October 30, 2024
  • October 30, 2024
Breaking News
December 27, 2023

மூத்தகுடி திரைப்பட விமர்சனம்

By 0 456 Views

அந்த ஊரின் பெயரே ‘மூத்த குடி’ என்கிறார்கள். அந்த ஊரின் ‘மூத்த குடி’யாக கே. ஆர். விஜயாவும், அவரது தம்பி ‘யார் கண்ணனு’ம் இருக்கிறார்கள். அவர்கள் சொல்லுக்கு அந்த ஊர் மக்கள் எல்லாம்  கட்டுப்படுகிறார்கள்.

ஊருக்கு ஊர் அரசாங்கமே மதுபானக்கடைகளைத் திறந்து நடத்தும் இந்தக் காலகட்டத்தில் தொடங்குகிறது கதை. தங்களது ஊருக்குள் மதுபானக் கடை திறக்கப்பட கூடாது என்று ஊர்மக்களைத் திரட்டி உண்ணாவிரதம் இருக்கிறார் சரக்குட்டி என்கிற பெரியவர். ( அவர் பெயரிலேயே சரக்கு இருக்கிறதே என்று கேட்காமல் தொடர்ந்து படியுங்கள்…)

அவரைத் தொலைக்காட்சி நிருபர் ஒருவர் பேட்டி எடுக்க, அப்போது தங்கள் ஊரின் வரலாறு சொல்கிறார் அவர். இப்படியாக ஃப்ளாஷ் பேக் போகிறது கதை.

பல வருடங்களுக்கு முன்னால் கே ஆர் விஜயாவும் ஊர் மக்களும் ஒரு விசேஷத்திற்காக லாரியில் சென்று கொண்டிருக்க லாரி டிரைவர் சாராயம் சாப்பிடுவதற்காக ஓரிடத்தில் வண்டியை நிறுத்தும்போது ஏற்பட்ட பிரச்சனையால் லாரி விபத்துக்குள்ளாகி அதில் வந்தவர் கள் பெரும்பாலும் இறந்து போகிறார்கள்.

தப்பிப் பிழைத்தது கே ஆர் விஜயா அவர் தம்பி யார் கண்ணன் மற்றும் சில குழந்தைகள். பெற்றோரை இழந்த அந்த குழந்தைகளை இவர்களே எடுத்து வளர்க்கிறார்கள்.

அதிலிருந்து அந்த ஊருக்குள் யாரும் குடிக்க கூடாது என்று கட்டுப்பாடு விதிக்கிறார்கள் அப்படி குடித்தால் ஊரை விட்டு அவர்கள் ஒதுக்கி வைக்கப்படுவார்கள். இந்நிலையில் அந்த ஊருக்குள் சாராய தொழிற்சாலை நடத்த தொழிலதிபர் ராஜ்கபூர் சதி திட்டம் தீட்ட என்ன ஆனது என்று போகிறது பிளாஷ் பேக்.

இந்தக் கதைக்குள் வன்மமான ஒரு காதல் கதையையும் உள்ளே வைத்திருக்கிறார் இயக்குனர் ரவி பார்கவன்.

யார் கண்ணன் வளர்க்கும் ஆண் குழந்தைகள் நாயகர்கள் தருண்கோபி மற்றும் பிரகாஷ் சந்திராவாக வளர்ந்திருக்க, கே.ஆர்.விஜயா வளர்க்கும்.பெண் குழந்தை நாயகி ‘அன்விஷா ‘வாகிறது.

குடும்பம் மொத்தமும் மூத்தவர் தருண் கோபிக்கு அன்விஷாவை திருமணம் செய்து வைக்க ஆசைப்பட, தருண் கோபியும் அன்விஷா மேல் அத்தனைக் காதல் கொண்டிருக்க ஆனால் அன்விஷா காதலிப்பது தம்பி பிரகாஷ் சந்திராவைத்தான்.

இதைத் தெரிந்து கொண்ட தருண் கோபி உக்கிரமாக… மேற்படி சாராய ஆலை பிரச்சனையும், இந்தக் காதல் பிரச்சினையும் எவ்வாறு முடிவுக்கு வருகிறது என்று சொல்கிறது கிளைமாக்ஸ்.

தருண் கோபிக்கு நெடுநாள் கழித்து ஒரு ஹீரோ வேடம் கிடைத்திருக்கிறது. ஆனால் முதல் பாதி முழுவதும் சாராயப் பிரச்சினையாகவே ஓடிக் கொண்டிருக்க இரண்டாவது பாதியில்தான் அவரது காதல் கதை வருகிறது.

எஸ்.ஜே.சூர்யாவெல்லாம் உணர்ச்சி. வசப்பட்டு நடித்துதானே பெயர் வாங்குகிறார் என்று தருண் கோபியும் கிளைமாக்சுக்கு முந்தைய காட்சியில் ஓவர் ஆக்டிங் பண்ணி கவனத்தைக் கவர முயற்சி செய்கிறார்.

அவரது தம்பியாக வரும் பிரகாஷ் சந்திரா பார்வைக்கு அண்ணன் போல இருக்கிறார். அவர் மீது இயக்குனருக்கு என்ன கோபமோ அவர் முகத்தில் எந்த எக்ஸ்பிரஷனும் வருவதில்லை என்று நாயகி கிண்டல் அடிப்பது போல் வசனங்களை எழுதி இருக்கிறார்.

நின்ற இடத்திலேயே நின்று வசனங்களை பேசினாலும் கே ஆர் விஜயா, கண்களிலேயே உணர்ச்சிகளையும் பாவங்களையும் காட்டி நடித்து விடுகிறார்.

அவரது தம்பியாக வரும் யார் கண்ணனும் சீரியல்களில் எல்லாம் நடித்துவிட்ட அனுபவத்தில் இந்த பாத்திரத்தை எளிதாக நடித்து விடுகிறார். அவர் பெயரை பழையசோறு என்று வைத்திருப்பது படத்துக்கு எந்த வகையிலும் உதவவில்லை.

படம் சீரியஸாக போய்க்கொண்டிருக்கிறது என்று ஆர் சுந்தர்ராஜனையும் சிங்கம் புலியையும் வைத்து ஒரு நகைச்சுவை ட்ராக் ரெடி பண்ணி இருக்கிறார்கள். அது அங்கங்கே நம்மைச் சிரிக்க வைக்கிறது.

கந்தா ரவிச்சந்திரன் ஒளிப்பதிவுக்கு சரியாக பட்ஜெட் ஒதுக்கவில்லை போலிருக்கிறது. அங்கங்கே குண்டு பல்பில் எடுத்தது போன்ற காட்சிகள் இருள் சூழ்ந்து விடுகின்றன.

ஜே.ஆர் .முருகானந்தத்தின் இசை 90களில் படம் பார்த்த அனுபவத்தை ஏற்படுத்துகிறது.

மாசக்கடைசி பட்ஜெட் நம் கையைக் கடிப்பது போலவே இந்த வருடக் கடைசியில் வெளியாகும் பெரும்பாலான படங்களில் பட்ஜெட் குறைவாக இருந்து நேர்த்தியுள்ள படங்கள் தியேட்டரில் இறங்குவதில்லை.

ஆனாலும் பொழுதுபோக்குக்காக இல்லாமல் ஒரு நல்ல செய்தி சொல்லி விட வேண்டும் என்று மது விலக்கை அமல்படுத்த மக்களைத் தயார் செய்யும் இந்த முயற்சியைக் கைத்தட்டி வரவேற்கலாம்.

மூத்த குடி – குடிக்காதே… குடி கெடுக்காதே..!