இன்று நாடு முழுவதும் மருத்துவ படிப்பில் சேர்வதற்கு நுழைவுத்தேர்வான ‘நீட்’ நடந்து முடிந்தது. இதில் தமிழகத்தைச் சேர்ந்த, 1.07 லட்சம் மாணவ மாணவியர் உள்பட மொத்தம், 13.27 லட்சம் பேர் பங்கேற்றனர்.
வெளிமாநில தேர்வு மையங்களில் தேர்வு எழுத தமிழகத்தை சேர்ந்த, 5,500 மாணவர், மாணவியர், சென்றனர். இவர்களில் திருநெல்வேலி, கன்னியாகுமரி, துாத்துக்குடி மாவட்டங்களில் இருந்து, 5,371 பேர், எர்ணாகுளம், திருவனந்தபுரம் தேர்வு மையங்களுக்கு சென்றனர். மற்றவர்கள், பெங்களூரு மற்றும் ராஜஸ்தான் மாநில தேர்வு மையங்களுக்குச் சென்றனர்.
தமிழகத்தில், 170 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டன. சென்னையில், 49 மையங்களில், 33 ஆயிரத்து, 842 பேர் தேர்வு எழுதினர். காலை 7 மணி முதலே தேர்வு எழுதும் மையங்களில் குவிந்த மாணவ, மாணவிகள் கடும் சோதனைக்குப் பிறகே தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டனர்.
மெட்டல் டிடெக்டர் மூலம் மாணவர்களிடம் சோதனை நடத்தப்பட்டு. ஹால்டிக்கெட் மற்றும் போட்டோவை மட்டும் தேர்வு அறைக்குக் கொண்டு செல்ல அனுமதிக்கப்பட்டனர். தேர்வு எழுதுவதற்கான பேனா கூட தேர்வு மையத்திலேயே வழங்கப்படும் என சிபிஎஸ்பி அறிவித்தது.
மாணவிகளின் நகைகள் அகற்றப்பட்டன. எம்பிராய்டரி போட்ட உடைகளை அணிந்த மாணவிகள், உடைகளை மாற்றி வர அறிவுறுத்தப்பட்டனர்.
காலை 10 மணி முதல் 1 மணிவரை நடந்த இந்தத் தேர்வின் தாள்கள் பொதுவாக எல்லோரும் எழுதக் கூடியதாக இருந்ததாகவும், ஆனால் கடந்த ஆண்டை ஒப்பிட்டால் அதைவிட கடினமாக இருந்ததாகவும் தகவல்கள் கூறுகின்றன. பெரும்பாலான கேள்விகள் சிபிஎஸ்சி பாடத்திட்டத்தில் இருந்தே கேட்கப்பட்டதாகத் தெரிகிறது.
இந்த நீட் தேர்வின் முடிவுகள் வரும் ஜூன் 5-ம்தேதி வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது..!