நேற்று மதுரையில் நடந்த விருமன் பட இசை வெளியீட்டு விழாவில்…
நடிகர் கார்த்தி பேசும்போது,
என்ன மாமா சௌக்கியமா?
இந்த வார்த்தையை எனக்கு சொந்தமாக்கிய இந்த மண்ணிற்கு முதலில் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். பருத்தி வீரன் படத்தின் பத்திரிகையாளர்கள் சந்திப்பில், அமெரிக்காவில் இருந்து மீசை தாடி இல்லாமல் இப்படித்தான் வந்திருந்தேன். அப்பொழுது எப்படி இவரை பருத்தி வீரனாக மாற்றப் போகிறீர்கள் என்று அமீரிடம் கேட்டார்கள்.
அப்பொழுது, அமீர் சார் 10 பேரை அடிக்கும் அளவிற்கு தயாரானால் தான் இந்த படத்தில் நடிக்க முடியும் என்றார். என்னைப் பருத்தி வீரனாக உருவாக்கி உங்கள் முன்னாள் நிறுத்தினார். இன்றுவரை தொடர்ந்து உங்கள் அன்பை கொடுத்துக் கொண்டிருக்கிறீர்கள். அதுதான் வேறு வேறு விஷயங்களைத் தேடிப் போவதற்கு நம்பிக்கை கொடுக்கிறது.
கிராமத்து படங்கள் எவ்வளவு முக்கியம் என்று எல்லோரும் சொன்னார்கள். கிராமத்தில் இருக்கும் காதல் வேறு. ஒரு பெண்ணைப் பார்த்தால் இறுதிவரை அந்தப் பெண்ணுடன் தான் வாழ வேண்டும். மாற்றிக் கொண்டே இருக்க மாட்டோம். அண்ணன், தங்கை, தம்பி என்று பல சொந்தங்கள் இருக்கின்றது. அவர்களுக்காக வாழ்வது தனி சுகம். அதை இங்கே கதை எடுத்தால் மட்டும் தான் சொல்ல முடிகிறது. கிராமத்து படங்களை நிறைய எடுக்க வேண்டும் என்று ஆசை. அதற்கு முத்தையா சார் மாதிரி ஆட்கள் தான் உந்துதல். பருத்தி வீரனுக்குப் பிறகு யாராவது கிராமத்துக் கதை கூறினால் பயம் இருக்கும். கொம்பன் கதை கேட்கும்போது தான் அந்த நம்பிக்கை திரும்ப வந்தது. அதன் வெற்றிக்குப் பிறகு இந்த கதை கூறினார்.
எல்லா கதையிலும் கதாநாயகனுக்கு அப்பா தான் நாயகனாக இருப்பார். ஆனால், இந்த கதையில் அப்பா தான் முதல் வில்லன். யார் தப்பு செய்தாலும் தட்டிக் கேட்கும் ஒருவன், அப்பனே தப்பு செய்தாலும் விடமாட்டான் என்று கதை கூறினார். அந்த வரியே எனக்கு மிகவும் பிடித்திருந்தது. அந்த அப்பா யார் என்று கேட்டால், பிரகாஷ்ராஜ் தவிர வேறு ஆள் கிடையாது. அவரை எதிர்த்து நிற்கும் போது தனி சுகம் இருக்கும். அது அவருக்கும் பிடிக்கும்.
ஒரு வேலை செய்தால் பணம் மட்டுமே சம்பளம் இல்லை என்று கூறுவார். அவர் எல்லா படங்களுக்கும் சம்பளம் வாங்குவதில்லை. அதேபோல், சில படங்கள் நமக்கு அனுபவத்தை கொடுக்கும் என்று கூறுவார். அப்படி இரசித்து பணியாற்றக் கூடியவருடன் நடித்ததில் எனக்கு மிகவும் மகிழ்ச்சி. ராஜ்கிரண் சார் போனில் அழைத்து இந்த கதையில் நான் நடிக்கிறேன் என்று கூறினார். அவர் நடிக்க ஒப்புக் கொள்வதே பெரிய விஷயம்.
