August 8, 2022
  • August 8, 2022
Breaking News
August 5, 2022

பொய்க்கால் குதிரை திரைப்பட விமர்சனம்

By 0 205 Views

காலத்தால் வஞ்சிக்கப்பட்ட ஒரு மனிதன் எப்படி ஆற்றலால் தன் வாழ்வை தக்க வைத்துக் கொள்கிறான் என்பது கதையின் மையப்புள்ளி. அதை ஒரு சஸ்பென்ஸ் திரில்லராகத் தந்திருக்கிறார் இயக்குனர் சந்தோஷ் பி.ஜெயக்குமார்

கதையின் நாயகனாக வரும் பிரபுதேவாவின் மூலதனமே அவரது கால்கள்தான் என்பது உலகுக்கு தெரியும். ஆனால் அவரை ஒற்றைக் காலுடன் வாழ்பவராகக் காட்டுவதற்கு இயக்குனருக்கு எப்படித்தான் மனது வந்ததோ? விபத்தில் ஒரு காலை இழந்த பிரபுதேவா தன் ஒற்றைக் காலுடன் வாழ்ந்து வர அவரது வாழ்க்கையின் பிடிப்பாக இருக்கிறாள் மகள். 

அந்த ஒரே மகளையும் ஒரு நோயின் காரணமாக காலம் அபகரித்துக் கொள்ள நினைக்க அவளைக் காப்பாற்ற பிரபுதேவா எந்த எல்லை வரை போகிறார் என்று சொல்கிற கதை.

ஒற்றைக்காலுடன் வந்தாலும் அந்த ஒரு காலுடனேயே பிரபுதேவா போடும் குத்தாட்டம் புத்துணர்ச்சியோடு படத்தைத் துவங்க உதவுகிறது. 

இழப்பீடாக வந்த தொகையை வைத்து மகளைப் படிக்க வைக்க பிரபு தேவா நினைக்க, ஆனால் மகளோ அப்பாவுக்கு அந்தப் பணத்தை வைத்து செயற்கை கால் பொருத்த வேண்டும் என்று நினைக்க ஒரு கவிதையாக நகர்கிற காட்சி. கடைசியில் மகளின் ஆசையே ஜெயிக்க பிரபுதேவாவுக்கு புராஸ்தட்டிக் கால் பொருத்தப்பட்டு அவர் இயல்பாக நடக்க முடிகிறது.

நடிப்பிலும் சோடை போகவில்லை பிரபு தேவா பஸ்ஸில் பயணிக்கும் போது தவறான எண்ணத்துடன் ஒரு சிறுமியின் மீது ஒரு அயோக்கியன் கை வைப்பதைப் பார்த்து பொங்கி எழுந்து அவனை புரட்டி எடுப்பதில் இந்த நடனப் புயல் ஆக்சன் புயலாகவும் அதிரி புதிரி கிளப்புகிறார்.

மகளின் உயிரைக் காப்பாற்ற அபரிமிதமான பணம் தேவைப்பட சிறையில் இருக்கும் அப்பா பிரகாஷ்ராஜின் ஆலோசனையின் பேரில் ஒரு சதி வேலையில் ஈடுபட்டு அதில் மாட்டிக் கொள்ளும் போது அவர் மீது நமக்கு பரிதாபமே ஏற்படுகிறது. 

அப்படியெல்லாம் பாடுபட்டு பணத்தைப் புரட்டி மருத்துவமனையில் கட்டிய நிலையில் மகளைக் காணாமல் ஒரு பொங்கு பொங்குகிறாரே அந்த இடம் ஆர்ப்பாட்டம். கிளைமாக்சில் அதிர்ச்சி மேல் அதிர்ச்சி தாக்க அவர் எப்படித்தான் இதை சமாளிக்க போகிறாரோ என்று நமக்கு பதைபதைப்பு ஏற்பட்டு விடுகிறது.

பிரபுதேவாவுக்கு ஜோடியாக இல்லாவிட்டாலும் பக்கத்து வீட்டு பெண்ணாக வரும் ரைசா வில்சன் கிட்டத்தட்ட படத்தின் நாயகியாக சொல்லிக் கொள்ளலாம். 

பிரபுதேவாவின் மகளாக நடித்திருக்கும் அந்தச் சிறுமியும் அமர்க்களப்படுத்தி இருக்கிறார். தன் எண்ணத்தைச் செயலாக்க ஒற்றைக் காலுடன் நின்று கொண்டு அப்பாவை வழிக்கு கொண்டு வரும் பாசப் போராட்டம் நெகிழ வைக்கிறது.

