தி.மு.க. ஆட்சிப்பொறுப்பேற்ற நிலையில் சட்டசபையில் முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் முழு உருவப்படத்தை திறப்பதற்கான ஏற்பாடுகள் தயாராகி வருகின்றன.
சட்டசபையில் கருணாநிதியின் படத்தை ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் நேரில் வந்து திறந்து வைக்க வேண்டும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த 19-ந்தேதி டெல்லி சென்று நேரில் அழைப்பு விடுத்திருந்தார். அந்த அழைப்பை ஜனாதிபதி ஏற்று விழாவுக்கு வருவதாக உறுதி அளித்தார்.
வருகிற 3-ந்தேதி ஊட்டி வெலிங்டனில் உள்ள ராணுவ பயிற்சி முகாமில் நடைபெறும் நிகழ்ச்சியில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் வருவதற்கான நிகழ்ச்சி நிரல் ஏற்கனவே திட்டமிடப்பட்டிருந்தது.
தற்போது கருணாநிதியின் உருவப்படத்தை திறந்து வைக்க வருமாறு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அவருக்கு அழைப்பு விடுத்துள்ளதால் ஆகஸ்டு முதல் வாரத்தில் அதையொட்டிய தேதியில் ஜனாதிபதி சென்னை வந்து நிகழ்ச்சியில் பங்கேற்பார் என தகவல்கள் வெளியாகி வருகிறது.
இதற்கிடையே சபாநாயகர் அப்பாவு நேற்று சட்டசபை செயலக அதிகாரிகள் மற்றும் அரசு உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
மறைந்த தலைவர்களை பெருமைப்படுத்தும் வகையில் சட்டசபை கூட்டரங்கில் இதுவரை திருவள்ளுவர், மகாத்மா காந்தி, ராஜாஜி, பெரியார், காமராஜர், அண்ணா, காயிதே மில்லத், அம்பேத்கர், முத்துராமலிங்க தேவர், எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா, ராமசாமி படையாச்சியார், வ.உ.சி.சிதம்பரனார், ப.சுப்பராயன், ஓமந்தூரார் ராமசாமி ரெட்டியார் ஆகிய 15 பேர் படங்கள் வைக்கப்பட்டுள்ளன.