சமத்துவத்தையும் பேரன்பையும் அழுத்தமாக ‘பரியேறும் பெருமள்’ படத்திற்கு மக்கள் அளித்த மகத்தான ஆதரவிற்கு நன்றி தெரிவிக்கும் பத்திரிக்கையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது.
இந்த சந்திப்பில் தயாரிப்பாளர் பா.இரஞ்சித், இயக்குநர் ராம், இயக்குநர் மாரி செல்வராஜ், இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன், நடிகர்கள் கதிர், லிஜீஸ், மாரிமுத்து, “கராத்தே” வெங்கடேசன், சண்முகராஜன், ஒளிப்பதிவாளர் ஸ்ரீதர், படத்தொகுப்பாளர் செல்வா RK, கலை இயக்குநர் ராமு மற்றும் தெருக்கூத்துக் கலைஞர் தங்கராஜ் (படத்தில் பரியனின் தந்தையாக நடித்தவர்) ஆகியோர் கலந்து கொண்டனர்.
படத்தின் தயாரிப்பாளர் பா.ரஞ்சித் பேசும்போது,
“இது கொண்டாட்டமான மனநிலை. பரியேறும் பெருமாள் போன்ற படங்கள் ஓடாது என்று பலரும் பயங்காட்டினார்கள். ஆனால் எனக்கு நம்பிக்கை இருந்தது. மனித மாண்பை மீட்டு எடுக்கிற சாதிய முரண்களை உடைத்து எடுக்கிற படங்களை நிச்சயமாக கொண்டாடுவார்கள் என்று நம்பினேன், அது நடந்தது. அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றி. தொடர்ந்து நீலம் புரொடக்ஷன் இதுபோன்ற படங்களை தயாரிக்கும்” என்றார்.
இயக்குனர் ராம் பேசுகையில்,
“இந்தப்படத்தின் வணிக ரீதியான வெற்றி தமிழ் மக்கள் சாதி, பேதம் பார்க்காத நிலையை விரும்புகிறார்கள் என்பதற்கான சாட்சி. பா.ரஞ்சித் படங்கள் வருவதற்கு முன்பும் தலித் படங்கள் வந்திருக்கின்றன. ஆனால் ரஞ்சித் வந்த பிறகு தான் தலித் பற்றி மேடையில் பேசியே ஆகவேண்டும் என்ற நிலை வந்தது..!” என்றார்.
இயக்குநர் மாரி செல்வராஜ் பேசும்போது,
“பரியேறும் பெருமாளை எல்லோரும் ஏற்றுக் கொள்வார்களா என்று மிகவும் பயந்தேன். ஆனால் எதிர்பார்த்ததை விட எல்லா தரப்பிலிருந்தும் பாராட்டுகள் குவிந்தன. குறிப்பாக பத்திரிகையாளர்கள் அனைவரும் பாராட்டியது மறக்க முடியாதது. அத்தனை பேருக்கும் நன்றி.
எல்லோரும் முதல் படத்திலேயே இப்படியான காட்சிகளை எடுக்க முடிந்தது எப்படி என கேட்டார்கள். எல்லாமே ரஞ்சித் அண்ணா என்கிற ஒருவர் கொடுத்த நம்பிக்கை தான் காரணம். அதற்கெல்லாம் அவருக்கு நன்றி கூறப் போவதில்லை, கடைசி வரை அவர் கூடவேதான் இருப்பேன்.
பரியனின் அப்பாவாக நடிக்க சரியான நபரை தேர்வு செய்ய அலைந்து திரிந்தோம். தமிழ்நாடு முழுக்க சுற்றினோம். அதன் பின்னர் நிஜத்திலேயே கூத்துக்கலைஞரான தங்கராஜை பிடித்தோம். அவரை ஒரு சோளக்கொல்லையில் நடு இரவில் சந்தித்தேன். முதலில் ஒரு ஒப்பாரி பாடலை பாட சொன்னேன். அரை மணி நேரம் அவர் பாடியது உருக வைத்தது அவர் இன்னும் படம் பார்க்கவில்லை…!” என்றார்.