December 12, 2024
  • December 12, 2024
Breaking News
November 9, 2024

காதலை மையமாகக் கொண்ட ஒரு என்டர்டெய்னர்தான் நேசிப்பாயா படம் – இயக்குனர் விஷ்ணுவர்தன்

By 0 95 Views

நடிகர் முரளியின் இளைய மகன் ஆகாஷ் முரளி நாயகனாக அறிமுகமாகும் ‘நேசிப்பாயா’ படத்தை இயக்குநர் விஷ்ணுவர்தன் இயக்கியுள்ளார்.

எக்ஸ்.பி பிலிம் கிரியேட்டர்ஸ் நிறுவனம் சார்பில் டாக்டர்.எஸ்.சேவியர் பிரிட்டோ தயாரித்திருக்கும் இப்படத்தின் இணைத் தயாரிப்பாளராக அவரது மகளும் ஆகாஷின் மனைவியுமான சினேகா பிரிட்டோ பணியாற்றியுள்ளார்.

யுவன் சங்கர் ராஜா இசையமைக்கும் இப்படத்திற்கு பிரிட்டிஷ் ஒளிப்பதிவாளர் கேமரோன் பிரைசன் ஒளிப்பதிவு செய்கிறார். ஸ்ரீகர்பிரசாத் படத்தொகுப்பு செய்ய, ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த ஃபெட்ரிகோ கியூவா சண்டைக்காட்சிகளை வடிவமைத்துள்ளார்.

’அறிந்தும் அறியாமலும்’, ‘பட்டியல்’ என்று தொடர் வெற்றிப் படங்களை கொடுத்த இயக்குநர் விஷ்ணுவர்தன், அஜித்தின் ‘பில்லா’ மூலம் இந்திய சினிமாவையே அதிர வைத்தவர்.

தொடர்ந்து ’ஆரம்பம்’ மூலம் மீண்டும் அஜித்துடன் கைகோர்த்தவர், பிறகு பாலிவுட்டில் ‘ஷெர்ஷா’ என்ற ராணுவ வீரரின் வாழ்க்கையை மையமாக கொண்ட இந்தி படத்தை இயக்கி முடித்த நிலையில், மீண்டும் ‘நேசிப்பாயா ‘ படம் மூலம் தமிழுக்கு வந்திருக்கிறார்.

இதில் நாயகியாக அதிதி ஷங்கர் நடிக்க, பிரபு, சரத்குமார், குஷ்பு, கல்கி கொச்சலின் உள்ளிட்ட நட்சத்திரங்கள் முக்கிய வேடங்களில் நடித்திருக்கிறார்கள்.

இந்நிலையில் ஆகாஷ் முரளி, இணைத் தயாரிப்பாளர் சினேகா பிரிட்டோவுடன் மீடியாக்களை சந்தித்த இயக்குநர் விஷ்ணுவர்தன் பேசியதிலிருந்து…

“இந்தியில் ‘ஷெர்ஷா’ படத்தின் டப்பிங் பணிகளில் நான் பிஸியாக இருந்த போது, என்னை ஆகாஷ் மும்பையில் வந்து நட்பு ரீதியாக சந்தித்தார். மதிய உணவு சாப்பிட்டு விட்டு ஒரு மணி நேரம் பேசினோம். அந்த சந்திப்பைத் தொடர்ந்து ஒரு கட்டத்தில் இவருக்காக ஒரு படம் பண்ணலாமே என்று எனக்கே தோன்றியது. அப்படிதான் ‘நேசிப்பாயா’ உருவானது.

இது முழுக்க முழுக்க காதல் கதை என்றாலும் காதலை மையமாக வைத்துக்கொண்டு ரசிகர்களை உற்சாகத்தில் வைத்திருக்கும் நல்ல ட்ராமாவாக இருக்கும். காதல் என்பதை ஒரு களமாக வைத்துக்கொண்டு பொதுவான சினிமா ரசிகர்களுக்கான விறுவிறுப்பான படத்தைக் கொடுத்திருக்கிறேன்..!”

