January 21, 2025
  • January 21, 2025
Breaking News
October 13, 2018

நல்ல கதை இருந்தால் படம் வெற்றி பெறும்-அமலா பால்

By 0 943 Views
வணிக வெற்றியை சம்பாதித்திருக்கிறது  ராட்சசன் படம். ஆக்ஸஸ் ஃபிலிம் பேக்டரி ஜி டில்லிபாபு மற்றும் ஸ்கைலார்க் எண்டர்டெயின்மெண்ட் ஸ்ரீதர் தயாரிப்பில், விஷ்ணு விஷால், அமலா பால் நடிப்பில் ராம்குமார் இயக்கியிருந்தார். ஜிப்ரான் இசையமைத்திருந்த இந்த படம் அக்டோபர் 5ஆம் தேதி வெளியாகி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது.
 
இந்த படத்தின் வெற்றி விழா மற்றும் நன்றி அறிவிக்கும் பத்திரிக்கையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது.
 
“நல்ல படம் எடுத்திருக்கிறோம் என்ற நம்பிக்கை எங்களுக்கு இருந்தது, ஆனாலும் இவ்வளவு போட்டிக்கு நடுவில் நம்ம படத்தை ரிலீஸ் பண்றோமே, என்ற பயம் இருந்தது. அவை எல்லாவற்றையும் தாண்டி படத்துக்கு கிடைத்த நல்ல விமர்சனங்கள் தான் படத்தை இந்த அளவுக்கு கொண்டு சேர்த்திருக்கிறது.
 
தமிழ் சினிமா ரசிகர்களும் நல்ல படம் கொடுத்தால் பார்க்க நாங்கள் ரெடி என்பதை மீண்டும் ஒரு முறை நல்ல  வரவேற்பின் மூலம் நிரூபித்திருக்கிறார்கள். மொத்த குழுவும் என் மீதும், நான் தேர்வு செய்த கதை மீதும் மிகப்பெரிய நம்பிக்கை வைத்திருந்தார்கள். நீண்ட நாளைக்கு பிறகு சிகப்பு ரோஜாக்கள், நூறாவது நாள் மாதிரி ஒரு தரமான திரில்லர் படம் கொடுத்திருக்கிறீர்கள் என்ற  பாராட்டு கிடைத்தது..!” என்றார் தயாரிப்பாளர் ஜி.டில்லிபாபு.
 
இந்த படம் ரிலீஸுக்கு முன்பு வரை மொத்த குழுவும் பதட்டத்திலேயே இருந்தோம். பத்திரிகையாளர்கள் படத்தை பார்த்து அவர்கள் எழுதியது தான் எங்களுக்கு உத்வேகம் கொடுத்தது. ரசிகர்கள் படத்தை கொண்டாடுவது மகிழ்ச்சி அளிக்கிறது. ரஷ்யாவில் வாழ்ந்த ஒரு சைக்கோவின் கதையை படிக்க நேர்ந்தது, அது தான் இந்த படத்தை எழுத உதவியது. சைக்கோ கதாபாத்திரத்தில் நடித்தவர் பெயர் சரவணன். அவர் ரொம்ப  கஷ்டப்பட்டு நடித்திருக்கிறார். அவருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன. கூடிய விரைவில் அவரை மக்கள் முன் அறிமுகப்படுத்துவோம்..!” என்றார் இயக்குனர் ராம்குமார்.
 
“ஒரு படம் வெற்றி பெற நிறைய ஃபார்முலா இருக்கணும் என்று அனைவரும் நினைத்துக் கொண்டிருக்கும்போது, நல்ல கதை இருந்தால் போதும், படம் வெற்றி பெறும் என்பதை ரசிகர்கள் மீண்டும் ஒரு முறை நிரூபித்திருக்கிறார்கள்.
 
ராட்சசன் என 35வது படம். என்னை இந்த அளவுக்கு கொண்டு வந்ததுக்கு தமிழ் சினிமாவுக்கும், ரசிகர்களுக்கும் நன்றி. 18 வயதில் நடிக்க வந்தபோது ஒரு நட்சத்திரமாக வேண்டும் என்று நினைத்தேன், 8 ஆண்டுகள் கழித்து இப்போது ஒரு நடிகையாக இருக்க வேண்டும் என்றே ஆசைப்படுகிறேன்..!” என்றார் நாயகி அமலா பால்.
 
“ராட்சசன் எங்களின் வெற்றி மட்டுமல்ல, ரசிகர்களின் வெற்றி. முதல் வாரம் நிறைய படங்களுடன் ரிலீஸ் ஆகிறதே என்ற பயம் இருந்தது. இப்போது இரண்டாம் வாரத்திலும் ஹவுஸ்ஃபுல்லாக ஓடிக்கொண்டிருக்கிறது. இந்த படம் ஓடலைனா தயாரிப்பாளருக்கு நான் இன்னொரு படம் பண்ணித் தரேன்னு சொன்னேன். இப்போ படம் வெற்றி பெற்றிருக்கிறது. ஆனாலும் அந்த சந்தோஷத்தில் இன்னொரு படத்தில் நடித்து தர விரும்புகிறேன்.
 
இது சினிமாவுக்கு நல்ல காலம் என்று நினைக்கிறேன். தொடர்ந்து செக்க சிவந்த வானம், பரியேறும் பெருமாள், 96, ராட்சசன் என நான்கு படங்களையும் ஒரே நேரத்தில் மக்கள் ஓட வைத்திருக்கிறார்கள். அந்த நல்ல, வெற்றி படங்கள் லிஸ்டில் எங்கள் படமும் இருப்பது மகிழ்ச்சி..!”என்றார் நாயகன் விஷ்ணு விஷால்.
 
இந்த விழாவில் படத்தொகுப்பாளர் ஷான் லோகேஷ், கலை இயக்குனர் கோபி ஆனந்த், ஒளிப்பதிவாளர் பிவி சங்கர், சண்டைப்பயிற்சியாளர் விக்கி, ஸ்கைலார்க் ஸ்ரீதர், முண்டாசுப்பட்டி ராம்தாஸ் ஆகியோரும் கலந்து கொண்டு பேசினர்.