இந்த விழாவை மதுரையில் வைத்து உங்களுக்கு எல்லாம் நேரில் நன்றி சொல்ல ஆசைப்பட்டு ஏற்பாடு செய்தோம்.
ஒளிப்பதிவாளர் சிவக்குமார் ஒவ்வொரு நாளும் மெனக்கெட்டார். அவரது குழந்தை பிறந்தும் கூட, இரண்டு மூன்று மாதங்கள் இந்த படத்தின் பணிகள் எல்லாம் முடித்து விட்டுத்தான் சென்றார்.
வடிவுக்கரசி அம்மா உடன் நடிக்க வேண்டும் என்ற ஆசை இந்த படத்தில் நிறைவேறி இருக்கிறது. பாரதிராஜா அங்கிள் இங்கு வந்திருக்கிறார். பக்கத்து வீடான அவர் வீட்டில்தான் தான் நாங்கள் வளர்ந்தோம். இன்றளவும் நிலவாகவும் நட்சத்திரமாகவும் நாங்கள் பார்ப்பது அவருடைய படங்களை தான்.
முதல் மரியாதை படத்தை முறியடிக்கும் படியான ஒரு சிறந்த படத்தை நம்மால் எடுக்க முடியாதா என்று முத்தையாவிடம் கேட்டேன். கண்டிப்பாக எடுக்கிறோம். அப்போது தான் அங்கிள் உங்களுக்கு மரியாதை உங்களைப் பார்த்து வளர்ந்தவர்கள் நாங்கள்.
அதேபோல், ஷங்கர் சார் யாரை விஞ்சுவதற்காக படம் எடுத்தார் என்று தெரியவில்லை. ஆனால், அவரை மிஞ்சும் அளவிற்கு ஒரு படம் எடுக்க வேண்டும். அப்போதுதான் அதில் பாதியாவது எடுக்க முடியும்.
முத்தையா அதிதிக்கு சாதாரணமாக வாய்ப்பு கொடுத்து விடவில்லை. பல கோணங்களிலும் ஸ்க்ரீன் டெஸ்ட் வைத்துதான் இந்த படத்திற்கு அழகான நாயகி கிடைத்துவிட்டார் என்று தேர்வு செய்தார். சினிமாத்துறையில் ஒரு பெண்ணை எளிதில் அனுமதிக்கமாட்டார்கள். நான் நடிக்க வரும்போதே என் அப்பா வேண்டாம் என்றார். அப்படி இருக்கும்போது தன் பெண்ணை நடிக்க அனுமதித்த ஷங்கர் சாருக்கு சினிமாவின் மீது எந்த அளவுக்கு காதல் இருக்கும்? சினிமா துறையின் மீது எந்த அளவுக்கு நம்பிக்கை இருக்க வேண்டும்?
ஒரு பெண் நடிக்க வந்தால் அவரை பத்திரமாக பார்த்துக்கொள்ள வேண்டும் என்று எங்கள் அப்பா கூறுவார். எம்ஜிஆர் அவர்கள் மற்றும் விஜயகாந்த் அவர்கள் பெண்களை எப்படி பார்த்துக் கொள்வார்கள் என்று நான் கேள்விப்பட்டிருக்கிறேன். அவர்கள் தான் எங்களுக்கு உத்வேகம்.
படிப்பு வரவில்லை என்றால் தான் சினிமாவிற்கு வருவார்கள் என்று கூறுவார்கள். ஆனால், அதிதி மருத்துவம் படித்துவிட்டு இந்த துறையை தேர்ந்தெடுத்து இருக்கிறார். அவருக்கு சிறந்த எதிர்காலம் இருக்கிறது.
‘ஊரோரம் புளியமரம்’ என்ற பாடல் வந்த புதிதில் இரவு ஒரு மணிக்கு, BAR பாரில் இருந்து போன் செய்து உங்கள் பாட்டு தான் ஓடிக்கொண்டிருக்கிறது என்று கூறுவார்கள். இப்பொழுது பகலிலும் போன் செய்து உங்கள் பாட்டுதான் ஓடுகிறது கேட்கின்றதா என்கிறார்கள். எனக்கு மிகப்பெரிய அடையாளம். அதைக் கொடுத்த யுவன் சங்கர் ராஜாவிற்கு நன்றி.
