November 22, 2024
  • November 22, 2024
Breaking News
May 29, 2020

பொன்மகள் வந்தாள் திரை விமர்சனம்

By 0 746 Views
குழந்தைகளுக்கு மருத்துவம் பார்க்கும் டாக்டராவதற்குக் கொஞ்சமாகப் படித்திருந்தால் போதும் என்று நினைக்கும் பொதுப்புத்தியினாலேயே  பெரும்பாலும் குழந்தைகளுக்கு எதிரான வன்முறைகளுக்கும் சமுதாயம் முக்கியத்துவம் தருவதில்லை. அதிலும் பெண் குழந்தைகளுக்கு எதிராக நடக்கும் பாலியல் குற்றங்களுக்கு சரியான நீதி கிடைப்பதில் இந்த வளர்ந்த சமுதாயம், இன்னும் தளர்ந்த நிலையிலேயே இருக்கிறது.
 
அது ஒரு பக்கம் என்றால் இன்னொரு பக்கம் எல்லா தீர்ப்புகளுமே உண்மையின் அடிப்படையில் அமையாமல், சந்தர்ப்ப சாட்சியங்களின் அடிப்படையிலேயே அமைவதால் உண்மையான நீதி மறுக்கப்படுவதும், அதுவே சமுதாயத்தில் உண்மை என்று நம்பப்படுவதும் கூட காலம் காலமாக நடந்து வரும் கொடுமை. இந்த இரண்டையும் முடிச்சுப் போட்டு ஒரு அருமையான படத்தைத் தந்திருக்கிறார் இயக்குநர் கே.ஜே.பிரடரிக்.
 
அதே நேரம் இப்படி சமுதாயத்துக்கு விழிப்புணர்வு தரும் வேடங்களில் மட்டுமே நடிக்க வேண்டும் என்ற கொள்கையுடன் நடித்து வரும் ஜோதிகாவை மட்டுமல்லாமல் இப்படிப்பட்ட படங்களைத் தனது நிறுவனத்தில் தயாரித்து வரும் சூர்யாவையும் பாராட்டியே ஆக வேண்டும். அத்துடன் இந்தப்படம் ஓடிடி எனப்படும் தொலைக்காட்சி வழியாகவே வெளியிடப்பட்டதால் முக்கியத்துவம் பெறுகிறது.  
 
2004ம் ஆண்டு ஊட்டிக்கு அருகில் லவ்டேல் என்ற இடத்தில் தொடங்கும் கதையில் சிறுமிகள் கடத்தப்பட்டு கொலை செய்யப்படுகிறார்கள். இதற்கு காரணம் ஜோதி என்ற வட இந்தியப்பெண் என்று கண்டுபிடிக்கப்பட்டு, தப்பிச்சென்ற அவரை திருப்பூரில் வைத்து போலீஸ் என்கவுண்டர் செய்வதுடன் கேஸ் முடிகிறது. அதற்கு முன் ஜோதி குழந்தைக் கடத்தலைத் தடுத்த இரண்டு வாலிபர்களை சுட்டுக் கொன்றதாக ஒரு ஒளிப்படம் மூலம் நம்பப்படுகிறது.
 
முடிந்து போன இந்தக் கேஸை 16 வருடங்கள் கழித்து தன் முதல் கேஸாக மீண்டும் தோண்டி எடுத்து வாதாடுகிறார் ஜோதிகா, அவரது அப்பா கே.பாக்யராஜ் உதவியுடன்.
 
இந்த வழக்கில் ஜோதி சுட்டுக்கொன்ற வாலிபர்களில் கோவையில் மிகப்பெரும் தொழிலதிபராக இருக்கும் தியாகராஜனின் மகனும் இருப்பதால் ஜோதிகா தொடுத்த வழக்கில் அவருக்கு எதிராகப் புகழ்பெற்ற வழக்கறிஞர் பார்த்திபனைக் களம் இறக்குகிறார் தியாகராஜன். வழக்கின் தன்மையே படம் முழுதும் பரபரப்பாகச் சொல்லப்படுகிறது. இடை இடையே என்ன நடந்தது என்ற தவிப்பான உண்மையும்.
 
படத்தில் வழக்கறிஞர் வெண்பா என்ற கதாபாத்திரத்தில் வரும் ஜோதிகாதான் படத்தை முழுவதையும் தாங்குகிறார். ஒரு சைக்கோ கொலைகாரிக்கு ஆதரவாக வாதாடும் அவரைப் பொதுமக்கள் புழுதி வாரித் தூற்றும்போது அதை எதிர்கொள்ளும் அவரது நடிப்பு அலாதியானது. தன் மீது செருப்பை வீசிய பெண்ணிடம் அதே செருப்பைக் கொண்டு தரும் பாந்தமும் அளப்பரியது. கடைசிக் காட்சிகளில் பெண் குழந்தைகளுக்கு எதிராக ஒவ்வொரு குடும்பத்திலும் நடக்கும் வன்முறையை அவர் சொல்லும்போது படத்தில் வரும் பாத்திரங்கள் மட்டுமல்ல… படம் பார்க்கும் நம் கண்களிலும் கண்ணீர் துளிர்ப்பதைக் கட்டுப்படுத்த முடியவில்லை.
 
