடவுளர்களைப் பற்றியும் அறிவதற்கு உதவச் சொன்னார். வாழ்வின் உண்மை பற்றியும் ஜனன-மரணம் பற்றியும் கடவுளை அறிந்துகொள்ளும் வழிமுறைகளைப் பற்றியும் அவர்களுக்குக் கற்பிக்கச் சொன்னார்.
சுவாமி ராமா கற்பிப்பதுடன் நில்லாமல், நடைமுறையிலும் அதைச் செயல்படுத்திப் பார்த்தார். வெவ்வேறு தேசங்களில் ஆசிரமங்களை நிறுவினார். அவருடைய குருவின் ஆணைப்படி, டேராடூன் ரிஷிகேஷ் அருகில், பல நூறு ஏக்கர் பரப்பில் ஒரு நவீன மருத்துவமனையையும் மருத்துவக் கல்லூரியையும் நிறுவியிருக்கிறார்.
ஆன்மிகத்தில் ஆர்வம் உள்ளவர்கள், இந்தப் புத்தகத்தைப் படித்தால், ஆயிரம் மடங்கு அது பெருகும். கடவுள் நம்பிக்கையே இல்லாதவர் இந்தப் புத்தகத்தைப் படித்தால்கூட, அவருள் இது ஒரு மாற்றத்தைக் கொண்டுவரும்.
மோகன்ஜியின் இந்தப் புத்தகம், பல வசீகரமான நிகழ்வுகளைப் பதிவுசெய்திருக்கிறது. உணர்வுபூர்வமான, நம்ப முடியாத, ஆன்மிகரீதியான பல விஷயங்களை இந்தப் புத்தகத்திலிருந்து கற்றுக் கொள்ளலாம். தவிர, சமூகம், ஆன்மிகம் மற்றும் அன்றாட வாழ்வியல் எல்லாவற்றைப் பற்றியும் அவருடைய எழுத்து அலசுகிறது.
மதுரை வீரன், மோகன் சுவாமியின் உடலுக்குள் இறையாக இறங்கியது பற்றி அவர் வர்ணித்திருப்பது அபாரமாக இருக்கிறது. கைலாயத்தைச் சென்றடைவதற்கு அவர் மேற்கொண்ட முயற்சிகளும் அற்புதமாக எழுதப்பட்டிருக்கிறது.
உடலளவிலும் மனதளவிலும் களைத்து நடக்க இயலாமல் நின்றபோது, தன் குருவை மனதில் இருத்தி, “எதற்காக என்னை இங்கே வரவழைத்திருக்கிறீர்கள்..? நீங்கள் இங்கு இருந்தால், உங்கள் இருப்பை எனக்குத் தெரிவியுங்கள்…” என்று கோரியிருக்கிறார்.
தெளிவான நீல வானத்தில் உடனடியாக ஒரு மேகம் தோன்றியது. கைலாயத்தின் மகுடத்துக்கு மேலே அந்த மேகம் ‘ஓம்’ என்ற எழுத்தாக வடிவெடுத்தது. சுவாமி ராமா, தான் அங்கிருப்பதை மோகன் சுவாமிக்கு அந்த மேகம் மூலம் உணர்த்தினார்.
சுவாமி ராமாவின் இறுதி நாட்களில், “பல சக்திகளைப் பெற்றிருக்கும் நீங்கள், உங்களையே குணப்படுத்திக்கொள்ளலாமே..? எதற்காக இந்த உடலுக்கு இவ்வளவு துன்பங்கள்..?” என்று மோகன்ஜி கேட்டிருக்கிறார்.
அதற்கு சுவாமி ராமா சொன்னார்: “இது, இந்த உடலைத் துறப்பதற்கு இயற்கை வகுத்திருக்கும் வழி. அது நோயாக உருவெடுத்திருக்கிறது. உடலைத் துறக்கும் நேரம் வந்துவிட்டது. குறுக்கில் நான் நிற்கக்கூடாது. தவம் செய்து நாம் பெறும் சித்திகளையும் சக்திகளையும் நம்முடைய சுயநலத்துக்காகப் பயன்படுத்தக்கூடாது. இதுதான் குரு பாரம்பர்யம். இதுதான் இமயத்தின் பாரம்பர்யம். நம் சித்தர்கள் இப்படித்தான் பரம்பரை பரம்பரையாக இதை நடைமுறைப்படுத்திச் சென்றிருக்கிறார்கள்.’’
சுவாமி ராமா, அதன் பின் சில அற்புதங்களை மோகன்ஜிக்கு நிகழ்த்திக் காட்டியிருக்கிறார். தன்னுடைய முக்கியமான சீடர்களின் முன்னிலையில் தன்னுடைய ஆறடி உயரத்தை மூன்றரை அடிக்குக் குறுக்கிக் காட்டியிருக்கிறார். முடி உதிர்ந்து, தோல் சுருங்கி எலும்பு மூட்டை போல் தோன்றியபோதும், அவர் முகத்தில் புன்னகை. மீண்டும் தன்னுடைய சகஜ நிலைக்கு அவர் திரும்பினார். இது போன்ற பல நம்ப முடியாத, ஆனால், நம்பக்கூடிய வியப்பூட்டும் நிகழ்வுகளை சுவாமி ராமா நிகழ்த்திக் காட்டியதை விளக்கியிருக்கிறார்.
200, 300 பக்கங்களுக்கு எழுதினாலும் இந்தப் புத்தகத்தைப் பற்றி என்னால் முழுமையாகப் பேசிவிட முடியாது. ‘நான் எழுதவில்லை. எல்லாம் சுவாமி ராமாவின் வழிகாட்டுதலே..!’ என்று மோகன் சுவாமி அடக்கத்துடன் சொல்கிறார்.
இந்தப் புத்தகத்தின் ஒவ்வொரு வார்த்தையிலும் உண்மையைத் தவிர, வேறு எதையும் நீங்கள் பார்க்க முடியாது. மோகன் சுவாமி, சமூகத்துக்கு அளிக்கும் பரிசு இந்தப் புத்தகம். இதை எழுதியதற்காக அவருக்கு மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். ஆன்மிகத்தில் ஆர்வம் உள்ளவர்கள், இந்தப் புத்தகத்தைப் படித்தால், ஆயிரம் மடங்கு அது பெருகும். கடவுள் நம்பிக்கையே இல்லாதவர் இந்தப் புத்தகத்தைப் படித்தால்கூட, அவருள் இது ஒரு மாற்றத்தைக் கொண்டுவரும்.
ஜெய் குருதேவ்..!
ஓம் சாந்தி..! ஓம் சாந்தி..! ஓம் சாந்தி..!
– ரஜினிகாந்த்