October 18, 2025
  • October 18, 2025
Breaking News
  • Home
  • திரைப்படம்
  • பண்டாரத்தி புராணம் மாற்றப்பட்டது – மாரிசெல்வராஜ் அறிக்கை
March 25, 2021

பண்டாரத்தி புராணம் மாற்றப்பட்டது – மாரிசெல்வராஜ் அறிக்கை

By 0 601 Views

அனைவருக்கும் அன்பின் வணக்கம்.

கர்ணன் திரைப்படம் தொடங்கிய நாளிலிருந்து இன்று வரை நீங்கள் அளித்துவரும் ஆதரவும் நம்பிக்கையும் எனக்கு பெரும் உத்வேகத்தையும் மகிழ்ச்சியையும் அளிக்கிறது. ஒரு இளம் இயக்குநரான என் மீதும் நீங்கள் காட்டும் எதிர்பார்ப்பும் மரியாதையும் தான் சினிமா என்னும் மாயக்கலையை எவ்வளவு பொறுப்போடு நான் அணுக வேண்டும் என்பதை எனக்கு கற்றுகொடுக்கிறது.

அத்தகைய பொறுப்புணர்ச்சியோடும் கலைத்தன்மையோடும்தான் நான் என் காட்சி படிமங்களை பெரும் சிரத்தையோடு உருவாக்குகிறேன். பண்டாரத்தி புராணமும் அப்படி உருவாக்கபட்டதுதான்.

சொந்த அத்தையாக அக்காவாக ஆச்சியாக பெரியம்மாவாக என் நிலத்தோடும் என் இரத்தத்தோடும் கலந்து காலத்தின் தேவதைகளான பண்டாரத்திகளின் கதைகளைத்தான் நான் என் திரைக்கதையின் கூழாங்கற்களாக சிதறவிட்டு காட்சிபடுத்தினேன்.

ஆனால் நம் சமூக அடுக்குமுறை உளவியலில் சில பெயர்கள் ஏற்படுத்தும் தாக்கம் என்பது புரிந்துகொள்ள முடியாததாகவும் விலக முடியாததாகவும் இருக்கிறது. அதன் அடிப்படையில் பண்டாரத்தி புராணம் பாடலுக்கு ஏற்பட்டிருக்கும் விவாதத்தையும் வருத்தத்தையும் கோரிக்கையையும் முடித்து வைப்பதற்காக இனி பண்டாரத்தியை மஞ்சனத்தி என்று அழைக்கலாம் என்று முடிவு செய்திருக்கிறோம்.

தேவதைகள் எந்த பெயரில் அழைக்கபட்டாலென்ன … பெயர் மாறுவதால் அவர்கள் காட்டும் மாட வெளிச்சம் குறைந்துவிட போகிறதா என்ன? இனி ஏமராஜாவின் மாடவிளக்காக மஞ்சனத்தி இருப்பாள். இனி ஏமன் கர்ணனை ஆட வைப்பதற்காக மஞ்சனத்தி புராணத்தை பாடுவான் கர்ணன் ஆடுவான் . ஆதரவளித்த அனைவருக்கும் நன்றியும் ப்ரியமும் எப்போதும்…
காதலே பிரபஞ்ச மாடத்தின் வெளிச்சம்❤️
—-
மாரிசெல்வராஜ்
(குறிப்பு: படத்தில் மாற்றம் செய்யபட்டதை போலவே இணையத்திலும் மாற்றம் செய்யபட்டுவிட்டது. YouTube விதியின் படி ஓரிரு நாளில் தானாக மாறிவிடும்.)