வட இந்தியப்பெண் ஜோதியைக் காட்டும் இடத்தில் அதிலும் ஜோதிகாவே வருவது, இரட்டை வெடி. அதில் தன் பெண் குழந்தை பாலியல் கொடுமைக்கு ஆளானதைக் கண்ணெதிரே பார்த்துத் துடிதுடிக்கும் இடம் கல் மனத்தையும் கலங்க வைக்கும்.
 
அவரது அப்பாவாக பெட்டிஷன் பெத்துராஜ் என்ற பாத்திரத்தில் சற்றே நகைச்சுவையுடன் அறிமுகமாகி கவர்ந்திருக்கிறார் பாக்யராஜ். ஜோதிகாவின் ஆகப்பெரும் உந்து சக்தியாக அவரே நிற்பதும், அவருக்கும், பாக்யராஜுக்கும் இருக்கும் பந்தமும் அருமை.
 
கே.பாக்யராஜ் பள்ளியை அப்படியே இந்தப்படத்தில் தூக்கிக்கொண்டு வந்திருக்கிறார் இயக்குநர். அவரது சீடர் பார்த்திபனும், அவரது சீடர் பாண்டியராஜனும் கூட இதில் பரிமளிக்கிறார்கள். அவர்களில் ஜோதிகாவுக்கு எதிராக வாதாடும் வலிமை மிக்க பாத்திரத்தில் வரும் பார்த்திபன் அதிக அளவில் கவர்கிறார். ஜோதிகாவை ஒவ்வொரு கட்டத்திலும் அவர் தோற்க வைப்பது திரைக்கதைக்கு பலம் சேர்த்திருக்கிறது.
 
அதில் ஒரு இடத்தில் சாட்சியாக பாக்யராஜ் அழைக்கப்பட, “இப்ப மணி என்ன ஃபோர் ட்வெண்டியா..? ஒரு 420 வழக்குக்கு ஒரு 420யையே சாட்சியா கூப்பிடறாங்க..?” என்று பார்த்திபன் லந்தடிக்க, “இந்த கிரிமினல் கேஸ்ல ஒரு கிரிமினலான நீங்களே ஆஜராகும்போது என்னைக் கூப்பிட்டதுல தப்பில்லை…” என்று பாக்யராஜ் பதிலடி கொடுப்பது அபாரம். இப்படியே இவர்கள் படம் முழுதும் தொடர்ந்திருந்தால் சுவாரஸ்யம் இன்னும் கூடியிருக்கும். 
 
நடிக்காமல் நடிக்கும் தியாகராஜனையே இதில் மேல் உதடு துடிதுடிக்க நடிக்க வைத்திருக்கிறார் இயக்குநர். அவரது வீக்னஸ் தேரிந்தே அதை ஜோதிகா பயன்படுத்தும் நீதிமன்றக் காட்சிகள் நன்று.
 
நீதிபதியாக பிரதாப் போத்தனும், அவரது உதவியாளராக அவரது பள்ளித் தோழர் பாண்டியராஜனும் வருவது கலகலப்பு. நேர்மையாக பிரதாப் போத்தன் கடைசியில் தியாகராஜனிடம் விலை போகாமல் இருந்திருக்கலாம்.
 
யாரும் எதிர்பாராத இடைவேளைக் காட்சியும், எவரும் யூகிக்க முடியாத கிளைமாக்ஸ் ட்விஸ்டும் ரசிக்க வைக்கின்றன.  
 
வன்மை பொருந்திய கதைக்கு ராம்ஜியின் ஒளிப்பதிவு மென்மையைத் தந்திருக்கிறது. 
கோவிந்த் வசந்தாவின் இசையில் பாடல்கள் கதையோடு ஒன்றி பயணிக்கின்றன.
 
“ஜெயிப்பதற்கும் தோற்பதற்கும் இது விளையாட்டு அல்ல. நீதி …” என்று ஜோதிகா பேசும் வசனம் அற்புதம். அதை மீண்டும் இன்னொரு முறை இன்னொரு இடத்தில் சொல்லியிருக்க வேண்டியதில்லை.
 
இறுதியாக பெண் குழந்தைகளுக்கு, ஆண்களிடம் எப்படி பழக வேண்டும் என்பதை சொல்வதைப்போல, பெண்களை எப்படி பார்க்க வேண்டும், எப்படி பழக வேண்டும் என்பதை ஆண்  குழந்தைகளுக்கும் கற்றுக் கொடுக்க வேண்டும் என்பதை ஜோதிகா வாயிலாக இயக்குனர் கடத்தி இருப்பது சிறப்பு. 
 
கண்டிப்பாக அனைவரும் பார்க்க வேண்டிய படம்.
 
பொன் மகள் OTT வழியாக வீட்டுக்குள்ளேயே வந்தாள்..!