அதன் பிறகு பையா, நான் மகான் அல்ல என்று என் எல்லா படங்களுக்கும் அவரே இசையமைத்தார். இந்த படம் எடுக்கும்போதும் கிராமத்துக் கதை என்பதால் யுவனை விட்டு விடக்கூடாது என்று நினைத்தோம். கஞ்சா பூ கண்ணாலே பாடல் மாபெரும் வெற்றி பெறும்.
ரீ-ரெக்கார்டிங்கில் படம் பிளாக்பஸ்டர் ஆவது உங்கள் கையில்தான் இருக்கிறது. ஏனென்றால், சிறப்பான வசனங்கள் இடம் பெற்றுள்ளது என்று கூறினேன். என்னுடைய பால்ய சினேகிதன் மனோஜ்.
பாரதிராஜா அங்கிள் பையன் இந்த படத்தில் நடித்திருக்கிறார். இங்கு அவர் வரவில்லை. ஆனால், அவரிடம் எப்படி கேட்பது என்று தயங்கி கொண்டே இருந்தேன். உன் படம் என்றால் நான் நடிக்க மாட்டேனா என்று வந்துவிட்டார். அவருடன் பணியாற்றியதில் மகிழ்ச்சி.
கடைக்குட்டி சிங்கம் படத்திற்குப் பிறகு அண்ணனுடன் இந்த படத்தில் இணைகிறேன். இன்று விமானத்தில் வரும்போது இந்த படத்தை ஏன் தயாரித்தீர்கள்? என்று கேட்டேன். சட்டென்று உன் மீது இருந்த நம்பிக்கை தான் என்று கூறிவிட்டார்.
இயக்குனர் முத்தையா எனக்கு மிகவும் பிடிக்கும். படப்பிடிப்பு முடிந்து விட்டால் இவர் உடற்பயிற்சி கூடத்திற்கு செல்லும் ஒரே மனிதர் இவர்தான். சினிமா, குடும்பம், (ஆரோக்கியம்) உடற்பயிற்சிக்கூடம் இம்மூன்றுக்கும் தான் முக்கியத்துவம் அளிப்பார். இதைத் தவிர அவருக்கு வேறு ஒன்றும் தெரியாது. மிகச் சிறந்த உழைப்பாளி. கண்கலங்கும் படியான காட்சிகள் கூறுவார். அவருக்காகவே இந்தப்படம் மாபெரும் வெற்றியடைய வேண்டும் என்று வாழ்த்துகிறேன். அதேபோல் அண்ணனும் எங்கள் குழு மீது வைத்த நம்பிக்கைக்கும் இப்படம் வெற்றியடைய வேண்டும்.
பருத்தி வீரனுக்குப் பிறகு, மதுரையில் 60 நாட்கள் தங்கியிருந்து படப்பிடிப்பு நடத்தினோம். இங்கேயே வாழ்ந்ததற்கான திருப்தி கிடைத்தது. ஒவ்வொரு படத்திலும் பருத்திவீரனின் சாயல் இருக்கக் கூடாது என்று மிகுந்த கவனத்துடன் இருப்பேன். ஆனால், இந்த படத்தில் தவிர்க்க முடியவில்லை, லோக்கல் என்றாலே வேட்டியை தூக்கி மடித்து கட்ட தான் வருகிறது. சட்டை கசங்கி இருக்கிறது, தலை கலைந்து இருக்கிறதா என்று பார்க்க தேவையில்லை. அப்படியே தரையில் உட்கார்ந்து நடிக்கலாம்.
அழுக்கா அழகா இருக்கிற ஒரே ஆளு நீதான் என்று சூரி கூறுவர். இந்த படத்தில் அவர் மிகச் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். மிகவும் புதிதாக தெரிவார். மதுரை மண்ணுக்கு நன்றி. இந்த படம் வெற்றியடைய மதுரை மீனாட்சி அம்மனை வேண்டிக் கொள்கிறேன் என்றார்.