பவுடர் என்பது முகத்தின் மேல் ஒப்பனைக்காக ஏற்படுத்திக் கொள்ளும் பூச்சு. அதுவே நிஜ முகம் அல்ல. ஆனால் இயக்குனர் விஜய் ஸ்ரீஜி இந்த படத்தில் சொல்லி இருக்கும் விஷயம் ஒருவரது முகமே அவர்களது அகத்துக்கான பவுடர் பூச்சு என்பதுதான்.
உள்ளொன்று நினைக்க புறமொன்று செய்யும் வேடதாரி மனிதர்களை தோலுரித்துக் காட்டும் படம் இது.
ஒரே இரவுக்குள் நடக்கும் ஒன்றுக்கு மேற்பட்ட கதைகள் ஒன்றோடு ஒன்று எப்படி பின்னிப் பிணைந்து கிடைக்கின்றன என்பதுதான் இயக்குனர் மேற்கொண்டிருக்கும் சவால்.
ஒரு கதை இழையில், மறுநாள் வேட்பு மனு தாக்கல் செய்ய இருக்கும் எம்எல்ஏ-வை ஒரு கும்பல் கொலை செய்கிறது. கொலையுண்ட உடலை சிறு சிறு துண்டுகளாகி டீ விற்பனை செய்யும் கேனில் அடைத்து அதனை வெவ்வேறு பகுதிகளுக்குள் கடத்தி அழிக்க நினைக்கிறார்கள்.
இன்னொரு பக்கம் சினிமா மேக்கப் மேனாக இருக்கும் (இயக்குனர்) விஜய்ஸ்ரீஜி தன் மகனின் கல்விக்கு பணம் கட்ட வழியில்லாமல் பணத்திற்காக கொலைப் பழிக்கு ஆளாகி தலைமறைவாகிறார்.
அடுத்த பகுதியில் போலீஸ் கமிஷனர் வீட்டில் ஒரு நபர் தொலைந்து போக அதைப்பற்றி விசாரிக்க விடுமுறையில் இருக்கும் இன்ஸ்பெக்டர் ராகவனை வரவழைக்கிறார்.
நான்காவது இழையில் தன் மகள் அனித்ராவை ஏமாற்றி கர்ப்பமாக்கிய அவள் காதலனை கொலை செய்கிறார் தந்தை வையாபுரி.
ஐந்தாவதாக, மறுநாள் காலை திருமணம் நடைபெற இருக்கும் நிலையில், தன்னை ஆபாசமாக படம் எடுத்து மிரட்டும் நபரை சந்திக்க செல்கிறார் வித்யா பிரதீப்.
இவை அத்தனைக்கும் இடையில் இரவில் வீடுகளில் திருடும் கும்பல் ஒன்று, காதலர்கள் ரொமான்ஸ் செய்யும் வீட்டில் புகுந்து கொள்கிறது. மேற்படி தலைமறைவாக இருக்கும் விஜய் ஶ்ரீஜி, வித்யா பிரதீப் வீட்டில் தஞ்சம் அடைகிறார்.
இத்தனை இழைகளையும் ஒரே கதைக்குள் அடைத்து குழப்பம் இல்லாமல் கதை சொல்ல முயன்றிருக்கிறார் இயக்குனர். இதெல்லாம் போதாது என்று மனிதப் பிணங்களை அறுத்து மனித மாமிசம் விற்பனை செய்யும் கும்பல் ஒன்றும் ஊடாடிக் கொண்டிருக்கிறது.
இதில் நாயகன் இன்ஸ்பெக்டர் ராகவனாக சினிமா உலகம் அறிந்த பி.ஆர்.ஓ நிகில் முருகன் நடித்திருக்கிறார். மனைவியின் பிரசவத்துக்காக விடுமுறை போட்டவரை குழந்தையைப் கூட பார்க்க விடாமல் உடனடியாக பணிக்கு வரச் சொல்கிறார் போலீஸ் கமிஷனர்.
அந்த இரவுக்குள் அத்தனை சம்பவங்களும் நடந்தேற எல்லா குற்றங்களின் மீதும் வேட்டையாடி விளையாடி ஒரு கை பார்க்கிறார் ராகவன்.
முதல் படம் என்பது அவரது முகத்தைப் பார்த்தால் மட்டுமே தெரியும் – ஏனென்றால் ரசிகர்களுக்கு அதிகம் அறிமுகம் இல்லாத முகமாக இருப்பதால். ஆனால் நடிப்பில் பல படங்களில் நடித்த அனுபவசாலி நடிகரை போல் அனாயசமாக நடித்திருக்கிறார் நிகில்.
