April 29, 2024
  • April 29, 2024
Breaking News
July 14, 2023

மாவீரன் திரைப்பட விமர்சனம்

By 0 214 Views

கமர்ஷியல் ஹீரோவுக்கான இலக்கணமே அந்த ஹீரோவை குடும்பங்களுக்கு… முக்கியமாக குழந்தைகளுக்குப் பிடிக்க வேண்டும். அந்த வகையில் இந்தத் தலைமுறையில் குழந்தைகள் உட்பட ஒட்டுமொத்தக் குடும்பத்தையும் கவரும் சிவகார்த்திகேயனின் புதிய வரவு இந்தப் படம். இதிலும் அனைவருக்கும் அவரைப்பிடிக்குமா பார்க்கலாம்..!

‘வீரமே ஜெயம்’ என்பதுதான் கதைக்கான கரு. ஆனால், கதாநாயகன் தைரியமில்லாதவராக இருக்க, வீரம் எப்படி அவருக்கு கை வசம்… (இன்னும் குறிப்பாகச் சொல்லப்போனால்) காது வசமானது என்பதை ஃபேண்டஸி கலந்து சொல்லி இருக்கிறார் இயக்குனர் மடோன் அஸ்வின்.

மண்டேலா படம் தந்த மடோன் அஸ்வினுக்கு, தன் ஸ்டைலில் படம் சமூகத்துக்கும் பயனுள்ளதாக இருக்க வேண்டும், அதே நேரம் நகைச்சுவை யிலும் அசத்தும் ஆக்சன் ஹீரோவான சிவகார்த்திகேயன் ரசிகர்களையும் கவர வேண்டும் என்ற இரண்டு முனைகளுக்கும் பயணப்பட்டுக் கதையை அமைக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டிருக்கிறது.

குடிசைப் பகுதி மக்களுக்கு குடிசை மாற்று வாரிய வீடுகளை கட்டித் தருகிறார் அழுகுணி அமைச்சர் மிஷ்கின். ஆனால் அந்த வீடுகள் ஒழுகுணியாக, தரமற்றதாக இருக்க பல நூறு குடும்பங்களின் உயிருக்கு ஆபத்து ஏற்படும் நிலையில்… அவர்களில் ஒருவராக இருக்கும் பயந்தாங்கொள்ளி ஓவியர் சிவகார்த்திகேயன் பந்தக் கொள்ளியாக பலம் கொண்ட அமைச்சரை எதிர்கொள்ள முடிந்ததா என்பதுடன் அப்பாவி மக்களை எவ்வாறு காத்தார் என்பதும்தான் படத்தின் கதை.

சிவகார்த்திகேயன் வழக்கமாகப் பேசும் மாடுலேஷனே அவரை எந்த வம்பு தும்புக்கும் போகாதவர் என்பதைச் சொல்லிவிடுகிறது. அவருக்கென்று அமைந்த அடாவடி அம்மா சரிதா தொட்டதற்கெல்லாம் வரிந்து கட்டிக்கொண்டு சண்டைக்கு போய்விட, தங்கையைத் தொட்டவனைக் கூட கண்டிக்க முடியாமல் இவர் பதறுவதைப் பார்க்க பாவமாக இருக்கிறது.

இப்போதெல்லாம் நன்றாக நடனம் ஆடவும் கற்றுக்கொண்ட சிவாவுக்கு ஒரே ஒரு பாடலில் மட்டுமே நடனமாட வாய்ப்புக் கொடுத்த இயக்குநருக்கு கண்டனம் தெரிவிக்க வேண்டியதாய் இருக்கிறது. ஜாலியான படத்தில் இன்னும் இரண்டு ஜமாய்க்கும் பாடல்களாவது இருந்திருக்க வேண்டாமா..?

ஆனால் பாடல் ஃபினிஷிங்கில் ஒரே ஷாட்டில் கடினமான மூவ்மெண்ட்களை ஆடி அசத்தியிருபோது ‘சிவா தாண்டவம் ..!’

நாயகி அதிதி ஷங்கருடனான காதல் இழை ஆரம்பத்தில் அழகாக டெவலப் ஆகி பாதிக்கு மேல் இற்றுப் போய்விடுகிறது.

இன்னும் கேட்டால் அதிதியே அப்படித்தான் ஆர்ப்பாட்டமாக அறிமுகமாகி சிவாவுக்கு வேலை வாங்கி கொடுத்ததுடன் தன்னுடைய வேலை முடிந்து விட்டதாக அவரது பாத்திரம் வலுவிழக்கிறது. 

எவ்வளவு காலம் ஆகிறது சரிதாவின் இந்த அற்புத நடிப்பைப் பார்த்து. யாராக இருந்தாலும் மல்லுக்கட்டும் அவருக்கு இப்படி ஒரு பிள்ளை வாய்ந்தது ஆச்சரியம்தான். “நாண்டுக்கிட்டு சாகலாம்…” என்று மகனைத் திட்டினாலும் உண்மையிலேயே அவர் சாக நேரும்போது கண்களில் நீர் தழும்ப பதறிப் பார்க்கும் அந்த ஒரு பார்வை போதும், அந்த பாத்திரத்திற்கு சரிதா, மிகச் சரிதான்..!

சிவாவின் தங்கையாக வரும் வழக்கமான தங்கையாக வந்து போகிறார் மோனிஷா.

மிஷ்கின் கோஷ்டியில் ‘அருவி மதன்’ கவனிக்க வைக்கிறார்.

