October 5, 2024
  • October 5, 2024
Breaking News
  • Home
  • அரசியல்
  • இந்தியா
  • தேர்தலில் அடையப் போகும் தோல்வியை பாஜக உணர்ந்துள்ளது – மம்தா பானர்ஜி
June 28, 2023

தேர்தலில் அடையப் போகும் தோல்வியை பாஜக உணர்ந்துள்ளது – மம்தா பானர்ஜி

By 0 316 Views

மேற்கு வங்காளத்தின் கிராமப்புறங்களில் ஜூலை 8ம் தேதி பஞ்சாயத்து தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் கணிசமான இடங்களை கைப்பற்றுவதற்காக ஆளுங்கட்சியான திரிணாமுல் காங்கிரஸ் தலைவரும், முதல்வருமான மம்தா பானர்ஜி மும்முரமாக பிரச்சாரம் செய்து வருகிறார்.

அவ்வகையில், ஜல்பைகுரி மாவட்டத்தில் நடைபெற்ற பிரசார பொதுக்கூட்டத்தில் மம்தா பானர்ஜி பேசியதாவது:

பா.ஜ.க. மீண்டும் ஆட்சிக்கு வராமல் போகலாம் என்பதை உணர்ந்து எல்லை பாதுகாப்பு படை (BSF) பாரபட்சமின்றி செயல்பட வேண்டும். மக்களவை தேர்தல் அடுத்த ஆண்டு பிப்ரவரி-மார்ச் மாதங்களில் நடைபெறும். பா.ஜ.க. அரசின் பதவிக்காலம் இன்னும் வெறும் 6 மாதங்களே உள்ளது. தேர்தலில் அடையப் போகும் தோல்வியை அவர்கள் உணர்ந்துள்ளார்கள். அதனால், அவர்கள் பல்வேறு குழுக்கள் மற்றும் சமூகங்களை லாபி செய்ய முயற்சிக்கவில்லை.

எல்லா எல்லை பாதுகாப்பு படை அதிகாரிகளையும் நான் குற்றம் சாட்டவில்லை, அவர்கள் எங்கள் எல்லைகளைக் காக்கிறார்கள். ஆனால் எல்லை பாதுகாப்பு படை பாரபட்சமின்றி செயல்பட வேண்டும். ஏனெனில், நாளை பா.ஜ.க. ஆட்சியில் இருக்காது. ஆனாலும், அவர்கள் (BSF) தங்கள் வேலையைத் தொடர்ந்து செய்ய வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

மேலும், எல்லைப் பகுதிகளில், எல்லை பாதுகாப்பு படை நடத்திய துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு ரூ.2 லட்சம் இழப்பீடு தரப்படும் என்றும் அவர்கள் குடும்பத்தினருக்கு வேலைகள் வழங்கப்படும் என்றும் மம்தா பானர்ஜி அறிவித்தார்.

எல்லையோர பகுதிகளில் உள்ள வாக்காளர்களை பா.ஜ.க. சார்பாக எல்லை பாதுகாப்பு படை மிரட்டுவதாக மம்தா நேற்று குற்றம் சாட்டியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.