ஆதி திரைக்களம் தயாரிப்பில் மு.களஞ்சியம் இயக்கியுள்ள படம் முந்திரிக்காடு. நேற்று இப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா நடைபெற்றது.
விழாவில் அய்யா நல்லக்கண்ணு பேசியதிலிருந்து…
“இந்தப்படம் ஆரம்பிக்கும் போது இருந்ததை விட இப்போது தமிழ்நாட்டில் ஆணவக்கொலைகள் அதிகமாக நடக்கிறது. படம் பார்க்கத்தானா? அதில் கற்றுக்கொள்ள வேண்டும். இந்தப்படத்தின் நல்ல கருத்துக்கள் மக்களிடம் சென்று சேர வேண்டும். இந்தப்படம் வெளிவந்த பின் ஆணவக்கொலைகள் குறையவேண்டும்..!”
இயக்குநர் ராஜு முருகன் –
“பெத்தவன் நாவலை மு.களஞ்சியம் ‘முந்திரிக்காடு’ என்ற பெயரில் படமாக்கி இருக்கிறார் என்று தெரிந்ததும் பொறாமையாக இருந்தது. பல புரட்சிக்கு வித்திட்ட மண் முந்திரிக்காடு.
சாதிய எதிர்ப்பு குடும்பத்தில் இருந்து தான் தொடங்க வேண்டும். தன் குடும்ப உறுப்பினர்கள் கூட சாதிக்கு எதிராக களம் இறங்க வேண்டும். குறிப்பாக கிராமத்தில் இருப்பவர்கள் இதைச் செய்ய வேண்டும். இந்தப்படம் அதற்கு உதவும் என்று நம்புகிறேன்.
இந்தப்படத்தின் நாயகன் புகழ் மிக நல்லப்பிள்ளை. அவன் ஒரு நல்ல நடிகனாக வருவான். சீமான் அண்ணன் அவர்கள் தம்பி புகழுக்கு ஒரு பட்டம் கொடுக்க வேண்டும்..யார் யாரோ சூப்பர் ஸ்டாராக இருக்கும் போது நம் தம்பிக்கும் அவர் ஒரு பட்டம் கொடுக்கலாமே..!”
சி.மகேந்திரன் –
“பெத்தவன் சிறுகதையை மு.களஞ்சியம் தவிர வேறு யாராலும் எடுக்க முடியாது என்பதை படத்தைப் பார்க்கும் போது உணர்ந்தேன். ஜாதிய கொடுமைகளை எதிர்த்து நின்று போராடியவர்களின் பின்னணியில் வந்தவர் மு.களஞ்சியம்.
அதனால்தான் அவரிடம் இருந்து இப்படி ஒரு படைப்பு வருகிறது. மிகப்பெரிய புரட்சிக்கு ஒரு திரைப்படம் காரணமாக இருந்த வரலாறு உண்டு. அதுபோல் தமிழ்நாட்டில் இந்த முந்திரிக்காடு படம் ஒரு மிகப்பெரிய மாற்றத்தை உருவாக்கும். ஒரு தந்தைக்கு இருக்கும் முக்கியமான கடமை தன் மகனின் முயற்சிகளுக்கு கை கொடுக்க வேண்டும் என்பது. அந்த வகையில் என் மகன் புகழ் ஒரு நல்ல நடிகராக வந்துள்ளார் என்று நம்புகிறேன்..!”
சீமான் –
“களஞ்சியத்தின் கனவுப்படைப்பாக முந்திரிக்காடு படம் உருவாகி இருக்கிறது. இப்படத்தில் நான் இடம் பெற்றதற்காக மிகவும் மகிழ்கிறேன். தம்பி பிரியன் இசை அமைத்து பாடல்களை என்னிடம் போட்டுக் காட்டினார். நான் கேட்டுவிட்டுப் பாராட்டினேன்.
புரட்சி என்றால் என்ன என்று எங்களுக்கு கற்று கொடுத்த மகேந்திரன் அவர்களின் மகன் தம்பி புகழுக்கு பட்டம் கொடுக்கச் சொன்னார் ராஜு முருகன். பட்டத்திற்கு தகுதியானவரின் மகனான தம்பி புகழுக்கு ‘எழுச்சி நாயகன்’ என்ற பட்டத்தைக் கொடுக்கலாம்.
முந்திரிக்காடு படம் பரியேறும் பெருமாள் ஏற்படுத்திய தாக்கத்தை விட அதிகத் தாக்கத்தை ஏற்படுத்தும். ஜாதி ஒழியாத வரை நம் சமூகம் அடிமையாகத் தான் இருக்க வேண்டும். நமக்குள் இருக்கும் சாதிமத உட்பகைதான் நம்மை வீழ்த்துகிறது. நம்மை ஓர்மைப்படாமல் பார்த்துக் கொள்கிறது.
மருத்துவமனையில் ரத்தம் தேவைப்படும்போது எவனும் சாதி பார்ப்பதில்லை. காரணம் சாதிக்கு ரத்தவெறி இருக்கிறது. ரத்தத்திற்கு சாதி வெறி இல்லை. நாங்கள் பொழுது போக்கிற்காக போராடவில்லை. எங்களுக்கு அடுத்த தலைமுறையாவது நன்றாக வாழவேண்டும் என்று தான் போராடுகிறோம். அப்படியான போராட்டக்காரர்களில் ஒருவனான தம்பி களஞ்சியம் இயக்கி இருக்கும் முந்திரிக்காடு பெரிய மாற்றத்தை உண்டுபண்ணும்..!”