சமுதாயத்தில் சாதனை செய்து உயர்ந்தவர்களின் வாழ்க்கை சரிதத்தைதான் பயோபிக்காக எடுக்கும் வழக்கம் இருக்கிறது.
ஆனால், அதை மாற்றி சமுதாயப் பயன்பாட்டுக்காக உழைத்தும் உரிய அங்கீகாரம் கிடைக்காமல் இன்னும் சாதனை விளிம்பில் நின்று கொண்டிருக்கும் ஒரு சாமானியனின் வாழ்க்கையைப் படமாக எடுத்திருக்கிறார் இயக்குனர் எம்.உதயகுமார் என்பதே ஒரு சாதனைதான்.
தூத்துக்குடியில் நடக்கும் கதை. காயல்பட்டினத்தில் மின்சார வாரியத்தில் லைன்மேனாக பணியாற்றி வருகிறார் சார்லி. ஆனால் இவர் படத்தின் கதா நாயகனல்ல.
பட்டதாரியான சார்லியின் மகன் ஜெகன் பாலாஜிதான் படத்தின் ஹீரோ. அவர் தனது தனது கண்டுபிடிப்புகள் மூலம் எளிய மக்களுக்கு உதவ நினைக்கிறார். அதற்காக சூரிய ஒளியின் மூலம் தெரு விளக்குகளை தானே ஏற்றி, அணைப்பதற்கான தானியங்கி கருவியை உருவாக்கி அதற்கு அங்கீகாரம் பெற முயற்சிக்கிறார். ஆனால், அந்த முயற்சிகள் தோல்வி அடைவதுடன் முதலாளி வர்க்கத்தினர் அவருக்கு எதிரிகளாகிறார்கள். அவர் தனது முயற்சியில் வெற்றி பெற்றாரா, இல்லையா? என்பதுதான் கதை.
ஹீரோவாக நடித்திருக்கும் ஜெகன் பாலாஜி புதியவர் என்பதே அந்தக் கேரக்டருக்கு வலிமை சேர்த்து அதன் பின்னணியில் இருக்கும் உண்மையான சாதனையாளரின் வலியை உணர வைக்கிறது.
ஜெகன் பாலாஜியின் தந்தையாக நடித்திருக்கும் சார்லியின் நடிப்பு பற்றித் தனியாகச் சொல்லத் தேவையில்லை. உணர்ச்சிமயமான நடிப்பிலும், அந்த உணர்ச்சிகள் மங்கிய நிலையிலும் பரிமளிக்கிறார்.
எதிர்பாராமல் கலெக்டராக வரும் அதிதி பாலனின் வருகை உற்சாகமளிக்கிறது.
சின்னச் சின்ன பாத்திரங்களில் நடிக்கும் சரண்யா ரவிச்சந்திரனுக்கு, இதில் கதாநாயகி வேடம். அவரும் உப்பளத்தில் பணியாற்றும் தொழிலாளி போலவே இருக்கிறார்.
இசை, ஒளிப்பதிவு, படத்தொகுப்பு என எல்லாமே கச்சிதம்.
உண்மைக்கதை என்பதால் வழக்கமான சினிமாவின் கிளாமர் விஷயங்கள் இதில் இல்லை. ஆனால், வாழ்க்கையில் சாதிக்கத் துடிப்பவர்களுக்கு இந்தப்படம் ஒரு ஊக்கியாக இருக்கும்.
லைன் மேன் – நிஜ வாழ்க்கை சூப்பர் மேன்..!