கிராமத்தில் ஒரு பகுத்தறிவுவாதி வாழ்ந்தால் அவர் இந்த சமூகத்தில் எப்படியெல்லாம் எதிர்கொள்ளப்படுவாரோ அப்படி வாழ்ந்து வருகிறார் சமுத்திரக்கனி. மனைவி, இரண்டு மகன்கள் என்று வாழ்ந்து வருபவருக்கு ஆறாவது படிக்கும் மூத்த மகனின் முரட்டுத் தனத்தால் எப்போதும் பிரச்சினை. அவர்கள் இருவருக்குமான இடைவெளியும் அதை அவர்கள் எப்படி எதிர்கொண்டார்கள் என்பதும்தான் கதை.
ஊருக்கெல்லாம் அறிவு தரும் ஒரு வாத்தியாருக்கு முட்டாள் மகன் ஒருவன் இருந்தால் அவர் எப்படியெல்லாம் பிரச்சினைகளை எதிர்கொள்வாரோ அப்படி ஆகிறது சமுத்திரக்கனிக்கு.
தான் நேர்மையாக, உண்மையானவனாக போராடி வாழ்ந்து வரும் நேரத்தில் ஊர் வம்பையெல்லாம் வீட்டுக்கு இழுத்து வரும் மூத்த மகனால் அவர் படும் துன்பங்களும், அதை அவர் எதிர்கொள்ள முடியாமல் திணறி கோபத்தை வெளிக்கொணர்வதும் இயல்பாகச் சித்திரிக்கப்பட்டிருக்கின்றன.
கருப்புச் சட்டை, கம்பீரப் பார்வையுடன் தான் ஏற்ற பத்திரத்துக்கு நியாயம் சேர்த்திருக்கிறார் சமுத்திரக்கனி. சாதீய எதிர்ப்புகளில் தீயாய்ச் சுடும் அவர், தன் மகன்கள் மீது காட்டும் பாசத்தில் நெகிழ வைக்கிறார். அதில், மூத்த மகன் ஏன் இப்படி இருக்கிறான் என்று புரியாமல் அவன் மீது காட்டும் கோபம் நம் அப்பாக்களை நமக்கு நினைவு கூர வைக்கிறது.
அவரது மனைவியாக வெகுகாலம் கழித்து தமிழ் சினிமாவில் சங்கவி. தன்னைக் கைநீட்டி அடித்த குற்றத்துக்காக கணவனைப் பிரிந்து அண்ணன் வீட்டுக்கு வந்தாலும், தன் தாலியை கழற்றி எறிந்த மகனைப் புரட்டி எடுத்து பெண்ணின் பெருமையைப் போற்ற வைக்கிறார் அவர். ஆனால், என்ன ஒன்று… 90களின் நடிகை என்பதால் மடிப்புக் கலையாத சேலையும், அடர் மேக்கப்புமாக வந்து பாத்திரத்துடன் ஒன்றாமல் தனித்துப் போகிறார்.
படத்தின் தலைப்புக்கேற்ற பாத்திரத்தில் ‘கொளஞ்சி’யாக வரும் கிருபாகரன் நல்ல தேர்வு. அப்பா என்ன அடித்தாலும், கோபப்பட்டாலும் அவன் பாட்டுக்கு சோற்றைப் பிசைந்து தின்பதிலும், அழுகையைக் கூட பிறர் அறியாமல் மலைமீது தனித்துப் போய் அழுவதிலும்… இப்படி ஒருசில கேரக்டர்களை எல்லோருமே அவரவர்கள் வாழ்வில் பார்த்திருக்க வாய்ப்பு இருக்கிறது. பலே கிருபா..!
அந்தச் சிறுவனும், அவன் நண்பன் ‘அடி வாங்கி’யாக வரும் பொடியனும்தான் நிதானமான இந்தப் படத்தை நகர்த்த்திச் செல்லும் ஊக்கிகளாக பயன்பட்டிருக்கிறார்கள். அந்தப் பொடியன் நசாத், அந்தக் கால பாக்யராஜ் படங்களில் வரும் கேரக்டர் போல் கவனத்தைக் கவர்ந்திருக்கிறான்.
இந்த இருவரும்தான்… முக்கியமாக அவர்களது உரையாடல்கள்தான் படத்தைத் தொய்வில்லாமல் நகர்த்திச் செல்கின்றன. அதில் தயாரிப்பாளருமான (மூடர் கூடம்) நவீனின் வசனங்களுக்கு பெரும்பங்கு உண்டு.
மற்றபடி ஒரு பகுத்தறிவுவாதியை நல்லவனாகக் காட்டினால், அதற்கு நேரெதிராக கோவிலுக்கு மாலை போட்ட ஒரு ஆன்மிகவாதியைத்தான் வில்லனாக்க வேண்டுமா..? அப்படி ஒரு பாத்திரத்தில் இயக்குநர் மூர்த்தி வருகிறார்.
ரொம்பவும் வறட்சியான களமாக இருக்கிறதோ என்று இயக்குநருக்கே சந்தேகம் எழுந்து இந்தக் கதைக்கு நடுவே ராஜாஜி – நெய்னா ஷர்வார் என்ற இளம் ஜோடி ஒன்றின் காதலையும் நுழைத்திருக்கிறார். இந்த காதல் எபிசோட் ஃபுட்டேஜ் தவிர படத்துக்கு எந்த வகையிலும் துணை செய்யவில்லை.
அத்தியப்பன் சிவாவின் ஒளிப்பதிவும், நடராஜன் சங்கரனின் இசையும் பட்ஜெட்டுக்குத் தகுந்தாற்போல் பணியாற்றியிருக்கிறது.
சிறிய பட்ஜெட் என்றாலும் குடும்ப உறவுச்சிக்கலை படமாக்கி அதில் பகுத்தறிவுச் சிந்தனையையும் கலந்து கொடுத்ததற்காக இயக்குநர் தனராம் சரவணணைப் பாராட்டலாம்.
கடைசியில் சமுத்திரக்கனி மகன் கொளஞ்சியிடம் பேசும் வசனங்கள் அழுத்தமானவை. எல்லா அப்பாக்களுக்குமானவை.
கொளஞ்சி – வீட்டுப் பாடம்..!