பழம்பெரும் தயாரிப்பாளர் ஒருவர் தன் படத்துக்குப் போட்ட ஒரு ஏரியா செட்டை அப்படியே துணை நடிகர்களுக்குக் குடியிருக்க விட்டுவிட்டுப்போக, அந்த சினிமா நகரில் வசிக்கும் அத்தனைக் கலைஞர்களின் வாழ்க்கையைச் சொல்கிற படம். கூடவே நடனத்தின் பெருமையையும் இன்னொரு பக்கம் சொல்லி இரண்டையும் முடிச்சுப் போட்டு ஒரு கதை சொல்லியிருக்கிறார் இயக்குநர் ஏ.எல்.வெங்கி.
32 டேக் வாங்கும் துணை நடிகை என்று பெயரெடுத்த ஊர்வசியின் மகன் ராஜ்குமார்தான் படத்தின் ஹீரோ. அவருக்கு நடனமாட ஆசை. ஆனால், முறையாக நடனம் பயிலாமல் கிடைத்ட இடங்களில் ஆடிக்கொண்டிருக்கிறார்.
இன்னொரு பக்கம் நடனப்பள்ளி நடத்தும் கிரா நாராயணனின் தங்கையான ஹீரோயின் ஸ்ரீஜிதா கோஷ் தங்கள் பள்ளியின் பாரம்பரிய நடன முறையிலிருந்து விலகி மேற்கத்திய நடனப் போட்டிகளில் வெற்றி பெற்று முத்திரை பதிக்க விரும்புகிறார். ஆனால், அதற்கு அக்கா கிரா சம்மதிக்கவில்லை.
அவர் ஏன் அப்படி போட்டியில் ஜெயிக்க ஆசைப்படுகிறார், இவர் ஏன் அதைத் தடுக்கிறார் என்பதற்கெல்லாம் பிளாஷ்பேக்கில் காரணங்கள் வைத்திருக்கிறார்கள். இதற்கிடையே சினிமா குடியிருப்பை அவரவர்களுக்கே எழுதித் தரும் நோக்கில் ஒரு பெரும் தொகையை சம்பந்தப்பட்ட நிர்வாகிகள் கேட்க, ராஜ்குமார் பொறுப்பேற்று அதற்கு சம்மதிக்கிறார்.
ஒருநாள் சாவுக் குத்துக்கு ராஜ்குமார் ஆடுவதைப் பார்த்த கிரா, அவருக்கு முறையான நடனப்பயிற்கி அளித்தால் பெரிய டான்சராக வருவார் என்று அவரை அழைத்து பயிற்சி அளிக்கிறார். அதேசமயம் ஸ்ரீஜிதா கலந்து கொண்ட ஒரு போட்டியில் அவர் நன்றாக ஆடியும் அவருக்குப் பரிசு கிடைக்காததை எதிர்த்து ராஜ்குமார் சண்டையிடுகிறார்.
இதுவே இருவருக்கும் காதலாகக் கசிய, இடையே கிரா தரும் நடனப்பயிற்சி இந்தக் காதலுக்குத் துணையாக நல்லவர்கள் எல்லோரும் சேர்ந்து ஒரு நடனக்குழு ஆரம்பிக்கிறார்கள்.
மேற்படி இரண்டு சம்பவங்களிலும் ஒரு பொது எதிரியாக வரும் நாகேந்திரபிரசாத் படத்தின் வில்லன் என்றாகிறார். அவரும் கிரா நடத்தும் நடனப்பள்ளிக்கும் ஒரு பகை இருந்துவருகிறது. இப்போது சர்வதேச நடனப்போட்டி ஒன்றுக்கு அறிவிப்பு வர அதில் நாகேந்திரபிரசாத்தின் செருக்கை இவர்கள் ஒன்றுகூடி எப்படி உடைக்கிறார்கள் என்பது கதை.
இதைவிட கதையை சுருக்கமாகச் சொல்ல (!) முடியுமா தெரியவில்லை.
ராஜ்குமாரின் உயரம், நிறம், நடனம் எல்லாமே ஓகே. போகப்போக நடிப்பில் தேர்ச்சி பெறுவதோடு, நல்ல இயக்குநர், கதைகளையும் தேர்ந்தெடுத்தால் கோலிவுட்டுக்கு இன்னொரு ஹீரோ ரெடி.
ஸ்ரீஜிதாவின் இளமை, கிராவின் அழகு எல்லாம் சேர்ந்து அக்கா, தங்கை வரும் காட்சிகள் எல்லாம் இளமையும், அழகும் பூத்துக் குலுங்குகிறது. நடனப்பெண்கள் எல்லோரும் சேர்ந்து பள்ளியில் ஆடும் பாரம்பரிய நடனமும், அதற்கான இசையும் நன்றாக இருக்கின்றன.
நாகேந்திர பிராசாத்தின் வில்லன் வேடம் எடுபடவில்லை. ஆனால், நடனத்தில் ஈடு கட்டுகிறார். கே.பாக்யராஜ் வரும் காட்சி தவிர, மற்ற காட்சிகளில் ஏனோ நல்ல நடிகையான ஊர்வசியும் எடுபடவில்லை.
ஏகப்பட்ட காமெடி நடிகர்கள் இருந்தும் ஒரு காட்சியிலும் சிரிக்க வைக்க முடியாமல் தடுமாறுகிறார்கள்.
என்னதான் நடனத்தைப் போற்றும் படமாக இருந்தாலும் ஒரு காட்சி முடிந்ததும் ஒரு நடனம் என்பது ஓவர்டோஸாகிப் போகிறது. இதனால் கதையைப் புரிந்துகொள்வதிலும் அலுப்பு வருகிறது.
கிளைமாக்ஸ் நடனம் ஆறுதலாக அமைந்து பாராட்ட வைக்கிறது.
கூத்தன் – தலைப்பைக் காப்பாற்ற ஆவேசக் கூத்தாடியிருக்கிறார்கள்..!