ஜாக்டோ ஜியோ அமைப்பினர் புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து, பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்துவது உள்ளிட்டு பல்வேறு கோரிக்கைகளுடன், இன்று தலைமை செயலகத்தை முற்றுகையிடத் திட்டமிட்டனர்.
இதனைத் தடுக்க, தலைமை செயலகத்துக்குச் செல்லும் சாலையில் தடுப்பு வேலி அமைத்து ஆறாயிரம் போலீசார் குவிக்கப்பட்டு வாகன சோதனை நடத்தினர். கடற்கரை சாலை, காமராஜர் சாலையிலும் வாகன சோதனை நடந்தது.
இந்த நடவடிக்கையின் முன்னதாக தமிழகம் முழுவதும் ஜாக்டோ-ஜியோ அமைப்புகளின் பிரதிநிதிகள் கைது செய்யப்பட்டிருக்க , இன்று காலை சென்னை கோயம்பேட்டில் இருந்து தலைமை செயலகத்தை முற்றுகையிட பேரணியாக வந்த மேலும் சிலரை போலீசார் கைது செய்தனர்.
அத்துடன் கடலூர் வழியாக சில வாகனங்களில் சென்னை வந்த ஜாக்டோ ஜியோ அமைப்பினர் 135 பேருடன், மதுரை மாட்டுத்தாவணி, ஆரப்பாளையம் பகுதியிலிருந்து சென்னைக்குப் போராட்டம் நடத்த கிளம்பிய ஜாக்டோ ஜியோ அமைப்பினரையும் போலீசார் கைது செய்தனர்.