இயக்குனர் ஆர்.கண்ணன் தன் மசாலா பிக்ஸ் சார்பாக எம்கேஆர்பி புரடக்ஷன்சுடன் இணைந்து தயாரித்து இயக்கியிருக்கும் படம் ‘காசேதான் கடவுளடா’.
1972-ல் வெளியாகி சூப்பர் டூப்பர் வெற்றி பெற்ற இந்த கிளாசிக் காமெடி படத்தை இன்றைய காலக் கட்டத்துக்கு ஏற்ப, மாற்றி ரீமேக் செய்திருக்கிறார்.
முந்தைய படத்தில் ஸ்ரீகாந்த், முத்துராமன், தேங்காய் சீனிவாசன், மனோரமா, லஷ்மி முதலானோர் நடித்திருக்க, இந்தப்படத்தில் அகில உலக சூப்பர் ஸ்டார் ஷிவா, பிரியா ஆனந்த், யோகி பாபு, கருணாகரன், ஊர்வசி உள்ளிட்டோர் நடித்திருக்கிறார்கள்.
பிரசன்ன குமார் ஒளிப்பதிவு செய்ய ராஜ் பிரதீப் இதற்கு இசையமைத்திருக்கிறார். முந்தைய படத்தில் வெளியான இரண்டு பாடல்கள் இந்தப் படத்துக்காக ரீமிக்ஸ் செய்யப்பட்டிருக்கிறது
வரும் 24 அன்று வெளியாகவிருக்கும் இந்தப் படத்தின் வெளியீட்டுக்கு முந்தைய பத்திரிகையாளர் சந்திப்பு இன்று நடைபெற்றது.
வழக்கமாக இது போன்ற நிகழ்வுகளில் இந்த படத்தில் நடித்த நடிகர் நடிகைகள் மற்றும் கலைஞர்கள் படம் மற்றும் பெயரைத்தான் பின்புல ஹோர்டிங்கில் பயன்படுத்துவார்கள். ஆனால் இந்தப் படத்தில் முந்தைய படத்தில் இடம்பெற்ற பழம்பெரும் கலைஞர்களை மரியாதைப்படுத்தும் விதமாக முந்தைய காசேதான் கடவுளடாவைத் தயாரித்த ஏவிஎம், இசையமைப்பாளர் எம் எஸ் வி, பாடலாசிரியர் வாலி, அதில் நடித்த தேங்காய் சீனிவாசன், ஸ்ரீகாந்த், முத்துராமன், மனோரமா, லட்சுமி படங்களுடன் அந்தப் படத்துக்கு கதை வசனம் எழுதி இயக்கிய சித்ராலயா கோபு படமும் இடம்பெற்று இருந்தது அனைவரின் கவனத்தையும் கவர்ந்தது.
இயக்குனர் ஆர்.கண்ணன் மிர்ச்சி ஷிவா உள்ளிட்டு இந்தப் படத்தின் கலைஞர்கள் கலந்து கொண்ட இந்த நிகழ்வில் தயாரிப்பாளரும் நடிகருமான கே.ராஜன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.
இந்நிகழ்வில் ஆர் கண்ணன் பேசும்போது, “நான் இயக்கிய ‘தி கிரேட் இந்தியன் கிச்சன்’ படம் கடந்த மாதம் தான் வெளியானது. இப்போது இந்த மாதம் நானே தயாரித்து இயக்கிய இந்தப் படம் வெளியாகிறது. அடுத்தடுத்த மாதங்களில் தொடர்ந்து படங்கள் வெளியாவது என்பது இந்த காலக் கட்டத்தில் மிகவும் கடினமான காரியம்.
