ஓடுகிற குதிரை ஒன்று கிடைத்துவிட்டால் போதும் எந்தப் பந்தயத்திலும் கலந்து கொள்ளலாம் என்ற சித்தாந்தத்தை அடிப்படையாக வைத்து இந்த படத்தை இயக்கியிருக்கிறார் யுவன்.
அந்த ஓடுகிற குதிரை வேறு யாரும் அல்ல, உலகப் புகழ் பெற்ற நடிகை சன்னி லியோன் தான். அவர் மட்டுமல்லாமல் யோகி பாபுவும் உடன் இருக்க இந்த ப்ராஜெக்டை எந்த தயக்கமும் இல்லாமல் தயாரித்திருக்கிறார்கள் வா மீடியா சார்பாக வீர சக்தியும், சசிகுமாரும்.
தலைப்பிலேயே கோஸ்ட் இருப்பதால் இது எந்த விதமான படம் என்பது புரிந்துவிடும். ஹாரருடன் ஹ்யூமரும் சேர்ந்து கொண்டால்..?
அனகொண்டபுரம் என்ற தூர்ந்து போன ஒரு சாம்ராஜ்யத்தில் இப்போது வசிக்கும் மக்களை இரவெல்லாம் ஒரு பேய் வந்து பயமுறுத்திக் கொண்டிருக்கிறது. அந்த ஊருக்குள் திடீரென்று பிரவேசிக்கும் சாமியாரான மொட்ட ராஜேந்திரன் அந்தப் பேயிடமிருந்து ஊர் மக்களை காப்பாற்ற ஒரு உபாயம் செய்கிறார்.
இன்னொரு பக்கம் பலான படங்களுக்காகவே கதை வசனம் எழுதிக் கொண்டிருக்கும் காமெடி சதீஷ் அவரது நண்பர் ரமேஷ் திலக்குடன் பட வாய்ப்பு தேடிக் கொண்டிருக்கிறார்.
அதே ஊரில் ஆவிகளை கட்டிப்போட்டு வசியம் செய்து கொண்டிருக்கிறார் பாலா.
இந்த மூன்று விஷயங்களும் ஒரு புள்ளியில் சேர, சதீஷின் காதலி தர்ஷா குப்தாவை ஒரு ஆவி பிடித்து ஆட்டி அனகொண்டபுரம் கொண்டு வருகிறது. அனகொண்டபுரத்தின் தூர்ந்த சாம்ராஜ்யத்தின் ஏக ‘போக’ ராணியாக சன்னி லியோன் ஒரு காலத்தில் வாழ்ந்து கொண்டிருக்க அவரை உயிருடன் புதைத்து மரணிக்கச் செய்கிறார் யோகி பாபு.
அந்த சன்னி லியோனின் ஆவிதான் இப்போது மக்களை ஆட்டிப்படைத்துக் கொண்டிருக்க அதை அடக்க இருக்கும் ஒரே வழியாக காமெடி சதீஷ் அரண்மனைக்குள் புகுந்து என்ன செய்கிறார், எப்படி சன்னி லியோனே அடக்கி ஆள்கிறார் என்பதுதான் மீதிக் கதை.
சன்னி லியோன் கையில் இருக்க வேறு எதைப் பற்றியும் கவலைப்பட வேண்டாம் என்று காமெடியாக திரைக்கதையை எழுதி இருக்கிறார் யுவன். முன்பாதி கதை முழுக்க சதீஷ் கதை சொல்லப் போகும் இடத்தில் எல்லாம் என்னென்ன பாடுபடுகிறார், தனக்கான தயாரிப்பாளரை எப்படி பாலியல் மருத்துவர் ஜி.பி முத்துவின் கிளினிக்கில் பிடிக்கிறார் என்பதெல்லாம் நகைச்சுவை ஐட்டங்கள்.
சன்னி லியோன் எப்போது வருவார் என்று ஆவலோடு காத்திருக்கும் ரசிகர்களுக்கு இடைவேளையில் ஒரு பர்ஸ்ட் லுக் காட்டி முன் பாதிப் படத்தை முடிக்கிறார்கள்.
