கேரளாவில் மது கடைகள் அடைக்கப்பட்டு இருப்பதால் இதுவரை 7 பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். போகப்போக கொரோனாவில் இறந்தவர்களை விட குடிநோயாளிகள் இறப்பு அதிகமாக இருக்குமோ என்று எண்ணி குடிநோயாளிகள் தற்கொலை செய்து கொள்வதை தடுக்க கேரள அரசு நிபந்தனை அடிப்படையில், மது பாட்டில்களை வழங்க முடிவெடுத்துள்ளது.
அதற்காக மாநில அரசு வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது. திருவனந்தபுரத்தில் சுகாதாரத்துறை அதிகாரிகளுடன் முதல்வர் பினராயி விஜயன் அவசர ஆலோசனை நடத்திய பின்னர், குடிநோயாளிகளுக்கு நிபந்தனை அடிப்படையிலான மதுவிற்பனை வழங்க இந்த வழிகாட்டு நெறிமுறைகளை கேரள முதல்வர் வழங்கியுள்ளார். மது குடிக்காவிட்டால் உடல் அளவிலும் மனதளவிலும் பாதிப்பு ஏற்படுவோருக்கு அடையாள வில்லை (பாஸ்) வழங்கப்பட உள்ளது.
அந்த பாஸை பெற குடிநோயாளிகள் அருகில் உள்ள அரசு மருத்துவரை அணுக வேண்டும். அவர்கள் தரும் மருத்துவக் குறிப்புச் சீட்டை மத்திய கலால் வரித்துறை அதிகாரிகளிடம் காட்ட வேண்டும். அத்துடன் ஆதார் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை அல்லது ஓட்டுநர் உரிமம் என ஏதேனும் ஒன்று காட்ட வேண்டும். அப்போது அவர்களுக்கு அருகில் உள்ள மதுக்கடைகளில் குறிப்பிட்ட அளவு மது பாட்டில்கள் வழங்கப்படும்.
கேரளாவில் 16 லட்சம் பேர் நாள்தோறும் மதுகுடிக்கும் பழக்கம் உடையவர்கள் ஆவர். ஊரடங்கு உத்தரவால் மதுகிடைக்காததால் கடந்த ஒரு வாரத்தில் 7 பேர் தற்கொலை செய்து கொண்டதுடன் மதுகிடைக்காததால் ஒவ்வொரு நாளும் 5 பேர் மருத்துவமனையில் சேர்க்கப்படுகின்றனர்.
தமிழ்நாட்டு நிலைமை இன்னும் அந்த அளவுக்குப் போகாதது மகிழ்ச்சிதான்..!