“ஆகாஷுக்காகவே இந்தக் கதையை எழுதினீர்களா..?”

“இல்லை. ஆனால், இப்படி ஒரு கரு என்னிடம் இருந்தது. வாய்ப்புக் கிடைத்தால் இதைப் படமாக பண்ணலாம் என்று நினைத்தேன், ஆகாஷுக்காக படம் பண்ண முடிவான போது, ஏன் இந்த கதையை பண்ணக்கூடாது என்று தோன்றியது. அதனால் தான் இந்த கதையைத் தேர்வு செய்தேன்.

ஆறடி உயரம், கணீர் குரல் என்று அவரைப் பார்க்கும் போது பக்கா பர்சனாலிட்டியாக இருந்தது ஒரு நடிகருக்கான முதல் தகுதி. அது இந்தக் கதைக்கு ரொம்பவே பொருத்தமாக இருந்தது..!”

“அதிதி ஷங்கர் எப்படி இந்தப் படத்துக்குள் வந்தார்..?”

“பொதுவாகவே அதிதி, சினிமாத்தனம் இல்லாத ஒரு பெண்ணாக இருப்பார். அதனால்தான் அவரை நாயகியாகத் தேர்வு செய்தேன். மேக்கப் இல்லாமல் அவர் மிகவும் அழகாக இருப்பார். அவருடைய உடல்மொழி, நடிப்பு என அனைத்தும் ஒரு நடிகையாக அல்லாமல் எளிமையான பெண் போல் இருக்கும், அந்த விஷயம் படத்திற்குத் தேவை என்பதால் அவரை நாயகியாக நடிக்க வைத்தேன். ஆகாஷுக்கு ஈடாக அதிக எனர்ஜியுடன் நடித்திருக்கிறார் அதிதி..!”

“படத்தின் பெரும்பகுதி வெளிநாட்டில் படம் பிடிக்கப்பட்டது ஏன்..?”

“இதன் கதை தமிழ்நாட்டில் தொடங்கினாலும், மீதிக் கதை போர்ச்சுக்கல் நாட்டில்தான் நடக்கிறது. கதைப்படி மொழி தெரியாத ஒரு நாடு தேவை. போர்ச்சுக்கல் நாட்டை இதுவரை யாரும் திரைப்படங்களில் பெரிய அளவில் காட்டவில்லை, அதே சமயம் எங்கள் கதைக்கும் அந்த நாடு சரியாக இருந்ததால், அந்த நாட்டைத் தேர்வு செய்தோம்..!”

“வெளிநாட்டுத் தொழில்நுட்பக் கலைஞர்களைப் பயன்படுத்தியது பற்றி..?”

“வெளிநாட்டிலேயே 90 சதவீத படம் நடக்க இருந்ததால் ஒளிப்பதிவாளர், ஸ்டன்ட் மாஸ்டர் ஆகியோரது தேதிகள் எனக்கு மொத்தமாகத் தேவைப்பட்டது. ஆரம்பத்தில் ஓம்பிரகாஷ் தான் ஒளிப்பதிவு செய்தார். ஆனால் அவரது தேதிகள் மொத்தமாகக் கிடைக்காத நிலையில், பிரிட்டிஷ் ஒளிப்பதிவாளரான கேமரோன் பிரைசன், ஸ்டண்ட் மாஸ்டராக ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த ஃபெட்ரிகோ கியூவா ஆகியோர் எங்களுக்கு பக்கத்தில் இருந்ததாலும், நான் எதிர்பார்த்தது போல் அவர்களுடைய தேதி மொத்தமாக கிடைத்ததாலும் தான் அவர்களை ஒப்பந்தம் செய்தேன்..!”

