April 25, 2024
  • April 25, 2024
Breaking News
November 28, 2022

கெத்துல திரைப்பட விமர்சனம்

By 0 380 Views

திருநங்கைகளின் வாழ்க்கையை மையப்படுத்திய கதைக்களம் அரிதாகவே இங்கே நிகழ்ந்திருக்கிறது.

இயல்பான கதை ஓட்டத்தில் சில… கமர்சியல் கதையோட்டத்தில் சில… இதில் அனேக திருப்பங்கள் நிறைந்த கமர்ஷியல் திரைக்கதையில் உருவாகியிருக்கிறது இந்தப் படம்.

கதை இதுதான்…

ஒரு அமைச்சரின் தம்பி என்ற கெத்தோடு இளைமைத் திமிருடன் சுற்றித்திரியும் சலீம் பாண்டாவுக்கு பெண்களைக் கடத்தி பாலியல் பலாத்காரத்துக்கு பலியாக்குவது வழக்கமாக இருக்க, மதுபானக்கூடத்தில் நடனமாடும் ரிரீனுவையும் அதே நோக்கத்தில் அணுகுகிறார்.

ஆனால் அவர் செய்த புண்ணியம், அவரை அந்த நேரத்தில் அங்கிருந்த நாயகன் ஸ்ரீஜித் காப்பாற்றுகிறார்.

அதனால் சலீம் பாண்டாவுக்கு ஸ்ரீஜித் மீது கொலை வெறி வர, அதே நேரம் ஆபத்தான சூழலிலிருந்து தன்னைக் காப்பாற்றிய ஸ்ரீஜித் மீது ரிரீனுவுக்கு காதல் உருவாகிறது.

ஆனால் கைக்கு கிடைத்தது வாய்க்கு கிடைக்காத நிலையாக ஸ்ரீஜித் அந்தக் காதலை ஏற்க முடியாத நிலையில் இருக்கிறார். 

வலிய வந்த ஶ்ரீஜித் காதலை ஏற்க மறுக்காத காரணம் என்ன? ஸ்ரீஜித்தை பழிவாங்கத் துடிக்கிற சலீம் பாண்டா என்ன வில்லத்தனம் செய்தார் – அதை எப்படி ஶ்ரீஜித் எதிர்கொண்டார் என்பதெல்லாம் மீதிக்கதை.

அதை பரபர திருப்பங்களோடு பறக்கும் திரைக்கதையில் சொல்லி இருக்கிறார் இயக்குனர் வி.ஆர்.ஆர். அதில் ஸ்ரீஜித் யார் என்ற முன்கதை ஹைலைட்டாக இருக்கிறது.

ஆக்ஷன் காட்சிகளில் சிறப்பாக சண்டையிட முடியும் என்கிற ஹீரோக்கள் மட்டுமே ஏற்கக்கூடிய கதை இது. அதில் நாயகன் ஸ்ரீஜித் வெற்றி பெற்று இருக்கிறார். இருவேறு தோற்றங்களில் வருகிற ஸ்ரீஜித்துக்கு உணர்வுகளை வெளிப்படுத்துவதும் வாய்த்து இருக்கிறது. 

ரிரீனு ஆரம்பக் காட்சிகளில் கவர்ச்சி நடிகை போல் அறிமுகமானாலும் பின்னர் நாயகியாக ஒத்துக் கொள்ள வைக்கிறார். கவர்ச்சியிலும் அதே நேரம், காதலனுக்கு நேர்ந்த பிரச்சனைகள் தெரிந்து மனம் கலங்கும்போது தனது நடிப்பையும் நிறைவாகத் தந்திருக்கிறார்.

வில்லனாக வரும் சலீம் பாண்டாவின் மிரட்டலான நடிப்பு கதைக்கு பெரும் பலம். அமைச்சராக சாயாஜி ஷிண்டே, போலீஸ் கமிஷனராக ரவிகாலே என மற்ற கதாபாத்திரங்களில் வருகிறவர்களின் நடிப்பும் கவனிக்க வைக்கிறது!

படத்தில் குறிப்பாக திருநங்கைகளாக நடித்திருப்பவர்களின் பங்களிப்பை குறிப்பிட்டுப் பாராட்டலாம். எகிறி அடிக்கும் ஆக்ஷனில் அவர்களும் அதகளப்படுத்தியிருக்கிறார்கள்

திரைக்கதையில் இன்னும் கொஞ்சம் நம்பகத்தன்மையை கூட்டி இருந்தால் இந்த பரபரப்பான கதை இன்னும் ரசிக்க வைத்திருக்கும்.

ஷீவா வர்ஷினியின் இசையில் பாடல்களும், பின்னணி இசையும் நிறைவாக இருக்கிறது. கே.ஷஷிதர் ஒளிப்பதிவு சிறப்பு.

ஃபாரின் சரக்கையே சாப்பிட்டு பழக்கப்பட்டவர்களுக்கு திடீரென்று நாட்டு சரக்கு சாப்பிட்டால் எப்படி இருக்குமோ அந்த அனுபவம்.

கெத்துல – சரியான தலைப்புதாம்ல..!