பொன்னியின் செல்வன் படத்தின் முதல் பகுதி எந்த இடத்தில் முடிந்ததோ அங்கிருந்துதான் இந்த இரண்டாம் பகுதி தொடங்குகிறது. என்றாலும் இதற்கு முன்னே ஆதித்ய கரிகாலன் – நந்தினியின் இள வயது காதல் காட்சிகளும் இடம்பெறுகின்றன.
பதின் பருவ ஆதித்ய கரிகாலன் அவரைவிட இளைய நந்தினி அங்கங்கே சந்தித்து காதல் வயப்பட, தந்தையின் கட்டளைப்படி போருக்குச் சென்று வந்த நிலையில் நந்தினியை கைப்பிடிக்க எண்ணி அரண்மனைக்கு அழைத்து வருகிறார் ஆதித்ய கரிகாலன்.
அரண்மனையில் இருக்கும் குந்தவை உட்பட எல்லோருமே அந்தக் காட்சியை மிரட்சியுடன் பார்க்க, அதன் எதிரொலியாக அன்று இரவே ஆதித்ய கரிகாலனுக்கு தெரியாமல் நந்தினி சக்கரவர்த்தி கட்டளைப்படி கடத்தப்படுகிறார்.
இப்படியாக ஆதித்ய கரிகாலனின் காதல் கருகிப் போக அதே நந்தினி இப்போது பெரிய பழவேட்டரையரின் மனைவியாக இருக்கிறார்.
இப்போது முதல் பாகம் தொடங்கிய இடமான கடலில் வீசிய சூறாவளியில் கப்பல் சிதைந்து பொன்னியின் செல்வன் என்கிற அருண்மொழி வர்மன் கடலுக்குள் மூழ்கிய செய்தி அவர் இறந்து விட்டதாகவே நம்ப வைக்கிறது.
ஆனால் அதில் காட்டப்பட்டது போலவே நந்தினியை ஒத்த உருவம் கொண்ட ஒரு வயதான பெண்மணி பொன்னியின் செல்வனைக் காப்பாற்ற, நோய்வாய்ப்பட்ட அவரை அழைத்துக் கொண்டு வருகிறான் வந்தியத்தேவன்.
பொன்னியின் செல்வனின் இறப்பு நம்பகமானதாக இல்லாத நிலையில் அவரைத் தேடி அவரைக் கொல்ல முடிவெடுத்த வீரபாண்டியனின் ஆபத்துதவிகள் இப்போது நந்தினியுடன் சதி ஆலோசனை செய்து சக்கரவர்த்தியையும், ஆதித்ய கரிகாலனையும் உயிரோடு இருந்தால் அருண் மொழியையும் ஒரே நாளில் தீர்த்துக்கட்ட முடிவு எடுக்கிறார்கள்.
அது முடிந்ததா என்பதுதான் இந்த மீதிப் படத்தின் கதை.
பொன்னியின் செல்வன் என்று தலைப்பிடப்பட்டாலும் இந்த பாகத்தில் ஆதித்ய கரிகாலனின் காதல் கதையே அதிக அளவில் இடம் பெற்றிருக்கிறது.
அந்தப் பாத்திரத்தை ஏற்றிருக்கும் விக்ரம் மிகச் சிறப்பாக நடித்திருக்கிறார் என்றால் மிகை ஆகாது. தன் தம்பி அருண்மொழிவர்மன் இறந்த செய்தி கேட்டு பதை பதைத்து தஞ்சை வரும் பதட்டத்தையும், அவன் இறக்கவில்லை என்ற செய்தி அறிந்து கொள்ளும் உவகை இன்னொரு பக்கமும், பல வருடங்கள் கழித்துத் தன் கடந்த காலக் காதலி நந்தினியை சந்திக்கப் போகும் ஆவல் மற்றொரு புறமும் ஆக பலமுகம் காட்டியிருக்கிறார் விக்ரம்.
நந்தினியுடன் பேசும் கடைசிக் காட்சியில் அந்தக் கண்களில் காதலும் சோகமும் கொப்பளிக்க விக்ரம் காட்டும் உணர்ச்சிகள் உக்கிரம். குறிப்பாக அவர் பேசும் உரையாடல்களில் இருக்கும் உச்சரிப்பு சுத்தம் அபாரம்.
சின்னதாக ஒரு சிவாஜி கணேசனைப் பார்த்த பிரமை, விக்ரமை பார்க்கும்போது நமக்கு ஏற்படுவது நிஜம்.
அவருக்கு இணையாக அத்தனை உணர்ச்சிகளையும் கண்களில் தேக்கி வைத்து நடித்திருக்கிறார் ஐஸ்வர்யா பச்சன். என்னதான் விக்ரமைக் கொல்ல திட்டம் தீட்டி இருந்தாலும் அதைச் செய்ய முடியாமல் தவிக்கும் பொழுதிலும், காரியம் கைமீறிப் போன நிலையில் தவித்து, உருகித் தன் பாத்திரத்துக்கு நியாயம் சேர்த்து விடுகிறார் ஐஸ்.
அந்த அளவுக்கு நீளமாக இல்லை என்றாலும் வந்திய தேவன் கார்த்தியும், குந்தவை த்ரிஷாவும் சந்தித்துக் கொள்ளும் குறுந்தீவு காதல் காட்சியும் ரசிக்க வைக்கிறது.
கார்த்தியின் கண்கள் கட்டப்பட்டிருக்க, அவர் கழுத்தில் வாளை வைத்து திரிஷா பேசுவதும் வந்திருப்பது யார் என்று தெரியாமல் தொடக்கத்தில் திணறினாலும் பேசப் பேச அது குந்தவைதான் என்று புரிந்து கொண்டு, கண் கட்டுக்களை அவிழ்க்க முயல்வதும், அதை அவிழ்க்க விடாமல் திரிஷா தன் காதலை தொடர்வதும், திரிஷா நீட்டிய வாளைப் பிடித்துக் கொண்டே அவரின் தோள் வரை தொட்டுப் பேசும் கார்த்தியின் நளினமுமாக… அவர்களின் காதலில் ஒரு கவிதையின் ரம்மியம்.
