‘பப்பி’ என்றொரு நாய் படத்தில் வருகிறது. ‘அதைப் பற்றிய கதையா இந்தப்படத்தில் சொல்லப்படுகிறது..?’ என்றால் ‘அது இல்லை..!’. நாயகன் வருணின் ‘பப்பி லவ்’ பற்றி சொல்ல வருகிற கல்லூரி பருவத்துப் படம்.
எப்போதுமே பாலியல் நினைப்பில் வரும் வருண் போலவேதான் எல்லாரும் தங்கள் மாணவப்பருவத்தில் இருக்கிறார்களா..? என்று கேட்கப்படாது. இப்படி இருக்கும் இளைஞர்களுக்கான படம் என்று கொள்ளலாம்.
கல்லூரி மாணவராக இருக்கும் வருணுக்கு கூடா நட்பால் ‘பால் ஈர்ப்பு’ பற்றிய சரியான புரிதல் இல்லாமல் போய் ஒரு ஜோடிக்கு அலைகிறார். அப்படி ஒரு பெண்ணாக நாயகி ‘சம்யுக்தா ஹெக்டே’ அவர்கள் வீட்டு மாடியிலேயே குடி வர… இருவரும் சேர்ந்து அடிக்கும் லூட்டிகள் எல்லை மீறி… ஒரு கட்டத்தில் சம்யுக்தா கர்ப்பம் தரிக்கும் நிலைக்குப் போகிறது. அதை எப்படி இருவரும் எதிர்கொண்டார்கள் என்பதுதான் படம்.
மெச்சூரிட்டி இல்லாமல் கொஞ்சம் ‘அச்சு பிச்சு’வாக இருக்கும் வேடம் வருணுக்கு முற்றாகப் பொருந்தியிருக்கிறது. அவரைப் போன்றவர்கள் ஹீரோவாக அறிமுகமானால் கவனிக்க ஏதுவான கதையை ‘மொரட்டு சிங்கிள்’ என்கிற ‘நட்டி தேவ்’ தேர்ந்தெடுத்து அவரை இயக்கியிருப்பது புரிகிறது.
ஆரம்பகால பாக்யராஜ் போல தனக்கு ஏற்ற கதைகளைத் தேர்ந்தெடுத்து வருண் நடித்தால் பிறகு அவர் நினைத்த இடத்துக்கு எளிதாக வர முடியும். நல்ல உயரமும், உடற்கட்டும் அவருக்கு ப்ளஸ் பாய்ண்ட்ஸ்… கடைசிக் காட்சியில் ஒரே ஷாட்டில் அத்தனை எடை கொண்ட நாயைத் தூக்கிக் கொண்டு ஓடுகிறாரே… (அ)பாரம்..!
அவருக்கேற்ற ஜோடியாக சம்யுக்தா அளவாகவும், அழகாகவும் பொருந்தியிருக்கிறார். ஆரம்பத்தில் வருணுடன் கூடி கும்மாளம் அடிக்கும்போது ரசிக்க வைக்கும் சம்யுக்தா, தான் கர்ப்பம் அடைந்திருப்பதாக நம்பும் கட்டத்தில் தேவையான அளவு நடிக்கவும் செய்திருக்கிறார்.
அதிலும் வருண் பிரச்சினைக்காக அஞ்சுவது கண்டு அவன் தொடர்பைத் துண்டிக்க முடிவெடுக்கும்போதும், வீட்டுக்குத் தெரியாமல் கர்ப்பம் அடைந்த பெண்ணின் தாய் மருத்துவமனையில் வைத்து தன் மகளுக்கு அட்வைஸ் செய்வதைக் கண்ணுறும்போதும் நடிப்பை நன்றாகவே வெளிப்படுத்தியிருக்கிறார்.
வருணின் சீனியராக வரும் யோகிபாபு, வருணின் எல்லாச் செயல்களிலும் துணை புரிகிறார். தங்கள் ரகசியம் யோகிபாபுவுக்குத் தெரிந்து மாத்திரை போட்டுக்கொள்ள அட்வைஸ் செய்ய அவரைப் பார்த்து “தூ…” என்று சம்யுக்தா துப்ப, “நீ மாத்திரை போடாம விட்டீன்னா இந்த ஊரே உன்னைப் பாத்து இப்படித்தான் துப்பும்…” என்று அலட்டிக்கொள்ளாமல் பாபு சொல்லுமிடத்தில் தியேட்டர் கலகலக்கிறது.
மற்றபடி மாரிமுத்து, நித்யா, வெங்கடேஷ் என்று தேவைக்கேற்ற பாத்திரங்களில் தேவைக்கேற்றவர்கள் பொருந்தி தேவையை நிறைவேற்றியிருக்கிறார்கள்.
முக்கியமாக படத்தை இயக்கியிருக்கும் மொரட்டு சிங்கிளும் வருணின் நண்பராக வந்து ரசிக்க வைக்கிறார். அவர் நகைச்சுவை நடிகராகத் தொடர்ந்தால் யோகிபாபுவுக்கு ‘டஃப் ஃபைட்’ கொடுக்கலாம்.
‘தீபக்குமார் பாடி’யின் ஒளிப்பதிவில் காட்சிகள் கண்களைப் பறிக்கின்றன. தரண் குமார் இசையில் அனிருத், கௌதம் மேனன் பாடியிருப்பது அவரது இசைக்கு பலம் சேர்த்திருக்கிறது.
இந்தப்படத்தில் ‘எதற்காக பப்பி..?’ என்ற கேள்விக்கு பதிலாக அந்தப் பப்பியும் கர்ப்பமடைந்து கடைசியில் படும் அல்லல்களைக் கண்டு வருணுக்கு சம்யுக்தா மீது அனுதாபம் வருவதான திரைக்கதை நம்ப வைக்கிறது. ஆனால், நாய்க்கு வயிற்றுக்குள் குடல் சுற்றிக்கொண்டதாக டாக்டர் சொல்வதெல்லாம் ‘கப்ஸா’.
பப்பி – மொரட்டு சிங்கிள்களுக்கு அவர்கள் மொழியிலேயே ஒரு பாடம்..!