ஒரு அக்கா – தம்பி பாசக் கதை. டிபன் கடை வைத்து தம்பியை நன்றாகப் படிக்க வைத்து போலீஸ் அதிகாரி ஆக்கிப் பார்க்க வேண்டும் என்று கனவு காண்கிற அக்கா சிறுவயதிலிருந்தே தம்பியை அதே முனைப்புடன் வளர்க்கிறார்.
வளர்ந்து நாயகனாகும் ரிஷி ரித்விக், அக்காவின் ஆசைப்படியே போலீஸ் துறையில் சேரும் நிலையில் இருக்க, விதிவசத்தாலும், மெடிக்கல் மாஃபியாக்களாலும் அக்கா வினோதினி கொல்லப்படுகிறார்.
அதற்கு நியாயம் கேட்கப் போன ரிஷியின் வாழ்க்கை என்ன ஆனது என்பதுதான் மீதிக் கதை.
ஓங்குதாங்கான உடல் அமைப்பு கொண்ட ரிஷி ரித்விக்கின் உடல் மொழியே ஒரு காவல் அதிகாரியாக இருக்க தகுதியானவர் என்பதை சொல்லிவிடுகிறது. அக்கா வினோதினி மற்றும் அக்காவின் குழந்தை மீதான பாசத்தைப் பொழிவதிலும் அவரது நடிப்பு பாராட்ட வைக்கிறது.
அவரது அக்காவாக நடித்திருக்கும் வினோதினி, அப்பாவித்தனமான நடிப்பாற்றலை வெளிப்படுத்தி நம்மை உருக்குகிறார். அதிலும் உண்மையிலேயே தனக்கு இதய கோளாறு வந்து விட்டதாக நம்பி ஆபரேஷனுக்கு போகும் தருவாயில் தன் மகளைக் கட்டிப்பிடித்து கண்ணீர் உகுக்கும் கட்டம் நம்மை உலுக்கி விடுகிறது.
அவரது மகளாக நடித்திருக்கும் சிறுமியும் அபாரமாக நடித்திருக்கிறார். வில்லனின் மருத்துவமனைக்குள் புகுந்து ஒரு முக்கியமான ஹார்ட் டிஸ்க்கை அவள் எடுத்து வரும் காட்சி பரபரப்பை ஏற்படுத்துகிறது.
நாயகி ஆராத்யாவின் உடல் மொழியும் போலீசுக்கு பொருத்தமாக இருக்கிறது. ஆனால் அவர் ரிஷிக்கு உதவ முயன்றும் முடியாமல் போவது பரிதாபம்.
வில்லத்தனமான அமைச்சராக நடித்திருக்கும் சரவணன் அதற்கென்று தனியாக மெனக்கிடவில்லை வழக்கமான தன் பாணியிலேயே நடித்துவிட்டுப் போகிறார்.
அவரது நம்பிக்கைக்கு பாத்திரமானவராக நடித்திருக்கும் பாண்டுரங்கன், படத்தின் தயாரிப்பாளராக இருந்தாலும் அனுபவ நடிகரைப் போல் அசால்டாக நடித்திருக்கிறார்.
மந்திரியின் கண்ணிலேயே விரல் விட்டு ஆட்டும் மருத்துவராக நடித்திருக்கும் ஆனந்த் பாபு, அந்த புத்திசாலித்தனம் எடுபடாமல் அநியாயமாக செத்துப் போகிறார்.
இரண்டு எதிர்முனை அல்லக்கைகளான சாய் தீனா, காமராஜுடன் செண்ட்ராயனும் கொஞ்சம் வில்லத்தனம் புரிந்திருக்கிறார்.
ஸ்ரீகாந்த் தேவா தன் பாணியிலேயே குத்தாட்டம் போட வைக்கும் பாடல்களை இசைத்து இருக்கிறார். பின்னணி இசையும் அதிரடி.
குறை சொல்ல முடியாத படப்பிடிப்பை வழங்கி இருக்கிறார் ஒளிப்பதிவாளர் ரோவின் பாஸ்கர்.
ஏழைகளுக்கு உதவும் திட்டமான மருத்துவ காப்பீட்டு திட்டதைக் கூட மருத்துவ மாஃபியாக்கள் எப்படி தங்களுக்குச் சாதகமாக பயன்படுத்திக் கொள்கிறார்கள் என்று பாண்டுரங்கன் எழுதியிருக்கும் கதையை பக்குவமாகக் கையாண்டு இயக்கியிருக்கிறார் எம்.கஜேந்திரன்.
பெரிய படங்களே லாஜிக்கைப் பற்றிக் கவலைப்படாமல் இருக்கும்போது சிறிய படமான ‘குற்றம் தவிர்’ படத்தில் மீறப்பட்டிருக்கும் லாஜிக்குகளை தவிர்த்து விடலாம்.
குற்றம் தவிர் – மருத்துவ காப்பீடு உஷார்..!
– வேணுஜி