சினிமா ப்ளாட்பார்ம் என்ற புதிய பட நிறுவனம் சார்பில் வி.டி. ரித்திஷ்குமார் தயாரித்துள்ள படம் ‘நான் அவளைச் சந்தித்த போது’. இப்படத்தை எழுதி இயக்கி இருப்பவர் எல்.ஜி ரவிசந்தர். நேற்று இப்படத்தின் பாடல்கள் மற்றும் ட்ரைலர் வெளியீட்டு விழா சென்னை சாலிகிராமத்தில் உள்ள பிரசாத் தியேட்டரில் நடைபெற்றது.
விழாவில் கலந்துகொண்ட வி.டி. ரித்திஷ்குமார் பேசும்போது, “சினிமாவிற்காக நல்ல கதை தேடிக்கொண்டு இருந்தேன். எல்.ஜி.ரவிச்சந்தர் இக்கதையைச் சொன்னார். கேட்டு மனதே உடைந்து போனது. இப்படம் ஒரு உண்மைச்சம்பவம். இந்தப்படத்தை எடுப்பதற்காக நிறைய சிரமப்பட்டு இருக்கிறோம். இதை வெறும் சினிமாவாக பார்க்காமல் என் வாழ்க்கையாக நினைத்து இப்படத்தை எடுத்துள்ளேன்.
இங்கே இருக்கும் சீனியர் தயாரிப்பாளர்கள் நிறையபேர் என்னை என்கரேஜ் பண்ணவில்லை.ஏன் சினிமா எடுக்க வந்தாய்..? என்கிறார்கள். அதை விடுத்து லாபகரமான சினிமா எப்படி எடுப்பது என்று டிப்ஸ் கொடுக்கலாமே..? இதை எல்லாம் தாண்டி இப்படம் கவிதை போல் இருக்கும்..!” என்று பொங்கினார்.
இயக்குநர் எல்.ஜி ரவிசந்தர் பேசும்போது, “நானும் எல்லா மொழியிலும் பல இயக்குநர்களிடம் டிஸ்கஷன் போயிருக்கிறேன். ஆனால், பட வாய்ப்பு மட்டும் கிடைக்கவேயில்லை. இன்னைக்கும் நான் டூவீலர் தான் போறேன். இந்த லைனை தயாரிப்பாளரிடம் சொன்னேன். வாழ்க்கையில் நடந்த இன்சிடெண்டை தான் சொன்னேன். உடனே அவர் படத்தை எடு என்றார். எனக்கு அதுவே மிகவும் பயமாக இருந்தது.
ஆனால் படத்தை தயாரிப்பாளர் பார்த்துவிட்டு நான் எதிர்பார்த்ததை விட நல்லா எடுத்திருக்கிறீர்கள் என்றார். இது எனக்கு ஒரு கோடி வாங்கியதற்கு சமம். ஆனால் இந்தப்படம் வெளியான பின் நான் பெரிய இயக்குநரா வருவேன் என்ற நம்பிக்கை உள்ளது.
படம் வெற்றியடைஞ்சாதான் கார் பரிசு தருவார்கள். ஆனால். என் புரட்யூசர் அதுக்கு முன்னாலேயே ஒரு கார் சாவியைக் குடுத்து விட்டார். இனி அதைத் திருப்பிக் கேட்டால் தர மாட்டேன்..!’ என்று நகைச்சுவையாகப் பேசினார்.
சிறப்பு விருந்தினராக வந்திருந்த கே.பாக்யராஜ் அதைக் குறிப்பிட்டு, “இந்த டைரக்டர் காமெடி நல்லா எழுதுவார் என்றார்கள். பார்த்தால் சீரியஸாக இருந்தார். ஆனால், அவர் பேசும்போது அந்தக் காமெடி சென்ஸ் வெளிப்பட்டது..1′ என்று பாராட்டினார்.
இறுதியில் சிறப்புவிருந்தினர்கள் இசை தட்டை வெளியிட படக்குழுவினர் அனைவரும் பெற்றுக்கொண்டார்கள்.