போதை சாம்ராஜ்யம் எப்படி மாணவர்கள் சமூகத்திலும் புகுந்து அவர்கள் வாழ்வை அழிக்கிறது என்ற கருத்தை வைத்து பாலாவின் உதவி இயக்குநராக இருந்த நந்தன் சுப்பராயன் சொல்ல வந்திருக்கிறார்.
கதை சிதம்பரத்தில் நடக்கிறது. நாயகன் அஞ்சனும், அமுதவாணனும் தங்கள் நண்பர் பாலாஜி ராதகிருஷ்ணனைக் காணவில்லை என்று தேடிக்கொண்டிருகிறார்கள். அவர் என்ன ஆனார் என்பதுடன் அதில் நாயகன் எடுக்கும் முடிவு என்ன என்பதும்தான் கதை.
அஞ்சனுக்கு ‘சே குவாரா’ என்று பாத்திரப்பெயர் சூட்டியிருக்கிறார்கள். அதை நியாயப்படுத்தும் பாத்திரப்படைப்பு அவருக்குப் பெருமை சேர்த்திருக்கிறது. உடன் நடித்த நண்பர்களில் காணாமல் போன பாலாஜி ராதாகிருஷ்ணனின் நடிப்பும் நன்றாக இருக்கிறது. அப்பாவித்தனமான அந்தப் பாத்திரத்துக்கேற்ற பதற்றத்தை நன்றாக வெளிக்காட்டியிருக்கிறார்.
நாயகி அஸ்மிதாவுக்கு பெரிய வேலையில்லை. சில காட்சிகளே வந்து அஞ்சனை சின்னதாகக் காதலித்துவிட்டுப் போகிறார். பிறகு சீரியஸ் பகுதிக்குள் கதை நகர்ந்துவிடுவதால் காதல் என்ன ஆயிற்றென்றே தெரியவில்லை.
உட்கார்ந்த இடத்தில் வேலைகளை முடிக்கும் வில்லனாக வேல ராமமூர்த்தி. அவரது விடைத்த மீசையையும், வீறாப்புப் பார்வையையும் பல படங்களில் பார்த்துக்கொண்டே இருக்கிறோம். கொஞ்சம் வித்தியாசமாகவும் வில்லத்தனம் செய்ய அவரை புதிய இயக்குநர்கள் தயார்ப்படுத்தினால் தேவலை.
அவரது அடியாளாகவும், வடமாநில இளைஞர்களை வைத்து போதைப் பொருள்களை விற்பனை செய்பவராகவும் வரும் ஆனந்த்சாமி அந்தப் பாத்திரத்துக்கு பொருத்தமாக இருக்கிறார். அவரது நிழல் வேலைகளை வேல ராமமூர்த்தியிடம் ஒருவர் போட்டுக் கொடுக்க, போட்டுக்கொடுத்தவரையே கதை முடித்து, ஆனந்த்சாமியின் நிழல் வேலையிலும் பங்கு பெறுவது வேல ராமமூர்த்தியின் மகா வில்லத்தனம்.
பெருநகரங்கள் என்றில்லாமல் சிதம்பரம் போன்ற ஊர்களிலும் கூட போதைப்பழக்கம் உள்ளே வந்துவிட்டது என்று அறிவிக்கும் இயக்குநரின் சமூக அக்கறையைப் பாராட்டலாம்.
ஒளிப்பதிவில் பரமேஸ்வர் கவனிக்க வைக்கிறார். ஜூபின் – ஜெரார்ட்டின் இசை தேவையைப் பூர்த்தி செய்திருக்கிறது.
மெதுவாக நகரும் முன்பாதியைவிட பின்பாதி வேகமெடுக்கிறது. கிளைமாக்ஸில் மட்டும் பாலாவை நினைவுபடுத்துகிறார் இயக்குநர்.
மயூரன் – மாணவர்களுக்கானவன்..!