“படத்தில் நடித்த பிற நடிகர்கள் பற்றி…”

“ஆகாஷ், அதிதி தவிர கல்கி கொச்சலின் மிக முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். அந்தக் கதாபாத்திரத்தை எழுதும் போதே அவரை மனதில் வைத்துதான் எழுதினேன். சரத்குமார், பிரபு, குஷ்பு ஆகியோரும் முக்கிய வேடங்களில் நடித்திருக்கிறார்கள். இத்தனை சீனியர்களுடன் போட்டி போட்டு ஆகாஷ் அருமையாக நடித்திருக்கிறார்.!”

“ஆகாஷை இவ்வளவு புகழ்வதைப் பார்த்தால் இன்னொரு படத்தில் அவர்களுடன் மீண்டும் இணைவீர்கள் போலிருக்கிறதே..!?”

“உண்மைதான். இது காதல் கதை என்பதால் அங்கங்கே சண்டை போட்டாலும் மென்மையாகத்தான் ஆகாஷ் வருவார். எதிர்காலத்தில் அவரை முரட்டுத்தனமான கதாபாத்திரத்தில் நடிக்க வைக்க வேண்டும் என்ற ஆசை எனக்கு இருக்கிறது. அதற்கான கதை அமைந்தால் நிச்சயம் மீண்டும் ஆகாஷுடன் இணைவேன்.”

நாயகன் ஆகாஷ் முரளி, நேசிப்பாயா படம் பற்றி கூறியதிலிருந்து…

“நடிக்க வேண்டும் என்பது நீண்ட காலத் திட்டம். ஆனால், இடையில் கொரோனா வந்ததால் நடிக்க முடியாமல் போய்விட்டது. பிறகு திருமணம் நடந்தது. இதனால்தான் சற்றே காலதாமதம் ஆனது.

‘அறிந்தும் அறியாமலும்’ போன்ற ஒரு படத்தின் மூலம் அறிமுகமாக வேண்டும் என்று ஆசைப்பட்டேன். ஆனால், என்னை வைத்து விஷ்ணு சார் படம் பண்ணுவாரா என்பது கேள்விக்குறியாக இருந்தது.

இருந்தாலும் அவரை ஒரு முறை சந்தித்து சாதாரணமாகப் பேச வேண்டும் என்று முயற்சித்தேன். அப்படிதான் அவரைச் சந்தித்து என் ஆசையை அவரிடம் சாதாரணமாகச் சொன்னேன். அப்படிதான் எங்கள் நட்பு ஆரம்பித்து, இன்று நேசிப்பாயா படமாக வந்துள்ளது.”

ஆகாஷ் முரளியின் மனைவியும், தயாரிப்பாளருமான சினேகா பிரிட்டோ கூறியதிலிருந்து…

“ஆகாஷின் நீண்ட நாள் கனவு நடிப்பு என்பது எனக்கு ஆரம்பத்திலேயே தெரியும். அதற்காக அவர் நடிப்பு பயிற்சியில் எல்லாம் ஈடுபட்டுத் தன்னை தயார்ப்படுத்திக் கொண்டார்.

வேறு ஒரு நிறுவனத்திற்காக அவர் படம் பண்ணுவதாக இருந்தது. ஆனால், அவரைப் பிடித்துப் போனதால் என் அப்பா “நம் நிறுவனத்திலேயே பண்ணலாம்..!” என்று சொல்ல, இந்தப் படம் ஆரம்பமானது. எனக்குப் பிடித்த நான் மதிக்கும் இயக்குனர் விஷ்ணுவர்தன் இந்த படத்தை இயக்குவதும் எங்களுக்குப் பெருமையான விஷயம்.!”

“நீங்களும் ஒரு இயக்குனர்தான். ஆகாஷை இயக்குவீர்களா..?” என்ற கேள்விக்கு சிரித்தபடி “எதிர்காலத்தில் நடக்கலாம்.” என்றார்.

நிச்சயம் நடக்கத்தான் போகிறது..!