ஆரம்பமே அதிரடியாக ‘துருவங்கள் 16’ இயக்கி கவனிக்கப்படும் இயக்குநர்கள் வரிசையில் இணைந்த கார்த்திக் நரேன் அடுத்து ‘நரகாசூரன்’ இயக்கினார். ஏகப்பட்ட எதிர்பார்ப்புகளைக் கொண்ட அந்தப்படம் இன்னும் வெளிவராத நிலையில் அதனைத் தொடர்ந்து லைக்கா புரடக்ஷன்ஸுக்காக கார்த்திக் நரேன் இயக்கியுள்ள படம் ‘மாஃபியா’.
அருண் விஜய் ஹீரோவாக நடித்துள்ள இந்தப் படத்தில் ப்ரியா பவானிசங்கர் ஹீரோயினாகவும், பிரசன்னா வில்லனாகவும் நடித்துள்ளனர். இதன் டீஸரும், தொடர்ந்து வந்த பாடலும் அசத்தலாக அமைந்தன.
கோகுல் பெனாய் ஒளிப்பதிவு செய்துள்ள இந்தப் படத்துக்கு, ஜாக்ஸ் பிஜோய் இசையமைத்துள்ளார். லைகா புரொடக்ஷன்ஸ் சார்பில் சுபாஸ்கரன் தயாரித்துள்ளார். ஒரேகட்டமாக இதன் படப்பிடிப்பு நிறைவடைந்தது. இயக்குநருக்கு டெங்கு காய்ச்சல் வந்தபோதும்கூட படப்பிடிப்பை நிறுத்தாமல், தொடர்ந்து போஸ்ட் புரடக்ஷனும் முடித்துக் கொடுத்து விட்டார்.
இந்தப் படம் குறித்து கார்த்திக் நரேன் பேசியதிலிருந்து…
“மாஃபியா’ ஒரு கேங்க்ஸ்டர் திரைப்படம். சென்னயை அடிப்படையாக கொண்ட கதைக்களம்தான். ஹீரோ ஆர்யன் ஒரு போதைப் பொருள் தடுப்பு அதிகாரி. இந்தக் கதாபாத்திரத்தில் அருண் விஜய் நடிக்கிறார். ‘தி பீஸ்ட்’ (மிருகம்) என்று தன்னை அழைத்துக் கொள்ளும் கொடூர வில்லனாக பிரசன்னா நடித்திருக்கிறார்.
‘கிரிஸ்டோபர் நோலன்’ மற்றும் ‘மணிரத்னம்’ ஆகியோரின் படமாக்கல் முறையையே நானும் பின்பற்றுகிறேன். ‘மாஃபியா’ படத்தின் நெட் ஃப்ளிக்ஸ் தொடரான ‘நார்கோஸின்’ பாதிப்பில் உருவானது. இரண்டு கதைகளின் அடிநாதமும் ஒன்றுதான். ஆனால் அதைத் தாண்டி வேறெந்த ஒற்றுமையும் கிடையாது. ‘மாஃபியா’வின் திரைக்கதை ‘நான் லீனியர்’ முறைப்படி எழுதப்பட்டுள்ளது.
படத்தில் நான்கு பாடல்கள் உண்டு. ஆனால், அவை படத்தின் திரைக்கதையோடு இணைந்தே வரும். பாடல்கள் திரைக்கதையோடு ஒன்றாமல் போகும்போது அவை படத்துக்கு வேகத்தடையாய் அமைந்து விடுகின்றன.
நான் குறும்படங்களின் மூலம் பெரிய திரைக்குள் வந்தவன். அதனால் எனக்கு ஒரு பழக்கம் உண்டு. எனக்கு எந்த இடம் கிடைத்தாலும், அதையே லொக்கேஷனாக மாற்றி விடுவேன். அதற்கு அனுமதி கிடைக்குமா கிடைக்காதா என்பதைப் பற்றியெல்லாம் நாங்கள் கவலைப்படுவதில்லை. ‘மாஃபியா’வில், பல காட்சிகளை ‘கொரில்லா’ முறையில் படமாக்கியுள்ளோம்.
அதாவது ஒரு இடத்தில் படப்பிடிப்பு நடத்தும்போது அது அங்குள்ள மக்களுக்கே தெரியாத வகையில் படமாக்குவது. படப்பிடிப்பு நடப்பது அவர்களுக்குத் தெரிந்து விட்டால் அங்கே கூட்டமும் குறுக்கீடுகளும் உருவாகிவிடும்..!”
இன்றைய சிக்கல்கள் நிறைந்த சினிமா தயாரிப்பில் இது ஒரு நல்ல உத்திதான்..!