இது வழக்கமான காதல் கதைதான் என்று ஆரம்பத்திலேயே நமக்குத் தெளிவுபடுத்தி விடுவதிலேயே இயக்குனர் தனுஷின் கெத்து தெரிகிறது
சமையல் கலையைக் கல்வியாகப் பயிலும் நடுத்தர வர்கத்து நாயகன் பவிஷ் நாராயண், கோடிஸ்வர பெண்ணான அனுகா சுரேந்திரனை அது தெரியாமலேயே காதலிக்கிறார்.
அனிகாவின் தந்தையான சரத்குமாரை சந்திக்கும் வரை நன்றாக போய்க் கொண்டிருந்த அவர்களது காதல் ஒரு முடிவுக்கு வருகிறது. ஒன்பது மாதங்கள் கழிந்த பிரேக் அப் பிரிவில் அனிகா தொடர்பு எல்லைக்கு வெளியே போய்விட, பவிஷுக்கு வீட்டில் பிரியா வாரியரைப் பெண் பார்க்க அழைத்துச் செல்கிறார்கள்.
சென்ற இடத்தில்தான் இருவரும் பள்ளித் தோழமைகள் என்பது தெரிகிறது. இருவரும் பேசி ஒரு முடிவுக்கு வரும் வேளையில் அனிகாவின் திருமண பத்திரிகை வந்து சேர்கிறது. அனிகாவின் திருமணத்திற்கு சென்று வந்தும் பவிஷின் நிலைமையில் எந்த மாற்றமும் இல்லை என்றால் அவரைத் திருமணம் செய்து கொள்வதாக ப்ரியா வாரியர் வாக்களிக்கிறார்.
அதற்குப் பின் என் ஆனது என்பதுதான் ரசிக்க வைக்கும் திரைக்கதை.
படத்தை இயக்கியிருக்கும் நடிகர் தனுஷின் அக்கா மகனாக இருப்பதால் தனுஷ் போலவே ஒரு பெயர் வேண்டுமென்று பவிஷ் என்று பெயர் வைத்தார்கள் போலிருக்கிறது. ஆனால் பெருமைமிகு அறிமுகம் ஆகி இருக்கிறார் பவிஷ். அப்பாவித்தனமான முகமும், அசத்தலான நடனமும் அவரை விரைவில் உயர்த்தும். அந்தக் குரல் தனுஷ் உடையதா பவிஷ் உடையதா..?
நாயகி அனிகா சுரேந்திரரனுக்கும் இன்னும் அப்பாவித்தனம் மாறாத குழந்தை முகம்தான். ஆனால் பவிஷ் மீதான தன் காதலை சொல்லும் இறுதிக் காட்சியில் அட்டகாசமாக நடித்திருக்கிறார் அனிகா.
ஹீரோவின் நண்பர்களில் ஒருவர் காமெடியனாக இருக்க வேண்டும் என்கிற சினிமா சித்தாந்தப்படியே மேத்யூ தாமஸ் பயன்பட்டிருக்கிறார். ஆனால், உண்மையில் அவர் வரும் காட்சிகள் அனைத்தும் கலகலப்பாகவே இருக்கின்றன.
இன்னொரு நண்பனாக வரும் வெங்கடேஷ் மேனன் மற்றும் ராபியா கதூன் பாத்திரமறிந்து இயல்பாக நடித்திருக்கிறார்கள்.
எதையும் எளிதாக எடுத்துக் கொள்ளும் பாத்திரத்தில் பிரியா வாரியர் மேலும் அழகாகத் தெரிகிறார்.
சித்தார்தா ஷங்கர், ரம்யா ரங்கநாதன் வண்ணமயமான படத்தை மேலும் கலர்ஃபுல்லாக்கி இருக்கிறார்கள்.
அனுகாவின் தந்தையாக வரும் சரத்குமார், கொஞ்சம் வில்லத்தனத்துடனேயே வந்து போகிறார்
பவிஷின் பெற்றோராக வரும் நரேன் – சரண்யா பொன்வண்ணன் இந்த வருடத்தின் சிறந்த பெற்றோராகத் தேர்வு பெறத் தகுதியானவர்கள்.
இப்படி ஒரு வண்ணமயமான ஒளிப்பதிவை சமீபத்தில் பார்த்ததில்லை. ஒளிப்பதிவாளர் லியான் பிரிட்டோ அதகளப்படுத்தி இருக்கிறார்.
ஜி.வி.பிரகாஷ் குமாரின் இசையில் பாடல்கள் அனைத்தும் இளமைத்துள்ளாட்டம் போட்டு இருக்கிறது. ஒரு பாடலில் ஜீவியே தோன்றியும் பாடி அசத்தியிருக்கிறார்.
தனுஷின் எழுத்து இயக்கத்தில் நல்ல மெச்சூரிட்டி தெரிகிறது, அத்துடன் இத்தனை வருட சினிமா அனுபவம் அவருக்கு எந்த இடத்தில் எந்தக் காட்சி எடுபடும் என்பதை நன்றாகவே சொல்லித் தந்திருக்கிறது. எனவே, திரைக்கதை அலுக்காமல் செல்கிறது.
எந்தக் காலத்தில் எடுத்தாலும் காதல் ஒரே மாதிரியானதுதான் ஆனால் அவ்வப்போதைய இளைஞர்களின் மனநிலைக்கு ஏற்ப வரும் படங்கள் எடுபடுகின்றன அந்த வகையில் இன்றைய இளைஞர்களின் மன ஓட்டத்தை சரியாகப் புரிந்து கொண்டு அவர்களின் வாழ்க்கையில் காதல் மற்றும் கல்யாணம் எப்படி எடுத்துக் கொள்ளப்படுகிறது என்பதையும் இதில் இயல்பாக கையாண்டு இருக்கிறார் தனுஷ்.
ஆனால், தான் இறந்து விடுவோம் என்று தெரிகிற அனிகாவின் கோடீஸ்வரத் தந்தை சரத்குமார் அதற்குள் அனிகாவுக்கு ஒரு சிறந்த வாழ்க்கையை அமைத்துக் கொடுக்க முன்வராமல் இருப்பது பலவீனம்.
அதேபோல் அப்பா நோய்வாய்ப்பட்டு இருக்கிறார் என்பதை அவரே சொல்லும்வரை அனிகா அறியவே இல்லை என்பதும் நம்பும்படி இல்லை.
இதைப் போன்று திரைக்கதையில் அங்கங்கே லாஜிக் இல்லாமல் இருப்பதை திருத்தி இருந்தால் இன்னும் கூட படத்தை ரசித்திருக்க முடியும்.
ஆனாலும், இத்தனை இளமைத் துள்ளலுடன் ஜாலியாக சமீபத்தில் படம் வரல்லை. அந்த வகையில் இளைஞர்களைக் கொண்டாட வைக்கும் படமாக இது இருக்கும்.
இந்த Neek – ரொம்ப Neat..!
– வேணுஜி