நடை , உடை , பாவனை என்று காவல் அதிகாரிக்கு கச்சிதமாக நியாயம் சேர்த்திருக்கிறார் அவர். கணீர் குரல் அவருக்கு ஒரு பிளஸ் பாயிண்ட்.
இவ்வளவு அனுபவமும், திறமையும் இருந்தும் இன்னும் நல்ல ஒரு படத்தில் இவர் அறிமுகமாகி இருக்கலாமே என்கிற ஆதங்கம் எழாமல் இல்லை.
எம்ஜிஆர் படத்துக்கு பிறகு ஒரு இன்ஸ்பெக்டர் போலீஸ் கமிஷனருக்கு அறிவுரை அல்லது ஆலோசனை சொல்ல கமிஷனரும் அதே கேட்டுக் கொள்வது இந்த படத்தில்தான் நடந்தேறி இருக்கிறது. ஆனாலும் அந்த போலீஸ் கமிஷனர் பாத்திரம் அநியாயத்துக்கு டம்மி..!
ஒரு தந்தையாக சீரியஸ் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார் வையாபுரி. ஒரு பெண்ணுடன் பழகி கர்ப்பமாகி விட்டு இன்னொரு பெண்ணை திருமணம் செய்பவரை கொலை செய்வதென்றால் இந்த நாட்டில் எத்தனை பேரை கொலை செய்ய வேண்டி வரும்..? தான் செய்த கொலையை மறைக்க இவர் செய்யும் வேலைகள் எல்லாம் நம்பகமே இல்லாதவை.
மணப்பெண்ணாக வரும் வித்யா பிரதீப் முதல் நாள் இரவில் தங்கள் வீட்டுக்கு போக, இரவெல்லாம் அவர் வரவில்லை என்பதை அவரது வீட்டில் அம்மாவைத் தவிர யாருமே கண்டு கொள்ளாமல் இருப்பது ஆச்சரியம் தான்.
கமல் ஏற்று நடித்த ராகவன் பாத்திரத்தை நிகிலுக்கு கொடுத்துவிட்டு ரஜினி ஏற்று நடித்த பரட்டை பாத்திரத்தை தனதாக்கிக் கொண்டிருக்கிறார் விஜய் ஸ்ரீஜி. மனைவியிடம் அவ்வப்போது வாங்கி கட்டிக் கொள்ளும் அவரது கேரக்டரைப் பார்த்தால் பரிதாபமாக இருக்கிறது. அதற்கு ஏற்றார்போல் ஹஸ்கி வாய்ஸில் பேசிக்கொண்டு வருகிறார் அவர்.
அனித்ரா நாயர், சாந்தினி வன்மையான படத்தை மென்மையாக்குவதற்கு உதவி இருக்கிறார்கள். ஆதவன், மொட்டை ராஜேந்திரன் காமெடி எடுபடவில்லை.
படத்தில் நிகிலைத் தவிர நடிகர்களாக தலை காட்டி இருக்கும் பத்திரிகையாளர்கள் ஒற்றன் துரை, சதீஷ் முத்து, ராயல் பிரபாகர் ஆகியோருக்கு வாழ்த்துகள். அவர்களில் போலீஸ் கம்பீரத்துக்குப் பொருத்தமாகத் தெரிகிறார் ஒற்றன் துரை.
லியாண்டர் லீ மார்ட்டி இசையில் பாடல்களும் பின்னணி இசையும் ஓகே. ராஜா பாண்டி மற்றும் பிரஹத் ஒளிப்பதிவில் இன்னும் கவனம் செலுத்தி இருக்கலாம். ரொம்பவும் ‘டல் ‘ அடிக்கிறது.
படம் முழுவதும் கொலைகள் நிகழ்வதும், அந்த உடல்களை அப்புறப் படுத்துவதற்கு அவர்கள் மேற்கொள்ளும் வழிகளும் லாஜிக்கே இல்லாத மலிவான கற்பனை கொண்ட உத்திகளாக இருக்கின்றன.
மனித மாமிசம் விற்பதெல்லாம் கற்பனைக்கு எட்டாத ‘ உவ்வே…!’ ரகம். அதை வைத்துதான் இதன் இரண்டாம் பாகம் நிகழவிருப்பதாக நமக்கு கோடி காட்டி முடிகிறது படம்.
அப்படி எண்ணம் இருந்தால் அதை இப்போதே மறந்து விடலாம் இயக்குனர்.
பவுடர் – பால் பவுடர்..!