November 22, 2024
  • November 22, 2024
Breaking News
  • Home
  • திரைப்படம்
  • கௌதம் கார்த்திக்குக்கு நன்றிக்கடன் பட்டிருக்கும் படக்குழு
July 4, 2018

கௌதம் கார்த்திக்குக்கு நன்றிக்கடன் பட்டிருக்கும் படக்குழு

By 0 1210 Views

சினிமாவில் கொஞ்ச காலம் முன்பு வரை படம் வெளியாகும் சமயத்தில் தயாரிப்பாளரும், இயக்குநரும் பேசிக்கொள்ள முடியாத அளவுக்கு விலகி நிற்பார்கள். ஆனால், காலம் மாறிவிட்டது.

ஆரோக்கியமான படம் எடுக்கும் தயாரிப்பாளர்கள் திட்டமிட்டு படங்களை எடுப்பதால் பட வெளியீட்டுக்கு முன்பு படக்குழுவுக்கு நன்றி தெரிவிப்பது ஒரு கலாச்சாரமாகவே இப்போது மாறி வருகிறது.

அந்தக் கலாச்சாரத்தின் அடிப்படையில் ஜூலை 6 வெள்ளிக்கிழமையன்று வெளியாகும் படத்துக்காக தனது படக்குழுவுக்கு தனது மனதில் ஆழத்தில் இருந்து இப்படி நன்றி தெரிவிக்கிறார் தயாரிப்பாளர் ஜி.தனஞ்செயன்.

“இயக்குனர் ‘திரு’வுடன் சேர்ந்து பணியாற்றுவது மிகவும் மகிழ்ச்சிகரமான விஷயம். அவரது உற்சாகம், பொறுப்பு, நேர்மை, அர்ப்பணிப்பு, புதுமையான சிந்தனை, அணியின் புத்துணர்ச்சியை மேம்படுத்துபவர் என முழு அணியும் நேசிக்கும் ஒரு நல்ல தலைவராக இருக்கிறார்.

ஒளிப்பதிவாளர் ரிச்சர்ட் எம்.நாதன் தன் முழுமையான அர்ப்பணிப்பை இந்தத் திரைப்படத்துக்கு அளித்திருக்கிறார். மேலும் அவருடைய காட்சியமைப்புகள் ரசிகர்களை மிகவும் ஈர்க்கும்.

அதேபோல் இசையமைப்பாளர் சாம் சி.எஸ் இந்த படத்தின் மிகப்பெரிய சொத்து. படத்தை முடித்து வீட்டுக்கு செல்லும் ரசிகர்கள் அவரது பாடல்கள் மற்றும் பின்னணி இசையை தங்களோடு எடுத்துச் செல்வார்கள்.

எடிட்டர் சுரேஷ் டி.எஸ் குழுவின் தன்மையுடன் இணைந்து பயணிக்கும் ஒரு அற்புதமான கலைஞர். அவரது திறமையான எடிட்டிங், திரைக்கதையை இன்னும் சுவாரஸ்யமாக்கும்.

‘மிஸ்டர். சந்திரமௌலி’ திட்டமிட்ட பட்ஜெட்டில் முடிக்க முக்கியமான ஒரு காரணம் கலை இயக்குநர் ஜாக்கி. குறிப்பிட்ட பட்ஜெட்டில், சிக்கலான சூழல்களின் கீழ் பணிபுரிந்தாலும் கூட சிறந்த ‘அவுட் புட்’ கொடுக்க அவர் தயங்கவில்லை.

பார்வையாளர்களின் அனுபவத்தை மேம்படுத்தும் முக்கியமான ஒரு அம்சம் ஒலி. படத்தின் ரிலீஸுக்கு பிறகு விஜய் ரத்னத்துடைய வேலை சந்தேகத்திற்கு இடமின்றி மிகவும் பேசப்படும் என்று நான் உறுதியாக நம்புகிறேன்.

Mr. Chandramouli unit

Mr. Chandramouli unit


ஜெயலட்சுமியின் ஆடைகள் மற்றும் ஆடை வடிவமைப்பு படத்தை இன்னமும் அலங்கரித்து, வண்ணமயமாக்கி உள்ளன.

