பட வெளியீட்டுக்கு முன்பே படத்தலைப்பாலும், படத்தைப் பற்றிய விளக்கத்தாலும் அதிகம் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய படம்.
மோசடி என்ற தலைப்பில் ‘ச’வை சிறியதாகப் போட்டு பரபரப்பை ஏற்படுத்தியதுடன் பண மதிப்பிழப்பு அமலுக்கு வந்தபோது பெரும் பெருச்சாளிகள் எப்படி பணத்தை மாற்றினார்கள் என்று சொல்ல வந்த படமாக இருந்ததால் பெரும் ஆர்வத்தைத் தூண்டியது.
அந்த ஆர்வத்தை இயக்குநர் கே.ஜெகதீசன் நேர்செய்தாரா பார்க்கலாம்.
கதாநாயகன் விஜு, 100 கோடி ரூபாயை சேர்த்து விடும் நோக்கம் கொண்டு தன் நண்பர்களுடன் சேர்ந்து மக்களை பல வழிகளிலும் ஏமாற்றி ‘சதுரங்க வேட்டை’ ஆடிக் கொண்டிருக்கிறார். சாமர்த்தியமாகச் செயல்பட்டாலும் முழு கிணறு தாண்டும் முன் போலீஸில் சிக்கிக் கொள்கிறார்.
ஏன் இப்படி ஏமாற்றினார் என்பது குறித்த விசாரணையின் போது, பணமதிப்பிழப்பு நடவடிக்கையின் போது அமைச்சர் ஒருவரின் பணத்தை மாற்றும் பொறுப்பை ஏற்றுக்கொண்டு நூறு கோடி ரூபாய்க்கு 2000 ரூபாய்களாக மாற்ற, அந்தப்பணம் களவு போகிறது. தவறிப்போன 100 கோடியை திருப்பித்தர அமைச்சர் ஒரு மாதம் கெடு கொடுத்த பிளாஷ்பேக்கைச் சொல்கிறார் விஜு.
விஜுவிடமிருந்து எப்படி பணம் காணாமல் போனது என்பதும், போலீஸ் நடவடிக்கையும்தான் மீதிப்படம்.
ஆறடி உயர விஜூ மோசடிகள் செய்யும் கதாநாயகன் வேடத்துக்கு பொருத்தமாக இருக்கிறார். செய்யும் மோசடிகளுக்காக பல கெட் – அப்புகள் போட நேர்ந்தது நடிப்புக்காகக் கிடைத்த நல்ல பயிற்சி. அதில் முடிந்த அளவுக்கு நடித்திருக்கிறார்.
நாயகி பல்லவி டோராவுக்கு சிறிய கேரக்டர்தான். குறைவான காட்சிகளில் வந்தாலும் விஜுவின் புது மனைவிக்கே உரிய வெட்கத்தையும் காதலையும் வெளிப்படுத்துகிறார். விஜு, டோரா இருவருக்குமே இருக்கும் பொதுவான குறை வசன மாடுலேஷன்தான். இருவரும் அதில் பயிற்சி எடுக்க வேண்டும்.
இவர்களைத் தவிர அமைச்சராக வரும் விஜயனும் அவரது தம்பியாக வருபவரும் கவனிக்க வைக்கிறார்கள்.
முதல் பாதிப்படம் விஜு ஏமாற்றும் காட்சிகளால் நிரம்பி இருப்பதால் இதுபோல் சில படங்கள் பார்த்துவிட்ட களைப்பு மேலிடுகிறது. இரண்டாம் பாதியில் மட்டும் கதைக்குள் வருகிறார் இயக்குனர் ஜெகதீசன்.
படத்தின் ஹைலைட்டான விஷயம் பணமதிப்பிழக்கத்தின் போது எப்படி எல்லாம் பணத்தை மாற்றினார்கள் என்பதைக் காட்டியிருப்பதுதான். இதே சிரத்தையை படம் முழுவதும் காட்டியிருந்தால் கவனிக்கக்கூடிய படமாக இருந்திருக்கும். அதேபோல் இயக்கத்தில் நாடகத் தன்மையைக் குறைத்திருந்தால் படத்தின் மேல் நம்பகத் தன்மையும் கூடியிருக்கும்.
ஆர்.மணிகண்டனின் ஒளிப்பதிவும், ஷாஜகானின் இசையும் சராசரியாக இருக்கின்றன. இன்றைய காலகட்டத்தில் பாடல்கள் வெற்றி பெற்றாலே படத்துக்கு பாதி வெற்றி கிடைத்ததாக பொருள்.
மோசடி – பெரிய இயக்குநர்கள், நடிகர்களுக்கு இல்லாத தைரியமான முயற்சியில் படமெடுத்து வெளியிட்டதே வெற்றிதான்..!