கல்வியும் கற்றலும் சார்ந்த இடமான பள்ளிக்கூடத்தை காதல் பயிலும் கூடமாகவே நினைத்துக் காதல்கள் எப்படி வளர்கின்றன, தேய்கின்றன, அழிகின்றன என்ற கதையை (கதைகளை..?) ‘திறம்பட’ எடுத்திருக்கிறார் இயக்குநர் ஓமர் லுலு.
காதல்தான் எல்லாம் என்று முடிவு செய்துவிட்டு ஸ்கிரிப்ட் எழுத உட்கார்ந்து விட்டதால் பள்ளி தொடங்கும் முதல் நாளிலிருந்தே காதலையும் தொடங்கிவிடுகிறார் இயக்குநர். முதல் நாள்… முதல் பார்வை… உடனே முதல் காதல்..!
பிரேயரில் கண்ணடித்து பிரேக்கில் ‘கிஸ்’அடித்து (அதுவும் லிப் டூ லிப்)… இந்த ஸ்கூல் எங்கே இருக்கிறது என்று பெற்றோர் கவனமாக பார்த்து வைத்துக்கொள்ள வேண்டும் – அவரவர் பிள்ளைகளை சேர்க்காமல் இருக்கத்தான்.
பள்ளி என்ற விஷயத்தை முன்னிறுத்தாமல்… கல்லூரிக்கு வெளியே என்று கதை சொல்லியிருந்தால் கூட இன்னும் முழுமையாக ரசித்திருக்க முடியும்.
நாயகன் ரோஷனும், நாயகிகள் ப்ரியா பிரகாஷ் வாரியர், நூரின் ஷெரீபும் இளமையும், அழகும் கலந்த அப்படி ஒரு வார்ப்பு. ரோஷன், ப்ரியாவின் புருவங்கள் கூட பேசிக் கொள்வது ‘ஸோ… ஸ்வீட்’. ப்ரியாவின் உதடுகளை இன்ஷ்யூர் பண்ணி வைத்துக் கொள்ளலாம். ஹாலிவுட் நடிகைகளுக்குக் கூட இல்லாத ‘அழகு அதரங்கள்..!’
நூரின் ஷெரீபின் அப்பாவித் தனமும் கொள்ளை அழகு. நடிப்பாகக் காதலைத் தொடங்கி அதில் விழும் நூரின் நடிப்பு இயல்பாக இருக்கிறது. இந்த இளசுகளுக்கு நல்ல எதிர்காலம் காத்திருக்கிறது.
அமெரிக்காவிலிருந்து வந்த ஒரு மாணவி, காதலைச் சொல்லும் பையனிடம் “ஐம் நாட் அ வெர்ஜின்..!” என்பது கல்ச்சுரல் ஷாக்.
காதலிக்க யாரும் கிடைக்காமல் போனதால் ‘சயின்ஸ் டீச்சரை’யே காதலிக்கும் அந்தப் பொடியன் வரும் காட்சிகள் எல்லாம் அதகளம். “சயின்ஸ்ல அவ்வளவு இன்ட்ரஸ்ட் இருக்கிறமாதிரி சந்தேகம் கேட்டுட்டு ஏண்டா பெயில் ஆனே..?” என்று டீச்சர் கேட்க, “அவ்வளவு இன்ட்ரஸ்ட் இருந்தும் நான் பெயில் ஆனா, நீங்க ‘எதுவுமே சரியா சொல்லிக் கொடுக்கலை’ன்னுதானே அர்த்தம்..?” என்கிறான் அவன் – தியேட்டர் கிழிகிறது.
ஷான் ரஹ்மானின் இசையில் பாடல்கள் அமர்க்களமாக இருக்கின்றன. முயற்சி செய்தால் அவர் ஜூனியர் ஏ.ஆர்.ரஹ்மான் ஆகலாம். சினு சித்தார்த்தின் ஒளிப்பதிவும் டபுள் ஓகே..!
பள்ளிக்கூடத்துக்கு வருவதே காதலிக்க மட்டும்தான் என்பதைக் குறைத்து காதல் என்பது அரும்பும் பருவம் அது என்பதால் எப்படி மாணவர்கள் காதலின் பால் ஈர்க்கப்படுகிறார்கள் என்று சொல்லியிருந்தால் காலத்தால் கொண்டாடத்தக்க படமாக இது அமைந்திருக்கும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை.
ஆனாலும், ரசிகர்களின் நாடி தெரிந்து காதல், காமெடி என்று கலந்து கொடுத்திருப்பதால் படத்தை முழுமையாக ரசிக்க முடிகிறது.
அந்த வகையில் வெற்றி பெற்றிருக்கும் இயக்குநர் கிளைமாக்ஸில் பெரிதாக கோட்டை விட்டு விட்டார். கிளைமாக்ஸ் இடம்பெறும் மலைக்கே கூட்டிச் சென்று அவரைத் தள்ளி விடலாம் போல் அப்படி ஒரு கொடுமை..!
இந்தக் கொடுமையில் ‘ஓமர் லுலு லவ்’ என்று வேறு கடைசியில் டைட்டில் கார்டு போட்டுக் கொள்கிறார். அந்தப் பெருமையில் ‘மண்ணை அள்ளிப் போட..!’
ஒரு ‘தடார்’ கிளைமாக்ஸால் தடுமாறும் ஒரு அடார் லவ்..!
– வேணுஜி