இந்தப் படத்தைத் தயாரித்த மணிகண்டனுக்கும் சரி… இயக்கிய ஸ்ரீநாத்துக்கும் சரி… ஒரே குறிக்கோள்தான். பணம் கொடுத்து படம் பார்க்க வந்தவர்களை “போதும்… போதும்…” என்கிற அளவில் சிரிக்க வைத்து அனுப்ப வேண்டும் என்பதுதான் அது.
அதற்காகவே இருவரும் நடிக்கவும் செய்திருக்கிறார்கள். அதிலும் “நான்தான் தயாரிப்பாளர். எனக்குத்தான் முக்கியத்துவம் வேண்டும்…” என்று மணிகண்டனோ அல்லது “நான்தான் இயக்குனர் எனக்கே முக்கியத்துவம்..!” என்று ஸ்ரீநாத்தோ கேட்காமல் கதையின் முக்கிய நான்கு பாத்திரங்களில் தங்களது பகுதியை 1/4 என்ற விகிதத்தில் பங்கு போட்டுக் கொண்டிருக்கிறார்கள்.
படத்தில் கதை என்றெல்லாம் தேடிக் கொண்டிருக்க முடியாது – சின்ன லைன்தான்..!
நான்கு நாயகர்களில் ரமேஷ் திலக் ஒரு மிமிக்ரி கலைஞராக வருகிறார். ஆனால், நீங்கள் நினைப்பது போல் விஜய் டிவியில் எல்லாம் வெளிச்சம் படாமல், வியாபாரிகளுக்கு விற்பனையைப் பெருக்க பல குரலில் பேசி அன்றாடப் பாட்டுக்கு சம்பாதித்துக் கொண்டிருக்கிறார்.
அதேபோல் சிக்கு முடிகளை வாங்கி விற்கும் தொழிலில் இருக்கும் மணிகண்டன், வாழ்க்கையும் வறுமையால் சிக்கலுக்குள்ளாகி இருக்கிறது.
ஓரிடத்தில் கெட்ட ஆவி இருக்கிறதா இல்லையா என்பதை தன் கண்களாலேயே பார்த்து கண்டுபிடித்து விடக்கூடிய அசாத்திய சக்தி கொண்டிருக்கிறார் ஸ்ரீநாத். ஆனால் அஞ்சு பைசாவுக்கு அது ஆவி வரவில்லை.
அதேபோல் அடுத்தவர்களுக்கு இன்னது நடக்கும் என்று துல்லியமாகக் கணித்து சொல்லக்கூடிய கிளி ஜோசியர் கருணாகரனுக்கு தன் அடுத்த வேளை உணவு இருக்குமா என்று சொல்ல முடியாத அளவில் வறுமையில் இருக்கிறார்.
இந்த நால்வரையும் ஒரு 2000 ரூபாய் தாள் சந்திக்க வைக்கிறது. 2000 ரூபாய் புழக்கத்தில் இருந்த காலகட்டத்தில் கதை ஆரம்பிக்கிறது. அதில் ஒன்றாகும் நால்வரையும் அந்த 2000 ரூபாய் தாளும் பெரிய சிக்கலுக்கு உள்ளாக்குகிறது.
அதிலிருந்து நால்வரும் எப்படித் தப்பித்தார்கள் என்பதுதான் முழுப் படமும்.
இவர்களுள் ரமேஷ் திலக்கின் தியாகக் காதல் நெகிழ வைக்கிறது. அதேபோல், கருணாகரனின் சோதிடக் காதலும், வறுமையால் சோதனைக்குள்ளாகிறது.
ஸ்ரீநாத்துக்கு காதல் கத்தரிக்காய் எல்லாம் நேரமில்லாமல் உடன் பிறந்த தங்கைக்காகவே வாழ்ந்து, தங்கை மறைவுக்குப் பின் தறி கெட்டுப் போகிறது.
ஆனால் மணிகண்டன்தான் கொஞ்சம் குஜால் பேர்வழி. குயில் என்ற பாத்திரத்தில் வரும் அவர் கூடுவதற்கு ஜோடி கிடைத்துவிட்டால் குஜால் ஆகிவிடுகிறார். அப்படி அவர் யோகி பாபுவின் மனைவியிடம் ரூட் போட்டு கூடவே ரூமும் போட்டு கொஞ்சம் பணத்தையும் லவட்டிக் கொண்டு வருவதில் கில்லாடியாகத் தெரிகிறார்.
இவர்களுடன் யோகி பாபு படம் நெடுக மதுபானக் கடை முதலாளியாக வருகிறார். அவர் வரும் காட்சிகள் எல்லாம் கலகலப்புக்கு குறைவில்லை.
இவர்களெல்லாம் பத்தாது என்று விடிவி கணேஷ், ரவி மரியா, நான் கடவுள் ராஜேந்திரன், மைம் கோபி, ஜான் விஜய், சரவண சுப்பையா, ஜி.மாரிமுத்து, மதுசூதன ராவ் என்று “வாவ்..! ” சொல்ல வைக்கும் ஒரு காமெடிப் பட்டாளமே களம் இறங்கி இருக்கிறது.
அவரவர்கள் பாணியில் அவரவர்கள் அடிக்கும் லூட்டி அட்டகாசம்.
ஒரு பெரிய படத்துக்கு உண்டான அளவில் ஒளிப்பதிவாளர் மாசாணி அற்புதமாகப் படம் பிடித்திருக்கிறார்.
பாடல்களையும் பின்னணி இசையையும் கவனிக்க வைத்திருக்கும் இசையமைப்பாளர் பிஜோர்ன் சுர்ரா, யார் இவர் என்று கேட்க வைத்திருக்கிறார்.
கதை, திரைக்கதை, வசனம் எழுதியிருக்கும் எஸ்.ஏ.பத்மநாபன், இந்தக் காமெடிப் படத்தில் கண்ணுக்குத் தெரியாத நாயகன் ஆகியிருக்கிறார்.
ஸ்ரீநாத்தின் இயக்கத்தில் முதல் பாதியை விட இரண்டாவது பாதி வேகமாகவும், காமெடியாகவும் கடக்கிறது. இத்தனை நடிகர்களை வைத்து வேலை வாங்கி இருக்கும் அவர் தானும் நடித்திருப்பது ஆகப்பெரிய விஷயம்.
இரண்டு கவர்ச்சி குத்தாட்ட பாடல்கள் இருக்கின்றன ஆனால், படத்தின் தலைப்பான லெக் பீஸ் எந்த இடத்திலும் தொடர்பு படுத்தப்படவில்லை. ஒரே ஒரு காட்சியில் மொட்டை ராஜேந்திரன் இரண்டு லெக்பீஸ்களை சரக்குக்காக சைட் டிஷ் ஆக காட்டுவதோடு சரி.
லெக் பீஸ் – சிரி சிரி மூவி..!
– வேணுஜி