இது தனி ஒரு மனித சாதனை அல்ல. திட்டமிட்ட ஒரு குழுவின் சாதனையாகத்தான் கொள்ள முடியும். அப்படி என்னுடன் இந்த படத்தில் பயணித்த அத்தனை கலைஞர்களுக்கும், பைனான்சியர்கள், வெளியீட்டாளர்கள் அனைவருக்கும் என்னுடைய நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்தப் படத்தில் ஷிவா நடித்தால்தான் நன்றாக இருக்கும் என்பதுதான் முதலில் என் எண்ணமாக இருந்தது. அவர் நடிகராவதற்கு முன்பிருந்தே எனக்கு பழக்கமானவர். யோகி பாபுவின் தேதிகள் கிடைக்காமல் கஷ்டப்படும் இந்தக் காலகட்டத்தில் இந்த படத்தின் ஒவ்வொரு காட்சியிலும் யோகி பாபு வந்திருப்பது சிறப்பான விஷயமாகும்.
இந்தப் படத்தை பார்த்து விட்டு வெளியீட்டாளர்கள் விழுந்து விழுந்து சிரித்த போதே இந்த படம் நிச்சயம் வெற்றி அடையும் என்று கண்டு கொண்டேன்.
தயாரிப்பில் நான் படம் கஷ்டத்தைப் பார்த்து எனது நலம் விரும்பிகள் இனிமேல் நீங்கள் படம் தயாரிக்க வேண்டாம். நாங்கள் தயாரிக்கும் படத்தை இயக்கினால் போதும் என்று சொல்லி இருக்கிறார்கள். நானும் அந்த முடிவுக்குதான் வந்திருக்கிறேன்..!” என்றார்.
படத் தயாரிப்பாளரும் நடிகருமான கே.ராஜன் பேசும்போது, “வழக்கமாக ஹீரோக்கள் இதுபோன்ற நிகழ்வுகளில் கலந்து கொள்வதில்லை. ஆனால் இந்த நிகழ்வில் கலந்து கொண்ட மிர்ச்சி ஷிவாவை நான் பாராட்டுகிறேன்.
அந்தக் காலத்தில் தொடர்ந்து படங்களை இயக்கி வெற்றி கண்ட ராமநாராயணன் போல இந்த காலத்தில் ஆர்.கண்ணன் தொடர்ந்து படங்களை எடுத்துக் கொண்டிருக்கிறார். அவரது திறமைக்கு பாராட்டுக்கள் அதே சமயம் படத் தயாரிப்பு என்பது கடினமான வேலை. எல்லோருக்கும் வேலை கொடுத்துவிட்டு வீட்டுக்குப் போகும்போது ஒன்றுமில்லாமல் தான் போய் நிற்க வேண்டும்.
அதனால் இனிமேல் இயக்கம் மட்டுமே என்ற முடிவு எடுத்த கண்ணனைப் பாராட்டுகிறேன்.
இந்தப் படம் மிகச் சிறப்பாக வந்திருப்பதாக அறிகிறேன். தியேட்டரில் வெளியாகவிருக்கும் இந்தப் படத்தின் தலைப்பு போலவே இதன் வசூல் கொட்டோ கொட்டு என்று கொட்டும். கண்ணனை நான் கேட்டுக் கொள்வதெல்லாம் உங்கள் பெட்டியை திறந்து வையுங்கள். காசு கொட்டும்..!” என்றார்.
காசேதான் கடவுளடா படத்தின் நாயகன் ஷிவா பேசும்போது, “யார் இந்த விழாவுக்கு வந்தாலும் வராவிட்டாலும் உங்களை சந்திக்கும் ஆவலில் நான் வந்தேன்.
இந்தப் படத்தில் நடிக்க நேர்ந்தது இனிமையான அனுபவம். ஏற்கனவே வெற்றியடைந்த இந்த படத்தை எப்படி எடுக்கப் போகிறார் கண்ணன் என்றுதான் நினைத்தேன். ஆனால் மிகச்சிறந்த இயக்குனரான கண்ணன் அற்புதமாகத் திட்டமிட்டு இந்தப் படத்தின் படப்பிடிப்பை நடத்தினார்..!” என்றார்.
நிகழ்வில் முன்னதாக படத்தின் டிரைலரும் “இன்று வந்த இந்த மயக்கம்…” பாடலும் திரையிடப்பட்டது. இந்தப் பாடல் முந்தைய காசேதான் கடவுளடா படத்தில் வந்த பாடலின் ரீமிக்ஸ் பாடல் ஆகும்.