இரண்டாவது பாதி முழுக்க சன்னிலியோனின் ராஜாங்கம் நடைபெறுகிறது. சன்னி லியோனின் சக்திக்கு ஈடு கொடுக்கும் வீரர்களை தினமும் அவர் தேடி சக்தி இழக்க வைத்துக் கொண்டிருக்க, காமெடி ராஜகுரு யோகி பாபு எப்படி அவரது கொட்டத்தை அடக்குகிறார் என்பது பின் பாதிக் கதையில் சொல்லப்படுகிறது.
காமெடி சதீஷ்க்கு இலகுவான வேடம். ஒவ்வொரு இடத்திலும் அவர் கதை சொல்ல போய் படும் பாடு பெரும் கூத்து. அவரது மூதாதையரான இன்னொரு சதீஷ் சன்னி லியோனின் பாலியல் கதைகளை சொல்லி புகழ் பெற்றிருக்க, அவரது வாரிசான இப்போதைய சதீஷ் பலான கதைகள் எழுதிக் கொண்டிருப்பது காமெடி ரிலே.
அவரது அறை நண்பராக வரும் ரமேஷ் திலக்கும் அவரது பாணியில் காமெடி செய்திருக்கிறார்.
சதீஷின் தாத்தாவும் சதீஷ் ஆக இருந்ததைப் போலவே யோகி பாபுவின் தாத்தாவும் இன்னொரு யோகி பாபுவாகி சன்னி லியோனின் சித்திரவதைக்கு உள்ளாகி உயிரை விடுகிறார்.
ஆக சதீஷும், யோகி பாபுவும் நமக்கு டபுள் ட்ரீட் தருகிறார்கள்.
சன்னி லியோனிடம் எதை எதை எதிர்பார்க்கிறோமோ அதை அதையெல்லாம் கச்சிதமாக காட்சிப்படுத்தி இருக்கிறார் இயக்குனர்.
சன்னி லியோனை வைத்து இப்படி ஒரு மெலடி பாடலும் கடைசியில் ஒரு குத்துப் பாடலும் வேறு எந்த மொழியிலும் யோசித்து இருக்க மாட்டார்கள். அந்த கடைசியில் வரும் கவர் பாடலான குத்துப் பாடலை படத்தின் இடையிலேயே வைத்திருந்தால் இன்னும் மைலேஜ் கூடியிருக்கும்.
பயங்கர வீரராக வந்து சன்னி லியோனிடம் சக்தியை இழக்கும் ‘ஷேர் கான்’ ரவி மரியாவின் நிலை பரிதாபம்.
“இப்போதெல்லாம் எங்கே நல்ல கதைகளை படமாக்குகிறார்கள் – இப்படிப்பட்ட பலான கதைகளை தான் படமாக்குகிறார்கள்…” என்ற ஆதங்கத்துடன் தொடங்கும் படத்தில் அதே போன்று ஒரு கதையை வைத்து படமாக இருப்பதுதான் இயக்குனர் யுவனின் ஆகப்பெரிய நக்கல்.
மொட்ட ராஜேந்திரன் புல்லாங்குழல் சாமியாராக வந்து குழல் இசைப்பதும் நல்ல காமெடி.
ஜாவித் ரியாசின் இசை மெலடிக்கு மெலடியாகவும் குத்துக்கு குத்தாகவும் பயணப்பட்டு இருக்கிறது. அதேபோல் தரணின் பின்னணி இசையும் டெரர்.
தீபக் மேனனின் ஒளிப்பதிவில் பல காட்சிகள் பாகுபலியை நினைவுபடுத்தி வருவது பலம்தான். அரண்மனை செட்களை பிரமாண்டமாக அமைத்திருக்கும் கலை இயக்குனருக்கும், சிஜி கலைஞர்களுக்கும் பாராட்டுக்கள்.
படத்தை இன்னும் பரபரப்புடன் எடிட் செய்திருந்தால் இன்னும் சுவாரசியம் கூடியிருக்கும்.
ஆனாலும் ரசிகர்கள் எதை எதிர்பார்த்து வருகிறார்களோ அதை வைத்து ஆசுவாசப்படுத்தி விடுகிறார் இயக்குனர்.
ஓ மை கோஸ்ட் – நான் வெஜ் டேஸ்ட்..!