விஜய்யின் ‘பிகில்’ படத்துக்கு எதிராக, அதன் கதை திருடப்பட்டதாக் கூறிய வழக்கு ஒன்று வந்தது. பின்பு அதை மனுச் செய்தவரே திரும்பப் பெற்ற நிலையில் அடுத்து உயர்நீதி மன்ற அப்பீலுக்குப் போக முடியாத உத்தரவில் அப்படியே நின்று கொண்டிருக்கிறது.
அடுத்து இரு நாள்களுக்கு முன் நடந்த ‘பிகில்’ ஆடியோ விழாவில் முறையான ஏற்பாடுகள் செய்யப்படாமல் டிக்கெட் வாங்கியவர்களெல்லாம் நிகழ்ச்சியைப் பார்க்காமலேயே திரும்பி வந்த நிகழ்வு அரங்கேறியது.
இந்நிலையில் இன்று கோவை மாவட்டத்தில் கறிக்கடை உரிமையாளர்கள் ஒன்றிணைந்து ‘பிகில்’ படத்தில் தங்கள் தொழிலை அவமானப்படுத்தியதாகக் கூறி ‘பிகில்’ படத்தில் ‘விஜய்’ படங்களைக் கிழித்தெறிந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு போராட்டம் நடத்தினார்கள்.
‘பிகில்’ பட முதல் லுக்கில் விஜய் கறிக்கடையில் கறி வெட்டும் மரக்கட்டை மீது கால் வைத்து அமர்ந்திருப்பதைப் போல் இருப்பதால் அது தங்கள் தொழிலை அவமதிப்பதாக இருப்பதாகக் கூறி அவர்கள் போராட்டத்தில் இறங்கினர்.
அவர்களின் உணர்வு மதிக்கப்பட வேண்டியதுதான். ஆனால், முதல் பார்வை வெளியாகி மூன்று மாதங்கள் கழித்தா அது அவர்களுக்குத் தெரிந்தது என்பதுதான் கேள்வி.