சிறுமி ‘பேட் டச் ‘ பற்றி தெரிந்து வைத்திருப்பதும், கவர்ச்சிக் கன்னி ரைசா வில்சன் முழுக்க போற்றிக் கொண்டு அமைதியான பாத்திரத்தில் நடித்திருப்பதும் இந்த பட த்தை இயக்கியிருப்பது சந்தோஷ் பி ஜெயக்குமார்தானா என்கிற சந்தேகம் நமக்கு வந்து விடுகிறது. இனிமேல் ‘ ஏ’ படங்கள் எடுக்க மாட்டேன் என்று சத்திய பிரமாணம் செய்து கொண்டு இந்தப் படத்தை உணர்ச்சிபூர்வமாக இயக்கியிருக்கிறார் அவர்.

பிரபுதேவாவுக்கு இணையான இன்னொரு பெண் பாத்திரத்தில் வருகிறார் வரலட்சுமி சரத்குமார். பெரும் கோடீஸ்வரரின் மகளாக வரும் அவர் ஜான் கொகேனை திருமணம் செய்து கொண்டு ஒரு பெண் குழந்தைக்கு தாயாக… கணவருக்கும் அவருக்கும் ஏற்படும் பிரச்சனையை கிட்டத்தட்ட பிரபு தேவாவின் கதை போலவே விலாவாரியாக சொல்லி இருக்கிறார் இயக்குனர்.

பிரபுதேவா வரலட்சுமி இருவரது பிரச்சனைகளும் ஒரே கோர்ட்டில் பயணித்து எதிர்பாராத திருப்பங்களுடன் இந்த கதை முடிவுக்கு வருகிறது.

வரலட்சுமிக்கு ஏற்ற இலகுவான பாத்திரம் இதில் வாய்த்திருக்கிறது 

சார்பட்டா பரம்பரைக்குப் பிறகு ஜான் கொகேன் சொல்லிக் கொள்ளும் அளவுக்கு அவரது பாத்திரப்படைப்பும் அமைந்திருக்கிறது.

பிரபு தேவாவின் நண்பனாக வரும் நண்டு ஜெகன் காமெடிக்கு மட்டுமே பயன்பட்டு இருக்கிறார் என்று நினைத்தால் ஒரு கட்டத்தில் நம்மைப் பதற வைக்கவும் செய்கிறார் அவர்.

இத்தனை சிறிய வேடத்தில் எப்படி அத்தனை பெரிய நடிகர் பிரகாஷ்ராஜ் நடித்த ஒத்துக் கொண்டார் என்று தெரியவில்லை. அதைப்போலவே ஷாமுக்கும் இரண்டு காட்சிகளில் மட்டுமே தலை காட்டக் கூடிய வாய்ப்பு கிடைத்திருக்கிறது.

அதேபோல் பிரபுதேவாவுக்கு ஏன் கால் போனது, அவரது தந்தை பிரகாஷ்ராஜ் ஏன் ஜெயிலில் அடை பட்டிருக்கிறார், முடிந்த  கேசை திரும்பவும் ஏன் ஷாம் கையில் எடுக்கிறார் இது போன்ற கேள்விகளுக்கு எல்லாம் இந்த படத்தில் விடை இல்லை. ஆனால் கடைசியில் பிரபுதேவா இந்த கதை இன்னும் முடியவில்லை என்று சொல்வதில் இருந்து இந்த படத்தின் இரண்டாம் பாகத்தையும் எடுத்து வைத்திருப்பாரோ என்று தோன்றுகிறது.

இந்த உணர்ச்சிப் போராட்ட கதைக்குள் உறுப்புகளை திருடி விற்பதற்காக குழந்தைகளை கடத்தும் கும்பல், எளியவர்களின் பிரச்சனையை உதவி செய்கிறேன் பேர்வழி என்று என்ஜிஓக்களிடம் இவர்களை காட்டி காசு பறிக்கும் இணையதளங்கள், நோயாளிகளிடம் பணம் பறிப்பது ஒன்றையே குறிக்கோளாக வைத்து செயல்படும் தனியார் மருத்துவமனைகள் அனைவரின் தோலையும் உரித்து சமூகப் பிரச்சினைகளையும் சாடியிருக்கிறார் சந்தோஷ் பி ஜெயக்குமார்.

இமானின் இசையில் பாடல்கள் காதுக்குள் ஒலிக்கிறது என்றாலும் இரண்டு மணி நேர படத்தில் இத்தனை பாடல்கள் தேவையா என்றும் ஒரு கேள்வியை எழுப்ப வேண்டியிருக்கிறது அது படத்தின் உணர்ச்சியைக் கொஞ்சம் தடை செய்யவும் செய்கிறது.

ஒளிப்பதிவாளரும் எடிட்டரும் கைகோர்த்து படத்தை தொய்வில்லாமல் நகர்த்த உதவுகிறார்கள்.

பொய்க்கால் குதிரை – அலுக்காத ஆட்டம்..!

  1.