காலத்துக்கு காலம் ஒரு இளைஞர் பட்டாளம் தமிழ் சினிமாவில் அரங்கேறும். அதில் ஒரு சில குழுக்கள் மட்டுமே பேசப்படுபவையாகவும் அதில் இடம் பெற்ற ஒவ்வொருவரும் தம் திறமையை ஒவ்வொரு துறையிலும் நிரூபித்து உயரத்துக்கு போனவர்களாகவும் இருந்திருக்கிறார்கள்.
நாங்களும் அப்படித்தான் என்கிற அறிவிப்போடு களம் இறங்குகிறது மசாலா பாப்கார்ன் மற்றும் ஒயிட் ஃபெதர் ஸ்டுடியோஸ் நிறுவனங்கள் சார்பில் ஐஸ்வர்யா.எம் மற்றும் சுதா.ஆர் இணைந்து தயாரிக்கும் ‘நண்பன் ஒருவன் வந்த பிறகு’.
இப்படத்தை இயக்குநர் வெங்கட் பிரபு பார்த்துப் பிடித்துப்போய் வெளியிடுவதோடு, ரசிகர்களுக்கு ‘Venkat Prabhu’s gift’ என்ற tag line udan இப்படத்தை குறிப்பிட்டுள்ளது படக் குழுவினரை ஆனந்தத்தில் ஆழ்த்தி இருக்கிறது.
படத்தை இயக்கியிருக்கும் அனந்த் ஏற்கனவே நமக்கு அறிமுகமானவர்தான்.
மீசையை முறுக்கு’ திரைப்படத்தில் ஆதியின் தம்பி கதாபாத்திரத்தில் நடித்தவர் இதில் இயக்குநராகவும், கதாநாயகனாகவும் அறிமுகமாகிறார்.
அவருடன் இதில் ஆர்ஜே விஜய், பவானி ஸ்ரீ, யு டியூபர்கள் மதன் கௌரி, இர்பான், வில்ஸ்பேட், தேவ், மோனிகா, கே.பி.ஒய் பாலா, ஆர்ஜே ஆனந்தி, சபரிஷ், குகன், ஃபென்னி ஆலிவர், தர்மா, வினோத் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள்.
தவிர லீலா, குமரவேல், விஷாலினி என்று நாம் நன்கறிந்த நடிகர்களுடன் தயாரிப்பாளர் ஐஸ்வர்யாவும் ஒரு ஆசிரியை பாத்திரத்தில் நடித்திருக்கிறார்.
ஏ.எச்.காஷீப் இசையில் இப்படத்தின் பாடல்கள் வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்று இருக்கும் நிலையில், பத்திரிகையாளர்களுக்காக டிரைலரை அறிமுகப்படுத்தி படத்தின் தயாரிப்பாளர் ஐஸ்வர்யா, இயக்குநர் – நடிகர் அனந்த், இசையமைப்பாளர் ஏ.எச்.காஷீப், ஆர் ஜே விஜய் உள்ளிட்ட படக்குழுவினர் படம் பற்றிப் பேசினார்கள்.
படம் குறித்து இயக்குநரும் நடிகருமான அனந்த் கூறுகையில், “பல படங்களில் சிறு சிறு வேடங்களில் நடித்திருந்தாலும் மீசையை முறுக்கு படத்தில் ஆதியின் தம்பியாக வந்தது எனக்கு நல்ல பெயர் வாங்கி கொடுத்தது.
நாளைய இயக்குநர்கள் ஐந்தாவது சீசனில் கலந்துக்கொண்டு இறுதிப் போட்டி வரை பயணித்திருக்கிறேன். நண்பன் என்ற குறும்படத்திற்காக விகடன் விருது பெற்றேன்.
பிறகு என் வாழ்க்கையில் நடந்த ஒரு சம்பவம் பற்றி எழுத ஆரம்பித்தேன், அதுதான் இந்த கதை. இந்த கதை அனைவரின் வாழ்விலும் நடந்திருக்கும். இந்த கதையை கேட்டவர்கள் அனைவரும், ”இது என் வாழ்க்கையில் நடந்த சம்பவம் போல இருக்கிறதே..?” என்று சொன்னார்கள்.
ஒரு நல்ல கதை தனக்கானதை தானாகவே தேடிக்கொள்ளும் என்று சொல்வார்கள், சென்னை 600028 போன்ற படங்களுக்கு அப்படி தான் நடந்ததாக சொன்னார்கள், அதுபோல தான் இந்த படத்திற்கான அனைத்து விசயங்களும் தானாகவே நடந்தது.
வெங்கட் பிரபு சாரிடம் கதை சொன்ன போது, ”‘சென்னை 600028’ மூன்றாம் பாகத்திற்கான ஐடியாவாக இருக்கிறதே..?” என்று சொன்னது மட்டுமன்றி, தன்னுடைய பங்களிப்பும் இதில் இருக்க வேண்டும் என்பதற்காக, இந்தப் படத்தை அவர் வழங்குகிறார்.
இது ஏதோ இளைஞர்களுக்கான படம் என்று நினைக்க வேண்டாம். 60 வயதுடையவர்கள் கூட இந்த கதையுடன் தங்களை தொடர்புப்படுத்திக் கொள்வார்கள், அவர்கள் வாழ்க்கையிலும் இதுபோன்ற சம்பவங்கள் நடந்திருக்கும்.
‘சென்னை 600028’, ‘அட்ட கத்தி’ போன்ற படங்கள் எப்படி ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியதோ அதுபோல் ‘நண்பன் ஒருவன் வந்த பிறகு’ படமும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்.” என்றார்.
