இயக்குனர் பா.இரஞ்சித் திரைத்துறை சார்ந்தவர்களுக்கு உதவும் வகையில் கூகை திரைப்பட இயக்கம் எனும் அமைப்பை ஏற்படுத்தி இருக்கிறார்.
இதற்காக பெரும் நூலகம் ஒன்றை உருவாக்க வேண்டும் என்கிற நோக்கில் நண்பர்கள் உதவியோடு அந்த முயற்சியைத் தொடங்கியிருக்கிறார்.
சென்னை வளசரவாக்கம் ஜானகி நகரில் கூகை திரைப்பட இயக்கம் அமைப்பின் அலுவலகத்தை ‘சாய்ரட்’ பட இயக்குனர் நாகராஜ் மஞ்சுளே, நடிகை குஷ்பு திறந்து வைக்க இயக்குனர் ராம், லெனின் பாரதி, மாரிசெல்வராஜ் உள்ளிட்ட திரைத்துறை சார்ந்த இயக்குனர்கள், உதவி இயக்குனர்கள் கலந்துகொண்டனர்.
விழாவில் பேசிய இயக்குனர் நாகராஜ் மஞ்சுளே,
“மராட்டிய மாநிலத்திலிருந்து தமிழ் நாட்டுக்கு வந்து இப்படி ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொள்வது பெரும் மகிழ்ச்சியாக உள்ளது, இயக்குனர் இரஞ்சித், மாரி செல்வராஜ், ராம் உள்ளிட்ட நண்பர்களுக்கு எனது நன்றிகள் . இங்கு வந்ததும் ‘பரியேறும் பெருமாள்’ படம் பார்த்தேன்.
இந்தியாவில் எல்லா மாநிலங்களிலும் சாதி ஒரே மாதிரிதான் இன்னும் தனது வன்மத்தைக் காட்டிக்கொண்டு இருக்கிறது. கலைஞர்களாகிய நமக்கு சாதி ஒழிப்பைக் குறித்து நாம் நமது படைப்புகள் மூலமாக ஒரு உரையாடலை நிகழ்த்த முடியும், அந்த வகையில் ரஞ்சித்தையும், மாரிசெல்வராஜையும் பாராட்டுகிறேன். என்னோடு பயணிக்க தமிழகத்தில் இருவர் இருக்கிறார்கள் என்பதில் பெரும் மகிழ்ச்சி.
‘கூகை திரைப்பட இயக்கம்’ அமைப்பு மூலமாக நூலகம் திறந்திருப்பது நல்ல முயற்சி. இயக்குனர்கள், உதவி இயக்குனர்களுக்கு இது பெரும் உதவியாக இருக்கும், வாசிப்பு என்பது திரைப்படத்துறையில் இருப்பவர்களுக்கு மிக மிக அவசியம் . புத்தகம் உங்களை செழுமைப்படுத்தும் . இந்த நிகழ்வுக்கு என்னை அழைத்த நண்பர்கள் அனைவருக்கும் நன்றி..” என்றார்.
விழாவில் பேசிய நடிகை குஷ்பு,
“இந்த நூலகம் உதவி இயக்குனர்களுக்கு மட்டுமல்ல, இயக்குனர்களுக்கும் அவசியமான ஒன்று. என் குழந்தைகளுக்கும் வாசிப்பு பழக்கம் இருக்கிறது. புத்தகம் படிப்பது நம்மை தைரியமானவர்களாக்கும், யாரையும் தைரியமாக எதிர்கொள்ளும் ஆற்றலைத் தரும்.
இந்த நூலகத்தைத் திறந்திருக்கும் இயக்குனர் ‘பா.இரஞ்சித்’க்கு எனது வாழ்த்துக்கள்..!” என்றார்.
பா.ரஞ்சித் பேசுகையில்,
“புத்தகம் மூலம்தான் உலகை அறிய முடியும் என்பதை நான் உறுதியாக நம்புகிறேன். நான் புத்தகம் மூலம்தான் பலவற்றைத் தெரிந்து கொண்டேன்.
உதவி இயக்குனராக இருந்த போது ஒவ்வொரு புத்தகத்தையும் தேடித்தேடி வாசித்தேன். அப்போதுதான் ஒன்று தோன்றியது. உதவி இயக்குனர்களுக்கு என்று ஒரு நூலகம் அமைக்க வேண்டுமென்று.
வாசிப்பின் வழியாகவும் வாசித்ததை உரையாடுவதின் வாயிலாகவும் ஒரு படைப்பாளி நிறைய கற்றுக்கொள்ள முடியும். ஒரு படத்தைப் பார்த்தால் அதில் காட்சி வழியாக நமக்கு எல்லாம் காட்டப்பட்டு விடும். ஆனால் புத்தகம் படித்தால்தான் அந்த எழுத்துக்கு நாம் கற்பனை செய்ய முடியும்..!” என்றார்.