இந்தப் படத்தின் மிகவும் சுவாரஸ்யமான அம்சங்களில் ஒன்று அதிரடி சண்டைக்காட்சிகள். ‘ஸ்டண்ட்’ சில்வா இல்லையென்றால், இந்த மாதிரி ஒரு அற்புதமான ஆக்‌ஷன் காட்சிகளை நாங்கள் பெற்றிருக்க மாட்டோம்.

நடித்த கலைஞர்களைச் சொன்னால் நவரச நாயகன் கார்த்திக் நடிக்க ஒத்துக் கொண்டதுதான் இந்தப் படத்தின் உச்சக்கட்ட மகிழ்ச்சி. கார்த்திக் இல்லாவிட்டால், இந்தப் படம் இந்த அளவுக்கு பேசப்பட்டிருக்காது. இது தந்தை-மகன் என்ற தனித்துவமான கதையம்சத்தைத் தழுவி நிற்கிறது.

கௌதம் கார்த்திக் ஒரு தொழில்முறை நடிகர், அவர் நடித்துள்ள பாத்திரத்திற்கு பொருத்தமானதாக இருக்கும்படி கூடுதல் முயற்சிகள் எடுத்தார். ஒவ்வொரு ஃபிரேமிலும் அவரது நடிப்பை வெளிப்படுத்த, அர்ப்பணிப்புடன் நிறைய விஷயங்களைச் செய்தார். அது படத்தின் மதிப்பை இன்னும் அதிகப்படுத்தியது. மேலும் கார்த்திக் படத்தில் நடிக்க முக்கிய காரணம் கௌதம் கார்த்திக்தான். ஒட்டுமொத்த குழுவும் அவருக்கு நன்றிக்கடன் பட்டிருக்கிறது.

தொடர்ச்சியாக அடுத்தடுத்த படங்கள் இருந்தாலும், ரெஜினா கஸாண்ட்ரா இந்த படத்திற்கு தேதிகள் ஒதுக்கி முழு ஆதரவு கொடுத்தார். அவர் பணிபுரியும் எல்லோரையும் மதித்து, தொடர்புகளை இயல்பாக்கி வைத்திருந்தார். எந்தவிதமான அழுத்தங்களையும் அவர் தரவில்லை. இது ஒரு அரிய இயல்பு. திரைப்படத்தை விளம்பரப்படுத்தவும், எங்களுக்கு முழு ஒத்துழைப்பு கொடுத்தார்.

பல படங்களில் பிஸியாக இருக்கும் வரலட்சுமி சரத்குமார் போன்ற ஒரு நடிகை, எங்கள் படத்தில் ஒரு முக்கியக் கதாபாத்திரத்தை ஏற்றுக் கொண்டு நடித்து எங்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தினார். படத்தின் ஹைலைட்டான விஷயம் அது.

நடிகர் சதீஷ், வெறும் நடிகராக மட்டுமல்லாமல், படம் சிறப்பாக வருவதற்கு எல்லா வகைகளிலும் தன் பங்களிப்பைத் தந்தார்.

மகேந்திரன் சார் போன்ற ஒரு பிதாமகருடன் பணிபுரிவது ஒரு தயாரிப்பாளராக எனக்கு மறக்க முடியாத தருணம். ஒரு சிறப்பு கதாபாத்திரத்தில் நடிக்க அவர் ஒப்புக்கொண்டார். அகத்தியன் சாரின் வருகையும் இந்த திரைப்படத்திற்கான கூடுதல் மரியாதை.

சந்தோஷ் பிரதாப் நடித்துள்ள கதாபாத்திரம் எல்லோருக்கும் ஆச்சரியமாக இருக்கும் என்று நான் உறுதியாக நம்புகிறேன். மைம் கோபியின் அர்ப்பணிப்பு அசாதாரணமானது. விஜி சந்திரசேகர் மற்றும் வெங்கட் சுபா ஆகியோரின் நடிப்பு மிகவும் பாராட்டக்கூடியது.

இவர்களின் சீரிய முயற்சி மற்றும் கடின உழைப்பு தந்த பலன் தான், இன்று இந்த படத்துக்கு 300 திரைக்காட்சிகள் என்ற செய்தி. ரசிகர்கள் உத்திரவாதமாக ஒரு ஜனரஞ்சகமான திரைப்படத்தை கண்டு களிக்கலாம்..!”