தயாரிப்பாளர் ஐஸ்வர்யா.எம் படம் பற்றி கூறுகையில்,
“ஊடகத்துறையில் பல தளங்களில் பணியாற்றினேன். பிறகு என் நண்பர் வெங்கட் பிரபு ஆரம்பித்த பிளாக் டிக்கெட் நிறுவனத்தின் பணியாற்றினேன். அதன் பிறகு என்ன செய்யலாம் என்ற நிலையில்தான் என்னை நடிப்பதற்காக அனந்த் அனுகினார். நான் விளம்பர படங்களில் நடித்திருக்கிறேன். ஆனால், திரைப்படத்தில் பெரிய கதாபாத்திரம் என்பது எனக்கு புதிது தான்.
அதனால், அவரிடம் என்னை தான் அந்த வேடத்தில் நடிக்க வைக்க வேண்டுமா? நன்றாக யோசித்து சொல்லுங்கள், என்றேன். அவர் சென்ற பிறகு எனக்கு போன் எதுவும் வரவில்லை. அதே சமயம், அவர் சொன்ன கதை எனக்கு பாதிப்பை ஏற்படுத்தியது. நம் வாழ்க்கைக்கு நெருக்கமான கதையாக இருக்கிறதே, என்று தோன்றியது. அப்போது தான் இப்படி ஒரு கதை மூலமாகத்தான் தயாரிப்பாளராக வேண்டும் என்று முடிவு செய்தேன்.
இயக்குநர் சொன்னது போல் படம் பார்ப்பவர்கள் அனைவரும் கதையோடு தங்களை தொடர்புபடுத்திக் கொள்வதோடு, படம் சினிமாத்தமாக இன்றி, ஒரு எதார்த்தமான வாழ்வியலாக இருக்கும்.” என்றார்.
நடிகர் ஆர்ஜே விஜய் படத்தில் நடித்தது பற்றி கூறுகையில்,
“பாடல் எழுதுவதற்காக தான் இயக்குநர் என்னை அனுகினார். பிறகு கதை பற்றி என்னிடம் சொன்ன போது, நானும் இதில் நடிக்கலாமே, அதற்கான வாய்ப்பு இருக்கிறதே என்று தோன்றியது. ஆனால், அதை எப்படி கேட்பது என்று தயங்கினேன். ஆனால், இயக்குநரும் என்னை நடிக்க வைக்க வேண்டும் என்று விரும்பினார். ஒரு வழியாக இருவரும் எங்கள் விருப்பத்தை வெளிப்படுத்தி விட்டோம், அப்படி தான் இந்த படத்தில் நான் நடிக்க வந்தேன். இயக்குநர் சொன்னது போல் இந்த படம் அனைத்து வயதினருக்குமான படம். இந்த கதை எல்லோருடைய வாழ்விலும் நடந்திருக்கும். கதையை அனந்த் மிக அழகாக எழுதியிருக்கிறார்.
இந்த படத்தில் நான் இரண்டு பாடல்கள் எழுதியிருக்கிறேன். அதில் ஒரு பாடலை தனுஷ் சாரும், மற்றொன்றை ஜி.வி.பிரகாஷ் சாரும் பாடியிருக்கிறார்கள்..!” என்றார்.
இசையமைப்பாளர் ஏ.எச்.காஷீப் கூறுகையில், “’காற்றின் மொழி’ உள்ளிட்ட படங்களில் பணியாற்றிய பிறகு நல்ல கதையில் பணியாற்ற வேண்டும் என்று நினைத்தேன். அப்போது தான் இந்த கதை என்னிடம் வந்தது.
நான் ஏ.ஆர்.ரஹ்மான் சாரிடம் தான் பணியாற்றி வருகிறேன். அதனால், இந்த கதை பற்றி அவரிடம் சொல்லி, “முஸ்தபா…” பாடலை பயன்படுத்த உள்ளோம் என்பதை சொன்னதோடு, உங்களுக்கு மரியாதை செலுத்தும் வகையில் இந்த படம் இருக்கும், என்றேன். அவர் எங்களுக்கு வாழ்த்து தெரிவித்தார்..!” என்றார்.
நடிகர் தேவ் கூறுகையில், “திரைப்பட தயாரிப்பில் பணியாற்றி வந்தாலும் நடிப்பதில் தான் எனக்கு ஆர்வம். சில படங்களில் சிறு சிறு வேடங்களில் நடித்திருக்கிறேன். இந்த கதையில் முக்கியமான வேடத்தில் நடித்திருக்கிறேன். படம் நிச்சயம் அனைவருக்கும் பிடிக்கும்.” என்றார்.
யூடியுப் பிரபலம் வில்ஸ்பேட் கூறுகையில், “நான் மொபைல்போன் மூலம் வீடியோ எடுத்து வெளியிட்டு வருவேன். எனக்கும் நடிக்க வேண்டும் என்பது தான் ஆசை. செல்போனியில் வீடியோ எடுத்து வெளியிடும் நமக்கு வாய்ப்பு கிடைக்குமா? என்றெல்லாம் யோசித்தேன். அப்போதுதான் அனந்த் புரோவிடம் இருந்து அழைப்பு வந்தது. உங்க வீடியோ நன்றாக இருக்கிறது, இப்படி ஒரு படம் பண்ண போறோம், உங்களுக்கு ஒரு வேடம் இருக்கிறது, என்று அழைத்தார். எனக்கு இப்படி ஒரு வாய்ப்பு கொடுத்த அவருக்கு நன்றி. படம் சிறப்பாக வந்திருக்கிறது. அதில் நடிக்கும் போதே நாங்கள் நிஜமான நண்பர்களாக தான் இருந்தோம்..” என்றார்.
படத்தின் வெளியீட்டு தேதி உள்ளிட்ட விவரங்களை விரைவில் அறிவிப்பார்களாம்.
சீக்கிரம் படத்தைக் காட்டுங்க பாய்ஸ்..!