ஓ2 என்றால் ஆக்சிஜன்தானே தவிர படத்தை நினைத்தபடி எல்லாம் ஓட்டுவதற்காக அல்ல. ஆனால், கதைக்குள் ஒரு ஓட்டம் நின்றுபோக அடுத்து என்ன என்பதுதான் விஷயமே.
அத்துடன் நயன்தாரா கதையின் நாயகி ஆகிவிட இந்தப் படத்துக்கு பிராண்ட் வேல்யூவும் சிறப்பு எதிர்பார்ப்பும் தொற்றிக் கொண்டிருக்கிறது. அதுவும் திருமணத்துக்குப் பிறகு வெளியாகியிருக்கும் அவரது படம் என்பதால் இன்னும் மெருகேற்றிக் கொள்கிறது அந்த எதிர்பார்ப்பு.
கணவனை இழந்த நிலையில் தன் ஐந்து வயது சிறுவனுடன் வாழ்க்கை நடத்தி வரும் நயன்தாராவுக்கு அது மட்டுமே பிரச்சனையாக இல்லை. அவரது மகனுக்கு சுவாச தொடர்பான பிரச்சனை ஒன்றும் இருக்க செயற்கை சுவாசத்துடனேயே அவன் உயிர் வாழ வேண்டி இருக்கிறது.
அதற்கான அறுவை சிகிச்சைக்காக கோவையில் இருந்து கொச்சிக்கு பஸ்ஸில் பயணப்படுகிறார் அவர். அவருடன் அதே பஸ்ஸில் வேறு சிலரும் பயணிக்கிறார்கள். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு சுயநல பிரச்சனை இருக்கிறது. ஆனால் வழியில் ஒரு நிலச்சரிவில் பஸ் மாட்டிக்கொண்டு புதைந்து போக உள்ளே இருப்பவர்கள் எப்படி சுவாசிக்கப் போராடினார்கள் என்பது தான் மீதி கதை.
இந்த ‘பிளாட் ‘ டைக் கேட்டதுமே ஒரு உற்சாகம் வருகிறது இல்லையா, அதே உற்சாகம்தான் நயன்தாராவுக்கும் வந்திருக்க வேண்டும். அதனாலேயே இந்த படத்தை ஒத்துக் கொண்டிருக்கிறார் அவர். அவரது மகனாக நடித்திருக்கும் யூடியூப் புகழ் ரித்திக்குக்கும் முக்கியமான வேடம் – அந்த சிறுவனும் நயன்தாராவை விட ஒரு படி மேலே போய் நம்மை கவர்ந்து இருக்கிறார்.
நயன்தாராவின் நடிப்பு பற்றி நாம் புதிதாக சொல்வதற்கு ஒன்றுமில்லை. வாழ்க்கையின் சகல முனைகளிலும் அவருக்கு பிரச்சினை தொற்றிக்கொள்ளும் வேடத்தில் அதை எப்படி சமாளிக்கப் போகிறார் என்பதே சவாலாக இருக்கிறது. மகனுக்கு வைத்திருக்கும் ஆக்சிஜன் சிலிண்டரையும் பிறர் சுயநலத்துக்காக இழக்க நேர்கையில் ஒரு தாயின் போராட்டம் எப்படி இருக்கும் என்பதை உக்கிரத்துடன் காட்டியிருக்கிறார். ஆனாலும் அவரது நடிப்புக்கு இது ஒரு சோளப்பொறி சவாலாகவே இருக்கிறது.
பஸ் அளவே கொண்ட ஒரு செட் போட்டு புதைந்த பேருந்துக்குள்ளான காட்சிகளை படமாக்கி இருக்கும் ஒளிப்பதிவாளர் தமிழ் ஏ.அழகன் கண்ணுக்கு தெரியாமல் படத்தின் ஒரு நட்சத்திரம் ஆகியிருக்கிறார் கிடைத்த கேப்பில் எப்படி எப்படியோ கோணங்கள் வைத்து படத்தை நகர்த்துவது அவருக்கு சவாலாக இருக்கிறது. சபாஷ் தமிழ்..!
நயன்தாராவுக்கும் ரித்விக்குக்கும் அடுத்தபடியாக முக்கியத்துவம் தரப்பட்டிருப்பது இந்த படத்தின் மூலம் நடிகராகி இருக்கும் இயக்குனர் பரத் நீலகண்டனுக்கு தான். இருந்தாலும் அவர் ஒரே மாதிரியான நடிப்பைத் தந்து கொஞ்சம் அலுக்க வைக்கிறார். பாத்திரத்தை உணர்ந்து கூட்டியும் குறைத்தும் நடிப்பில் தொடர்ந்தால் அவர் சிறந்த நடிகராக ஆவதற்கான வாய்ப்பு இருக்கிறது.
பார்த்தவுடன் நமது பச்சாதாபத்தை அள்ளிக்கொள்ளும் சிறுவன் ரித்விக் இன்னும் பல பெரிய உயரங்களை சினிமாவில் தொடுவான்.
விஷால் சந்திரசேகரின் இசை படத்தைத் தூக்கி நிறுத்த உதவியிருக்கிறது.
இருந்தாலும் ஒரு அருமையான பிளாட் கையில் கிடைத்த நிலையில் அதனை திரைக்கதையில் பரபரப்புக் கூட்டி எடுத்திருந்தால் இன்னும் ரசிக்க வைத்திருக்கும். அதுவும் முதல் படத்திலேயே நயன்தாரா போன்ற சூப்பர் ஸ்டார் கையில் கிடைத்தும் இயக்குனர் ஜி.எஸ்.விக்னேஷ் திரைக்கதையில் இன்னும் மெனக்கெட்டிருக்கலாம்.
குறிப்பாக பஸ்ஸில் சிக்கியவர்களின் குடும்பங்கள் பரிதவிப்பையும், பேரிடர் மேலாண்மை குழு பணியாற்றும் விதங்களையும் இன்னும் கேஸ் ஸ்டடி செய்து திரைக்கதையை எழுதி இருந்தால் பரபரப்பும் வேகமும் படத்தில் தொற்றிக் கொண்டிருக்கும்.
இருந்தாலும் இயற்கையுடன் மனிதன் கைகோர்த்து வாழ வேண்டியதன் அவசியத்தை இந்த படத்தின் மூலம் உணர்த்தியதற்காக அவருக்கு ஒரு பசுமை விருது தரலாம்.
தமிழ் படங்களில் திருமலை தென்குமரி தொடங்கி எங்கேயும் எப்போதும் வரை பஸ் ஒரு பாத்திரமான படங்கள் நன்றாகவே ஓடி இருக்கின்றன இந்தப் படம் திரைக்கு வராமல் ஓடிடியில் ரிலீஸ் ஆனாலும் அவர்களே இந்த பஸ்சை ஓட்டி விடுவார்கள் என்று எதிர்பார்க்கலாம்.
இதுபோன்ற புதிய முயற்சிகளுக்கு ஆதரவு தரும் ட்ரீம் வாரியர் எஸ்.ஆர். பிரபுவையும் இந்த நேரத்தில் நாம் பாராட்ட வேண்டும்
ஓ2 – ஓடும்..!
– வேணுஜி