தரமான வெற்றிப் படங்களை தொடர்ந்து தயாரித்து வரும் ஆக்சஸ் ஃபிலிம் ஃபேக்டரி தயாரிப்பாளர் ஜி. டில்லிபாபு தயாரிப்பில் இப்போது வெளிவரவிருக்கும் படம் ‘ மிரள் ‘.
படத்தைப் பார்ப்பவர்கள் மிரண்டு போக வேண்டும் என்பதற்காகவே இப்படி ஒரு தலைப்பை வைத்திருக்கிறார் படத்தின் இயக்குனர் எம்.சக்திவேல்.
தயாரிப்பாளரைப் போலவே தரமான படங்களை வெளியிடும் சக்தி பிலிம் ஃபேக்டரியின் எஸ்.சக்திவேலன் வெளியிடும் காரணத்தாலும் இந்தப் படம் கவனம் பெறுகிறது.
படத்தில் நாயகனாக நடித்திருப்பவர் பரத். அவரது ஜோடியாக வாணி போஜன் நடிக்க இவர்களை தவிர இன்னும் சில பாத்திரங்கள் மட்டுமே இந்த படத்தில் பிரதானமாக இடம் பெற்று இருக்கின்றன.
இதற்கும் இந்தப் படத்தின் இயக்குனர் எந்த பெரிய இயக்குனரிடமும் பணிபுரியவில்லை. அவர் எடுத்த ஒரு குறும்படமே அவருக்கு இந்த வாய்ப்பை பெற்று தந்திருக்கிறது. இவர் எழுதிய ஸ்கிரிப்ட் படித்துப் பார்த்த தயாரிப்பாளர் டில்லி பாபு இவரது திறமை மேல் நம்பிக்கை வைத்து இந்தப் படத்தை இயக்கும் பொறுப்பைக் கொடுத்திருக்கிறார்.
இயக்குனர் சக்திவேலும், நாயகன் பரத்தும் பத்திரிகையாளர்களைச் சந்தித்தனர். அப்போது பரத்,
“இந்தப் படத்தின் கதையைக் கேட்கச் சொல்லி தயாரிப்பாளர் அனுப்பிய போது இன்னும் ஒரு திரில்லர் படமா என்று முதலில் தயங்கினேன். ஏனென்றால் தொடர்ந்து எனக்கு திரில்லர் படங்களாகவே வந்து கொண்டிருப்பதில் ஏற்பட்ட அலுப்புதான்.
யாராவது நல்ல காதல் கதையாக என்னுடைய ஆடல் திறமையை காண்பிக்கும் முகமாக ஒரு ஸ்கிரிப்ட்டை கொண்டு வந்தால் உடனே ஒப்புக் கொள்வதாக இருந்தேன். ஆனால் இந்தப் படத்தின் ஸ்கிரிப்ட் கேட்டதும் தவிர்க்க முடியாமல் ஒப்புக்கொண்டேன்.
இந்தப் படத்தில் டீசரை பார்த்தால் இது ஒரு ஹாரர் படம் போல தோன்றும். ஆனால் படம் பார்த்தால் மட்டுமே இது எந்தவிதமான கதையைக் கொண்டிருக்கிறது என்பது புரியும். இந்தப் படத்துக்காக போடப்பட்ட ஒரு உயரமான காற்றாலை செட்டில் 80 அடி உயரத்தில் நெருப்பில் நின்று கொண்டு நடித்தது மறக்க முடியாத விஷயம்..!” என்றார்.
படம் பற்றி இயக்குனர் எம்.சக்திவேல், ” பரத்தும் வாணி போஜனும் கணவன்-மனைவி. இவர்களுக்கு 8 வயதில் ஒரு குழந்தை உள்ளது. சென்னையில் வசிக்கும் இவர்களுக்கு பல்வேறு பிரச்னைகள் உள்ளன. இதனால் தென்காசி குல தெய்வ கோவிலில் பூஜை செய்வதற்காக வருகின்றனர்.
பூஜை முடிந்து அந்த பகுதியில் உள்ள கல்லா காற்றாலை வழியாக இரவில் காரில் திரும்புகின்றனர். அவர்களுக்கு ஏற்படும் சிலிர்ப்பான அனுபவங்கள், அதிலிருந்து அவர்கள் எப்படி வெளிவருகிறார்கள் என்பதுதான் படத்தின் கதை. காரும் படத்தின் ஒரு கேரக்டராக இருக்கிறது.
காற்றாலை பின்னணியில் இதுவரை எந்த படமும் வரவில்லை. கடந்த 24ம் தேதி வரை காற்றாலை பகுதியில் படப்பிடிப்பு நடந்தது. 150 அடி உயர காற்றாலை அமைத்து படப்பிடிப்பு நடத்தினோம். வித்தியாசமான திரில்லர் அனுபவமாக இப்படம் இருக்கும்..!” என்று கூறினார்.
மேலும் கிரைம் திரில்லர் பாணியில் உருவாகியுள்ள இப்படத்தின் டீசர் வெளியாகி மக்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்று வருகிறது. விரைவில் வெள்ளித்திரைக்கு வரவிருக்கிறது ‘மிரள் ‘.
மிரளத் தயாராக இருங்கள்..!