சைகை மொழியில் சத்தமாக ஒரு கருத்தை இந்தப்படத்தின் மூலம் சொல்ல முடிவெடுத்திருக்கிறார் இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ்.
கதை என்னவோ இயல்பாக, பழைய பாதையில்தான் ஆரம்பிக்கிறது. நான்கு ஆணும், ஒரு பெண்ணும் நண்பர்கள் என்பது எண்பதுகளிலிருந்து சப்பிப்போட்ட பனங்கொட்டை லைன். அதிலும் அதில் ஒரு ஆண், ஒரு பெண்ணைக் காதலிப்பது அந்தப் பனங்கொட்டையை வெயிலில் காயவைத்ததைப் போன்றது.
இதில் இருக்கும் ஒரே சுவாரஸ்யம், அவர்கள் அனைவரும் காது கேளாத, வாய்பேச முடியாத மாற்றுத் திறனாளிகள் என்பதுதான். சனந்த், தீபக், சஷாங்க், அனிஷ், இந்துஜா என்கிற அந்த ஐந்துபேரில் சனந்த், இந்துஜாவைக் காதலிக்கிறார். அந்தக் காதலைச்சொல்ல தனிமையில் அவளைக் கூட்டிப்போக சனந்த் நினைக்க, நண்பர்களும் உடன்வர… ஒரு விபத்தும் நடக்க.. அதற்குப் பிறகுதான் ‘பாதரசம்’ பற்றிக்கொள்கிற ‘பக்… பக்…’ திருப்பங்கள்.
இது பிரபுதேவா நடித்த படம் என்பது இடைவேளைக்கு சற்றுமுன்புதான் தெரிய வருகிறது. அதிலும் இதுவரை ஆடியே நம்மை மிரட்டிய டான்ஸ் மாஸ்டர் இதில் ஆடாமல், அசங்காமல் ஆனால்… மிரட்டியிருக்கிறார். அவர் கேரக்டரை சஸ்பென்ஸ் ஆக வைத்திருந்து சொல்ல இயக்குநர் நினைத்தாலும், கொஞ்சம் புத்திசாலி ரசிகர்கள் அவர் யாரென்பதைப் புரிந்து கொள்ளும் அளவிலேயே திரைக்கதையும், காட்சிகளும் இருக்கின்றன.
நண்பர்களில் நால்வருமே நன்றாக நடித்திருக்கிறார்கள் என்றால் அதற்குக் காரணம் இது ஒரு நேர்த்தியான இயக்குநரின் படம் என்பதால்தான்.
‘மேயாத மான்’ இந்துஜாவுக்கு இதில் ‘பேசாத மான்’ வேடம். இருந்தும் கடைசியில் தங்கள் கதையை பிரபுதேவாவிடம் சொல்லும் இடம் அவரை நடிப்பில் ‘சக்தி மான்’ ஆக்குகிறது.
மௌனமொழிப் படத்துக்கு இருக்கும் ஒரே சத்த சாத்தியம் இசையமைப்பாளருடைய பின்னணி இசைதான். அது ஓசையாகி விடாமல் இங்கிதமான இசையாகவே இசைக்க விட்டிருக்கும் சந்தோஷ் நாராயணனுக்குப் பாராட்டுகள். ஒளிப்பதிவாளர் ‘திரு’, படத்தின் தன்மையை அறிந்து கோணங்களிலும், நிறத்திலும் வித்தியாசப் படுத்தியிருக்கிறார்.
மௌனமொழிதான் படத்தின் சிறப்பம்சம் என்றிருக்க, சப்டைட்டில் போட்டுப் புரிய வைக்க வேண்டிய அவசியம் என்ன இருக்கிறது என்பதை இயக்குநர்தான் சப் டைட்டிலோடு விளக்க வேண்டும். அதேபோல் நம் நாடு வலியுடன் உணர்ந்த ஒரு உலகளாவிய கார்ப்பரேட் பிரச்சினையை நேரடியாக முகத்தில் அறைந்தாற்போல் சொல்லாமல், ஹாரர் வகைப் படமாக மாற்றியிருப்பதிலும் ‘பிளென்ட்’ ஆகாமல், கட்டியும் முட்டியுமாகப் பிசைந்த மாவாக ஆகியிருக்கிறது.
ஆனாலும் சொல்ல வந்த தைரியம் ‘பலே..!’
மெர்க்குரி – சைலன்ட் கில்லர்..!