இன்றைக்கு இருக்கும் வாழ்க்கை நெருக்கடிகளால் ஒவ்வொரு குடும்பமும் சந்திக்கும் மிகப்பெரிய பிரச்சனை தன்னைப் பெற்ற பெற்றோரயும், தான் பெற்ற குழந்தைகளையும் கவனித்துக் கொள்வது தான்.
வாழ்வின் ஆசைகளுக்காகவும், தேவைகளுக்காகவும் பெற்றோரை முதியோர் இல்லத்தில் தள்ளிவிட்டு குழந்தைகளைக் காப்பகத்திலோ அல்லது இன்னொருவர் பொறுப்பிலோ விட்டுவிட்டுச் செல்லும் பெற்றோர் அதிகரித்து வரும் நிலையில் இந்தப் பிரச்சினையை மையமாக வைத்து ஒரு நெகிழ்ச்சியான கதையைச் சொல்ல முயற்சித்து இருக்கிறார் இயக்குனர் சிவா ஆறுமுகம்.
முதலமைச்சரின் விருது பெறும் அளவுக்கு முதியோர் இல்லம் ஒன்றைத் தன் முயற்சியால் தூக்கி நிறுத்துகிறார் அங்கு பணிபுரியும் ஜோதி என்கிற தேவயானி.
இன்னொரு பக்கம் காதல் மணம் புரிந்து மூன்று வயதுப் பெண் குழந்தைக்குப் பெற்றோராக இருக்கும் விஜித் – கண்மணி ஜோடிக்கு அமெரிக்கா போய் செட்டில் ஆக வேண்டும் என்கிற கனவு இருக்கிறது. காதல் திருமணத்தால் இரண்டு குடும்பங்களும் கைவிட்ட நிலையில் இருவரும் வேலைக்குச் செல்வதால் குழந்தையைப் பார்த்துக் கொள்ள ஒரு இளம் பெண்ணை நியமிக்கிறார்கள்.
ஆனால் அந்தப் பெண்ணோ இவர்கள் தலை மறைந்த பிறகு தன் காதலனை அந்த வீட்டுக்கு அழைத்து லூட்டி அடிப்பதுடன் குழந்தையைக் கவனிக்காமல் விடுவதில் குழந்தை நோய் வாய்ப்பாடுகிறது. இந்த விஷயம் தெரிந்த விஜித் அந்த பெண்ணை வீட்டை விட்டுத் துரத்தி விடுகிறார்.
குழந்தையின் பிறந்தநாளுக்கு முதியோர் இல்லம் செல்லும் விஜித்தும் கண்மணியும் தேவயானியின் நல்ல உள்ளம் தெரிந்து தங்கள் குழந்தையை கவனித்துக் கொள்ள வீட்டுக்கு அழைக்கிறார்கள்.
இலங்கை இறுதி கட்டப் போரில் தன் குழந்தை உட்பட குடும்பத்தை இழந்து நிற்கும் தேவயானிக்கு இவர்களின் குழந்தை தன் குழந்தை போலவே தோன்ற அவரும் ஒத்துக் கொண்டு பெறாத குழந்தையாக கவனித்துக் கொள்ள திடீரென்று குழந்தை காணாமல் போகிறது.
அதற்குப்பின் என்ன என்பதெல்லாம் பரபரப்பான பின் பாதிக் கதை.
தேவயானியின் முகமும், நடிப்புமே அவரை நல்லொழுக்கம் மிகுந்த பெண்மணியாகக் காட்டிவிடுகிறது. குழந்தையின் மீது மட்டுமல்லாமல் அவளின் பெற்றோர் மீதும் அக்கறை செலுத்தி கவனித்துக் கொள்ளும்போது இப்படி ஒரு பெண்மணி நம் குடும்பத்தில் இருந்தால் எத்தனை நன்றாக இருக்கும் என்று எண்ணத் தோன்றுகிறது.
குழந்தையைக் கடத்தியதாக போலீஸ் சந்தேகப்படும்போது தேவயானி துடித்துப் போவது நெகிழ்ச்சியாக இருக்கிறது.
மேல்நாட்டு மோகம் கொண்டிருப்பதுடன் நாகரிகத்தில் திளைத்த தம்பதியாக விஜித்தும் கண்மணியும் மிகச் சரியாகப் பொருந்தி இருக்கிறார்கள்.
ஆனால் இருவருமே தங்கள் குடும்பத்தினரை எதிரிகளாக நினைப்பது ஏன் என்பதற்கான வலுவான காரணம் படத்தில் இல்லை.
கவனிப்பாரற்ற குழந்தை ‘நிலா’ வாக வரும் அஹானா அஸ்னி மிகச் சரியான தேர்வு. கேர் டேக்கர் அவளுக்கு தூக்க மருந்து கொடுத்து அப்படியே தூங்க விடும் போதெல்லாம் நமக்கு மனது பதை பதைக்கிறது.
குழந்தையின் குடும்பம் குடியிருக்கும் அதே தளத்தில் குடிவரும் தர்ஷன் சிவாவை பார்த்தாலே அச்சமாக இருக்கிறது. அதிலும் அவர் குழந்தை நிலாவைக் கடத்தத் திட்டமிடும்போது இதயம் கனக்கிறது.
விஜித்தின் அம்மாவாக வரும் வடிவுக்கரசி பேசும் வசனங்கள் தாய்ப் பாசத்தில் தோய்ந்தவை.
இன்ஸ்பெக்டராக வரும் இளவரசு வருவது இரண்டு, மூன்று காட்சிகள்தான் என்றாலும் தன் தேர்ந்த நடிப்பால் மனம் கவர்கிறார்.
நரேன் பாலகுமாரின் இசையும், ஆர்பி குருதேவன் ஒளிப்பதிவும் படத்தின் தரத்திற்கு ஏற்ப பயணத்திருக்கின்றன.
படத்தின் மிகப்பெரிய குறை சினிமாத் தனமாகவே நகரும் காட்சிகள்தான். இதனை இயல்புடன் அமைத்திருந்தால் நெஞ்சத்துக்கு நெருக்கமாக வந்திருக்கும்.
தேவயானியைக் குழந்தை அழைப்பதுபோல் ‘ஜோம்மா’ என்பதே தலைப்பாக வைத்திருந்தால் இன்னும் படத்துடன் நெருங்கியிருப்போம்.
நிழற்குடை – பாசப் பிணை..!
– வேணுஜி