ஜூலை 6ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகிறது ‘கிரியேட்டிவ் மீடியா எண்டர்டெயினர்ஸு’ டன் இணைந்து பாஃப்டா மீடியா வொர்க்ஸ் சார்பில் தனஞ்செயன் தயாரித்திருக்கும் ‘மிஸ்டர் சந்திரமௌலி’.
‘திரு’ இயக்கத்தில் தந்தை, மகனான நவரச நாயகன் கார்த்திக் மற்றும் கௌதம் கார்த்திக் இருவரும் முதன் முறையாக தந்தை மகனாகவே இணைந்து நடித்திருக்கிறார்கள். இவர்களுடன் ரெஜினா கஸாண்ட்ரா, வரலக்ஷ்மி சரத்குமார், சதீஷ், மகேந்திரன், அகத்தியன் ஆகியோர் நடிக்க, சாம் சிஎஸ் இசையமைத்துள்ள இந்த படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பில் படத்தின் படைப்பாளிகள் சிந்திய துளிகள்…
இயக்குநர் திரு –
“அப்பா மகன் பற்றி நிறைய நல்ல படங்கள் வந்திருக்கின்றன. இது வேறு ஒரு பரிணாமத்தில் இருக்கும். கார்த்திக், கௌதம் கார்த்திக் இணைந்து நடித்தது மாதிரி தமிழ் சினிமாவில் நடக்குமா என்று தெரியவில்லை. சென்னை, டெல்லி, பெங்களூரு ஆகிய மாநகரங்களில் நடக்கும் ஒரு விஷயத்தை எடுத்து கதையாக்கி ஒரு படத்தை எடுத்திருக்கிறோம்.
கௌதம் கார்த்திக்கின் மெனக்கெடல் இந்த படத்தின் பெரிய பலம். படப்பிடிப்பில் நேரம் தவறாமல் வந்தது கௌதம் கார்த்திக்கின் சிறப்பான குணம், அதை அவர் தொடர்ந்து கடைபிடிக்க வேண்டும்.
ரெஜினா மிகவும் இனிமையான ஒரு நடிகை. ‘பைரவி’ என்ற கதாபாத்திரம்தான் சந்திரமௌலி படத்தின் முதுகெலும்பு. அந்த கதாபாத்திரத்தில் வரலக்ஷ்மி நடித்திருக்கிறார். மகேந்திரன் சார் வில்லனாக சிறப்பாக நடித்திருக்கிறார். அகத்தியன் சார் கார்த்திக்கின் நண்பராக நடித்துள்ளார்.
ரிச்சர்ட் எம் நாதன் இல்லையென்றால் 45 நாட்களில் படத்தை முடித்திருக்க வாய்ப்பே இல்லை. திரைப்படங்களை ரசிகர்களிடம் கொண்டு சேர்ப்பதில் தனஞ்செயன் மிகச்சிறந்த ஒரு தயாரிப்பாளர்..!”
நாயகன் கௌதம் கார்த்திக் –
“நான் சிறுவயதில் ஊட்டியில் படிக்கும் போது, என் அப்பாவோடு பழக வாய்ப்பு கிடைக்கவில்லை. ‘கடல்’ படத்தில் சென்னை வந்த பின்புதான் அவரோடு பக்கத்தில் இருந்து பழக ஆரம்பித்தேன்.
ஆனால் இந்தப் படத்தில்தான் படப்பிடிப்பில் அவரை நேரில் பார்த்தேன். அவரின் உழைப்பை பார்த்து வியந்தேன். அப்பாவின் இன்னொரு முகத்தைப் பார்க்க இதில் வாய்ப்பு கிடைத்தது. இயக்குனர் திருவுக்கு யாரிடம் எப்படி வேலை வாங்க வேண்டுமென்று தெரியும். சிறப்பான படத்தை அவர் கொடுத்திருக்கிறார்..!”
நாயகி வரலக்ஷ்மி –
அப்பாவியான, கியூட்டான ஒரு கதாபாத்திரத்தை எனக்கு கொடுத்திருக்கிறார் இயக்குனர் திரு. கார்த்திக், ‘குட்டி ஷைத்தான்’ கௌதம் கார்த்திக் இருவருடனும் இணைந்து நடிப்பதற்காகவே படத்தை ஒப்புக் கொண்டேன். ரெஜினாவும், நானும் ஒரே படத்தில் நடித்தாலும் சண்டை போட்டுக் கொள்ளாத நாயகிகள்..!”
நகைச்சுவை நடிகர் சதீஷ் –
“கௌதம் கார்த்திக் நடித்த ‘இருட்டு அறையில் முரட்டு குத்து’ படத்தில் கதாபாத்திரமாகவே வாழ்ந்திருக்கிறார். ‘ஏதோதோ…’ பாடல் ரெஜினாவுக்கு நிச்சயம் ‘ரெஜினா ஆர்மி’ ஆரம்பிக்க வைக்கும். ஷூட்டிங்கில் கார்த்திக் சார் வந்தவுடனே எல்லோருக்கும் முத்தம் கொடுப்பார், அதுக்காகவே லைன் கட்டி நிற்போம்..!”
நாயகி ரெஜினா கஸாண்ட்ரா –
“தமிழ் சினிமாவில் இருக்கும் ஒரு சில சிறந்த தயாரிப்பாளர்களில் தனஞ்செயன் சாரும் ஒருவர். ‘ஏதோதோ’ பாடலின் முக்கியத்துவத்தை எனக்கு விளக்கி, என்னை அதில் நடிக்க ஒப்புக் கொள்ள வைத்ததே திரு தான். அந்த பாடல் வைரலாகி போய்க் கொண்டிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. கார்த்திக் சாரிடமிருந்து நிறைய கற்றுக் கொண்டேன்..!”
தயாரிப்பாளர் தனஞ்செயன் –
“படம் சிறப்பாக வந்ததற்கு முக்கிய காரணம் இயக்குனர் ‘திரு’ தான். அவர் தயாரிப்பாளர்களின் இயக்குனர். சமீபத்தில் ஒரு குறிப்பிட்ட 50 பேருக்கு படத்தை திரையிட்டு காண்பித்தோம், நல்ல வரவேற்பு கிடைத்தது.
கார்த்திக் சாரை படத்துக்குள் கொண்டு வர முக்கிய காரணம் கௌதம் கார்த்திக். “இந்தப் படத்தை உங்களுக்காகதான் பண்றேன்…” என்று சொல்லி உரிமையோடு நடிக்க வந்தார் வரலக்ஷ்மி. ரெஜினா நடிப்பில் அடுத்த கட்டத்துக்குப் போக நிறைய வாய்ப்புகள் உள்ள படமாக இது அமைந்திருக்கிறது.
300 திரையரங்குகளில் படத்தை வெளியிட இருக்கிறோம், எல்லா ஊர்களிலும் படத்துக்கு எதிர்பார்ப்பு பெருகி இருக்கிறது..!”