அழுகுணி அமைச்சராக வரும் மிஷ்கின் படம் முழுவதும் நிறைந்திருக்கிறார். பொதுக் கூட்டத்தில் வைத்து சிவாவால் செருப்படிபட்டதில் கருவிக்கொண்டு போகும் அவர் உக்கிரம் கிளைமாக்ஸ் வரை நீள்கிறது. கோபத்தில் அவரது இரு கண்களும் பம்ப்படித்த பெட்ரோமாக்ஸ் விளக்காக ஒளிர்கிறது.

ஆக்ரோஷமான நடிப்பு மிஷ்கினுடையது என்றால் அமைதியாக வந்து அதகளம் புரிகிறார் தெலுங்கு நடிகர் சுனில். ஆந்திரக்கரையோரம் அலப்பறை செய்து கொண்டிருப்பவரை இங்கே கூட்டி வந்து வீணடித்து விட்டார்களோ என்று முதல் பாதியில் தோன்றினாலும் இரண்டாவது பாதியில் வைத்து இரண்டில் ஒன்று பார்த்து விடுகிறார் சுனில். அவருக்கும் மிஷ்கினுக்குமான பந்தம், ‘டெரர்’ ரகம்..! 

மிஷ்கின் ஒரு முரட்டு முட்டாள் என்றால் அவர் சார்ந்த கட்சியின் முதலமைச்சர் பாலாஜி சக்தி வேலுமா அப்படி இருப்பார்..? இப்படி ஒரு முதல்வரை தமிழ்நாடு இதுவரை பார்த்ததில்லை.

சாதாரண ஹீரோ, சூப்பர் பவர் ஹீரோ ஆவதைப் பல படங்களில் பார்த்திருக்கிறோம் ஆனால் அதற்கான சாத்தியம் இதில் வித்தியாசமாக இருப்பது கதைக்கு பலம். அதுவும் சிவா சார்ந்த ஓவியப் பணியைத் தொட்டே அது நிகழ்வதும் நன்று.

அந்தப் பவருக்கு பவர்ஃபுல்லான பின்புலத்தைத் தந்திருக்கிறது விஜய் சேதுபதியின் வாய்ஸ்.

பல படங்களுக்குப் பிறகு நகைச்சுவையில் மீண்டு வந்திருக்கிறார் யோகி பாபு. “உனக்கு மட்டுமா வாய்ஸ் கேக்குது… எனக்கும் சாயந்திரம் ஆறரை மணி ஆயிடுச்சுன்னா 15 நிமிஷமா ஒரு வாய்ஸ் கேட்கும் – கையெல்லாம் தடதடன்னு ஆடும்…” என்று அவர் சொல்ல ஆரம்பிக்கும் போது தியேட்டரில் சிரிப்பலை கட்டிங்கும், குவாட்டருமாய் நிறைகிறது.

அவர் ஒரு இந்திக்காரர் என நினைத்து அவருக்கான அக்ரிமெண்டை இந்தியிலேயே எழுதி கையெழுத்துப் போட சொல்லும்போது குமார் என்று தமிழில் போட்டு ஹிந்தியில் போடுவது போல் மேலே ஒரு கோடு போடுவது ஆர்ப்பாட்டம்.

அந்த அக்ரிமெண்ட்டை வைத்தே அவரிடம் எல்லா வேலையும் வில்லன் அண்ட் கோ வாங்கிக் கொண்டிருக்க கடைசியில் அப்படி அதில் என்னதான் எழுதி இருக்கிறது என்று ஒரு இந்திக்காரனை விட்டுப் படிக்க வைத்தால் அது பிரபலமான இந்திப் பாடலாக இருப்பது லக லக…

தினத்தந்தி நாளிதழின் மேல் இயக்குனருக்கு என்ன மோகமோ… அதே ஃபான்ட் எழுத்துகளில் ‘தினத் தீ’ என்று ஒரு நாளிதழை வைத்து தந்தியில் வரும் கன்னித்தீவு போலவே இதிலும் ஒரு சித்திரத் தொடரை சிவா வரைவதாக கதை வருகிறது.

விது அய்யண்ணாவின் ஒளிப்பதிவு, பகல் இரவு காட்சிகளையும், எது நிஜம் எது சிஜி என்று பிரித்தறிய முடியாத வகையிலும் துல்லியம் காட்டி இருக்கிறது. பரத் ஷங்கரின் இசை படத்தில் முக்கியத்துவம் பெறுகிறது. பின்னணி இசையில் பின்னி இருக்கும் அவருக்குப் பாடல்கள் அளவில் இன்னும் இட ஒதுக்கீடு தந்திருக்கலாம்.

இப்படித்தான் படம் முடியும் என்று நம்மை எதிர்பார்க்க வைத்து விட்டு அப்படியே படம் ‘ கனமாக ‘ முடிந்திருந்தால் இன்னும் அழுத்தமாக இருந்திருக்கும். ஹீரோவின் விதி முடியவே கூடாது என்பது தமிழ் சினிமாவில் யார் எழுதிய விதியோ..?

ஆனால் சிவகார்த்திகேயனிடம் நாம் எதை எதிர்பார்த்துச் செல்கிறோமோ அந்த அம்சங்கள் இந்தப் படத்தில் நிறைவாகவே இருக்கின்றன.

அந்த வகையில்…

மாவீரன் – மாஸ் சூரன்..!