காக்கிச்சட்டையின் தீரம் சொல்லும் கதைகளும், புலன் விசாரணைக் கதைகளும் எந்தக் காலத்திலும் அலுப்புத் தட்டுவதே இல்லை. இந்த உண்மையைப் புரிந்து வைத்துக் கொண்டிருக்கும் இயக்குனர் மணி மூர்த்தி, ஒரு கிரைம் த்ரில்லராக இந்தப் படத்தைக் கொடுத்திருக்கிறார்.
காரைக்கால் பகுதியில் நடக்கிற கதையில் ஒரு இளம் பெண்ணின் சடலம் பாறை இடுக்கில் கரை ஒதுங்குகிறது. சில நாட்கள் கவனிக்கப்படாமல் இருந்திருப்பதால் அந்தப் பெண்ணின் முகத்தை மீன்கள் கடித்துக் குதறி அடையாளம் தெரியாமல் ஆகியிருக்கிறது.
இன்னொரு பக்கம் தன்னுடைய மனைவியைக் காணவில்லை என்று ஒரு டிரைவர் போலீசில் புகார் அளித்து அலைந்து கொண்டிருக்கிறார்.
இளம் பெண் சடலம் தொடர்பான விசாரணையை மேற்கொள்ளும் இன்ஸ்பெக்டர் கார்த்திகேசன் முதலில் தன் மனைவியைக் காணவில்லை என்று புகார் கொடுத்த டிரைவரை அடையாளம் காட்டச் சொல்லும் போது அவர் தனது மனைவிதான் அது என்று சொல்கிறார்.
அத்துடன் பிரச்சனை முடிந்தது என்று நினைக்கும் நேரத்தில் அவர் தனது மனைவி இல்லை என்று மாற்றிச் சொல்ல, அதன் பின்னணியில் அந்த ஏரியா கவுன்சில்ருக்கும் ஏதோ தொடர்பு இருப்பதாக இன்ஸ்பெக்டர் சந்தேகிக்கிறார்.
ஏனென்றால், இன்னொரு வழக்கில் அந்த கவுன்சிலருக்கும் இந்த இன்ஸ்பெக்டருக்கும் ஒரு உரசல் ஏற்பட்டு முடிந்து இருக்கிறது.
அந்த இன்ஸ்பெக்டரின் சந்தேகம் நியாயமானதுதான் என்பது போல் அந்த கவுன்சிலரும், எம்எல்ஏவுக்கு போன் போட்டு அந்த இன்ஸ்பெக்டர் மீது நடவடிக்கை எடுக்க சொல்லி அவ்வப்போது தொந்தரவு செய்து கொள்வது பார்வையாளர்களான நமக்கு காட்டப்படுகிறது.
இன்னொரு பக்கம் எம்எல்ஏவான மேத்யூ வர்கீஸ், தன் மனைவியுடன் காதலில் தோற்ற தன் மகனை தேற்றிக் கொண்டிருக்கிறார்.
மேற்படி கேசில் டிரைவர் வழக்கைத் திசை திருப்பி விட்டதால், அந்த சடலம் பற்றி மேலும் விசாரணை நடத்த துவங்குகிறது இன்ஸ்பெக்டர் கார்த்திகேசன் தலைமையிலான போலீஸ் குழு.
அதில் ஒரு பாலியல் தொழிலாளியான வர்ஷினி பற்றி விசாரிக்கும் போது அவரை ஒரு வாரமாகக் காணவில்லை என்று தெரிகிறது. அந்த சடலம் அவருடையதாக இருக்கலாம் என்ற நிலையில் அவரை உயிருடன் சந்திக்கிறது போலீஸ்.
எனவே இறந்தது கண்டிப்பாக டிரைவரின் மனைவிதான் என்று இன்ஸ்பெக்டர் நினைக்கும் நேரத்தில் டிரைவரின் மனைவியான வெண்மதியும் உயிரோடு கிடைக்கிறார்.
அப்படியானால் இறந்தது யார் என்கிற குழப்பத்துடன் இடைவேளை நெருங்கும் நேரத்தில் நாயகன் அசோக் குமார் அறிமுகமாகிறார்.
அதற்குப் பின் என்ன என்பதுதான் மீதி பாதிப் படத்தின் கதை.
அசோக்குமாரே படத்தின் நாயகனாக இருந்தாலும் இடைவேளை வரை அவர் வரவில்லையே என்கிற எதிர்பார்ப்பு நம்மிடம் ஏற்படாமல் பரபரப்பான திரைக்கதை நம்மைக் கட்டி வைக்கிறது.
இடைவேளைக்குப்பின் வந்தாலும் தன்னுடைய பாத்திரத்தை அழுத்தமாகப் பதித்து விட்டுப் போயிருக்கிறார் அசோக்குமார்.
ஆனால் படத்தின் நாயகனே இவர்தான் என்று நினைக்கும் அளவில் இன்ஸ்பெக்டர் கார்த்திகேசன் முழு நீளப்படத்திலும் வருகிறார். அனுபவ நடிகர் போல எந்த இடத்திலும் பிசிறு இல்லாமல் அற்புதமாக அந்தப் பாத்திரத்தைத் தாங்கி நடித்திருக்கிறார்.
விசாரணை செய்யும் ஆண்களை அடித்துத் துவைத்தாலும் பெண்கள் சிக்கினால் அவர்கள் கதையைக் கேட்டு மனமுருகுவதில் தாய்க்குலத்தைத் தாங்கிப் பிடித்து இருக்கிறார் கார்த்திகேசன்.
படத்தின் தலைப்பைத் தாங்கி லாராவாக வரும் அனுஷ்ரேயா ராஜன் அழகாகவும், மென்மையாகவும் இருக்கிறார்.
டிரைவரின் மனைவியாக வரும் வெண்மதி மற்றும் பாலியல் தொழிலாளியாக வரும் வர்ஷினி இருவரும் சரியான பாதையில் முன்னேறினால் பெரிய ரவுண்டு வர முடியும்.
எம் எல் ஏ வாகவும், அசோக்குமாரின் தந்தையாகவும் வரும் மேத்யூ வர்கீஸ் வில்லனாகி விடுவார் என்று எதிர்பார்க்கிறோம் ஆனால் ஒரு சின்ன டிவிஸ்ட் நம் எண்ணத்தைத் திருப்பிப் போடுகிறது.
ஆர் ஜே ரவீனின் ஒளிப்பதிவு காரைக்காலின் பூகோளத்தைச் சரியாகப் படம் பிடித்திருக்கிறது., ரகு ஸ்ரவன் குமாரின் இசையும் இந்த காதல் திரில்லருக்கு சரியாக ஸ்வரம் பிடித்திருக்கிறது.
ஒரு இயல்பான த்ரில்லருக்குள் ஹவாலா பணம் மோசடி, பாலியல் தொழில் செய்யும் பெண்களின்.பிரச்சினைகள், தீவிரவாதிகள் பக்க நியாயங்கள், ஆதரவற்றோர் மேற்கொள்ளும் இன்னல்கள், அரசியல்வாதிகளின் ஆதிக்கம் என்று சமுதாயத்தில் புரையோடிப் போயிருக்கும் எல்லா விஷயங்களையும் உள்ளே கொண்டு வந்திருக்கும் இயக்குனர் மணி மூர்த்தி பாராட்டுக்குரியவர்.
பெரிய குறைகள் எதுவும் சொல்ல முடியாமல் படமாக்கி இருப்பது சிறந்த சிறிய படத்துக்கான இலக்கணம்.
அதை மெய்ப்பித்திருக்கிறது லாரா..!
– வேணுஜி