நடனப்புயல் ‘பிரபுதேவா’ நடனத்துக்கு முக்கியத்துவம் கொடுத்து நடித்திருக்கும் படம் லக்ஷ்மி. இதில் அவருடன் ஐஸ்வர்யா ராஜேஷ், பேபி ‘தித்யா’, ஷோபியா நடித்திருக்க, இந்த படத்துக்கு சாம் சிஎஸ் இசையமைத்திருக்கிறார். ப்ரமோத் ஃபிலிம்ஸ் மற்றும் ட்ரைடெண்ட் ஆர்ட்ஸ் தயாரித்திருக்கும் இப்படத்தை விஜய் இயக்கியிருக்கிறார்.
வரும் ஆகஸ்ட் 24-ஆம் தேதி வெளியாகும் இந்த படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் படக் குழுவினர் கலந்து கொண்டு படத்தைப் பற்றிய அனுபவங்களைப் பகிந்து கொண்டனர்.
“லக்ஷ்மி என் கனவு திரைப்படம். ஒரு டான்சராக இருந்து விட்டு இந்த திரைப்படத்தில் நடித்திருப்பது சிறப்பான அனுபவம்..!” என்றார் நடிகை ஷோஃபியா.
“ரியாலிட்டி டான்ஸ் ஷோவில் இருந்து நான் வந்திருந்தாலும், இந்தப் படத்தில் எனக்கு டான்ஸ் ஆடும் வாய்ப்பு கிடைக்கவில்லை. பிரபுதேவா சாருடன் இந்த படத்தில் நடித்தது எனக்கு கிடைத்த மிகப்பெரிய அனுபவம்… அவரை படிக்கும்போதிருந்தே பார்த்து வியந்திருக்கிறேன். அவர் என்ன மனுஷந்தானா… உடலை இப்படி வளைத்து ஆடுகிறாரே..?” என்று ஆச்சரியப்பட்டிருக்கிறேன். அவருடன் இதில் நடிக்கும்போது பிரமித்தேன்..!” என்று கொஞ்ச்ம பில்ட் அப்புடன் பேசினார் ஐஸ்வர்யா ராஜேஷ்.
தொடர்ந்து பேச வந்த பிரபுதேவா ஐஸ்வர்யா ராஜேஷைக் கலாய்க்கும் விதமாக “அப்படியெல்லாம் ஷூட்டிங்கில் என்னைப் பார்த்து பிரமிச்சமாதிரி தெரியலையே..? நான் பாட்டுக்கு நடிக்க, ஐஸ்வர்யா பாட்டுக்கு நடிச்சாங்க..!” என்று போட்டு வாங்க, ஐஸ்வர்யா கீழிருந்து “மனசுகுள்ள ரசிச்சேன்..!” என்று வழிந்தார்.
தொடர்ந்த பிரபுதேவா, “இந்திய அளவில் நல்ல திறமையான குழந்தைகளைத் தேர்ந்தெடுத்து இந்தப் படத்தை எடுத்திருக்கிறார் விஜய். ‘தேவி’, ‘லக்ஷ்மி’ படங்களில் விஜய் இயக்கத்தில் நடித்திருக்கிறேன். அடுத்து ‘தேவி 2’ படத்தை எடுக்கலாம் என்று முடிவெடுத்திருக்கிறோம். .
குழந்தைகள் மக்ச்சிறப்பாக நடித்திருக்கிறார்கள். நான் 4,5 டேக் வாங்கினாலும் குழந்தைகள்… குறிப்பாக தித்யா முழு டான்ஸையும் ஆடி முடித்துதான் நிறுத்துவார். கமல் சார் நடித்த ‘சலங்கை ஒலி’ வேற லெவல். அதனோடு இதை ஒப்பிட வேண்டாம்..!” என்றார்.
“பிரபுதேவாவை வைத்து டான்ஸ் படம் பண்ணா எப்படி இருக்கும் என்ற ஐடியாவை எனக்கு கொடுத்தது ஒளிப்பதிவாளர் ‘நிரவ்ஷா’ தான். பிரபுதேவா சார் கிட்ட சொன்னப்ப “டான்ஸ் படம் பண்ணா வேற லெவல்ல இருக்கணும்..!” என்றார்.
இந்திய முழுக்க நிறைய பேரை ஆடிஷன் செய்து இந்த படத்தில் நடிக்க வைத்திருக்கிறோம். பேபி தித்யா இந்த படத்திற்கு பிறகு மக்கள் மத்தியில் நல்ல இடத்தைப் பிடிப்பார். சாம் சிஎஸ் படத்தின் மிகப்பெரிய பில்லர். அவர் இசை படத்துக்கு மிகப்பெரிய ஆதரவாக அமைந்திருக்கிறது. ஒரு நல்ல, தரமான படத்தை கொடுத்திருக்கிறோம் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது..!” என்றார் இயக்குனர் விஜய்.