டைட்டில் ரோல் கிடைத்ததும், அந்த ரோலுக்கு தமிழில் மிகப் பொருத்தமான நடிகராகவும் இருப்பது ஒன்றே ஜெயம் ரவிக்கு கிடைத்தப் பெருமை. விக்ரமும் கார்த்தியும் மிச்சம் வைத்த இடத்தில் மட்டுமே இவரின் ராஜ்ஜியம் நடக்கிறது என்றாலும் கிளைமாக்ஸுக்கு ஒரு டிவிஸ்ட் கொடுத்து, தொடர்ச்சியாக அவரே சோழ ராஜ்யத்தின் மன்னனாக ஆவது வரை ஜெயம் ரவி சரித்திரப் புகழ் பெறுகிறார்.
அவருக்கே இட ஒதுக்கீடு போதாத நிலையில் அவரையே நினைத்து உருகி கொண்டிருக்கும் ஷோபிதாவின் காதலுக்கும் இட ஒதுக்கீடு சொச்ச சதவீதம் மட்டுமே.
அதைப் போன்றே ஓடக்காரி பூங்குழலியாக வரும் ஐஸ்வர்யா லட்சுமிக்கும் ஒதுக்கீடு இதில் குறைவுதான்.
கடந்த பாகத்தில் வில்லன் போலத் தோன்றிய பெரிய பழவேட்டரையர் இந்த பாகத்தில் சோழ நாட்டுக்கு குந்தகம் வந்துவிடுமோ என்று நேர்மறையாக சிந்திப்பது நன்று. அந்தப் பாத்திரத்தை ஏற்றிருக்கும் சரத்குமாரும் அருண்மொழிவர்மன் இறந்த செய்தி கேட்டு அதிர்வதும், ஆதித்ய கரிகாலன் முடிவுக்கு தானே பொறுப்பேற்பதாக அறம் காக்கும் நிலையிலும் மெச்ச வைக்கிறார்.
சின்னவர் பார்த்திபன், பெரிய வேளார் பிரபு, பல்லவ மன்னன் பார்த்திபனாக வரும் விக்ரம் பிரபு, ராஷ்டிர கூட மன்னர் பாபு ஆண்டனி, ஆபத்துதவிகளான கிஷோர், ரியாஸ்கான் உள்ளிட்டோரும், இந்த வரலாற்று பதிவான படத்தில் இடம்பெற்ற சாத்தியத்தில் மகிழலாம்.
மதுராந்தகராக வரும் ரஹ்மானுக்கு முதல் பாதியை விட இந்தப் பாதியில் பாத்திரத்தின் கனம் கொஞ்சம் கூடி இருக்கிறது. அவரும் நிறைவாகச் செய்து நினைத்ததை சாதிக்கிறார்.
படம் முழுதும் கண்ணுக்குத் தெரியாமல் ஆனால் காட்சிக்குக் காட்சி ரசிக்க வைக்கும் ஒரு ஹீரோ என்றால் அது ஒளிப்பதிவாளர் ரவிவர்மன் தான். கோட்டை, கானகம், கடல், ஆறு என்று ஐந்திணை நிலப்பரப்பையும் தன் கேமராவுக்குள் அழைத்துக் கட்டி எடுத்து வர பெரும் முயற்சி எடுத்திருக்கிறார்.
ஏ.ஆர்.ரஹ்மான் கடந்த பாகத்தில் பாடல்களால் நம்மை கட்டி வைத்தது போல இந்த பாகத்தில் பின்னணி இசையால் கட்டிப் போட்டிருக்கிறார். இதிலும் ‘அக நக’ மற்றும் ‘யாதுமாகி நின்றனை…’ பாடல்கள் மிகச் சிறப்பாக இசைக்கப்பட்டிருக்கின்றன.
ஆனால் ‘யாதுமாகி நின்றனை’ பாடலை ஏ.ஆர். ரஹ்மான் பாடாமல் தொழில் முறை பாடகர் ஒருவர் பாடியிருந்தால் இன்னும் ரசிக்க வைத்திருக்கும்.
ஆண்டாண்டு காலமாகத் தமிழ் சினிமாவின் கனவாக மட்டுமே இருந்து வந்த இந்த பொன்னியின் செல்வன் என்ற சரித்திர புனைவு புதினத்தைப் பெருந்திரையில் கொண்டு வந்து அளப்பரிய சாதனை செய்து இருக்கிறார் இயக்குனர் மணிரத்தினம்.
புதினம் வாசித்தவர்கள் பல குறைகளை இந்தப் படத்தில் காணக்கூடும். ஆனால் ஒரு நீண்ட புதினத்தை ஆறு மணி நேரத்துக்குள் காட்சி காவியமாகச் சுருக்கும்போது என்னவெல்லாம் முடியுமோ அதை எல்லாம் சாத்தியமாக்கி இருக்கும் மணிரத்தினத்தின் சாதனையை பாராட்டித்தான் ஆக வேண்டும்.
இந்த முயற்சிக்குக் கை கொடுத்த லைக்கா ப்ரொடக்ஷன் தயாரிப்பாளர் சுபாஸ்கரன் இந்த காரணத்துக்காகவே தமிழ் சினிமாவின் சரித்திரத்தில் தன் பெயரையும் பொரித்து விட்டார்.
பொன்னியின் செல்வன் – எட்டுத்திக்கும் வெற்றி..!