July 1, 2025
  • July 1, 2025
Breaking News
July 13, 2021

தமிழக அரசு கல்விக்கு தனி வானொலி தொடங்க வேண்டும் – மநீம கமல் அறிக்கை

By 0 624 Views

ஒளி உமிழும் திரையைத் தொடர்ச்சியாகப் பார்த்துக்கொண்டும், ஹெட்செட்டுகளை நெடுநேரம் காதில் மாட்டிக்கொண்டும் இருப்பதால் மாணவர்களின் கண்பார்வை, செவி கேட்கும் திறனில் பிரச்னை ஏற்படுகிறது என மருத்துவர்கள் எச்சரிக்கிறார்கள்.

தலைவலி, கண் எரிச்சல், கண்களைச் சுற்றி கருவட்டம், சரியான தூக்கமின்மை போன்ற ஆன்லைன் வகுப்புகளின் விளைவுகளை எல்லா குடும்பங்களும் எதிர்கொள்கின்றன. இதற்கு வானொலி சிறந்த மாற்றாக இருக்க முடியும். இதன் மூலம் ‘ஸ்க்ரீன் டைம்’ கணிசமான அளவு குறைக்க முடியும்.

கல்வித் தொலைக்காட்சி போல தமிழக அரசு கல்விக்கென தனி வானொலி அல்லது பண்பலை வரிசை தொடங்கலாம். திறன்பேசி, மடிக்கணினி, தடையற்ற இணையம் ஆகியவற்றிற்காகச் சிரமப்படும் மாணவர்களுக்கும் இது பயனளிக்கும்.

கடலூர் மாவட்டம், புவனகிரிக்கு அருகேயுள்ள கத்தாழை ஊராட்சி ஒன்றிய அரசு நடுநிலைப்பள்ளி ஆசிரியர் ஆ.கார்த்திக்ராஜா தன் மாணவர்கள் மீதான தனிப்பட்ட அக்கறையினால் ஒரு இணைய ரேடியோவை (www.kalviradio.com) உருவாக்கியுள்ளார். 2ஜி இணைய வசதி மட்டுமே கொண்டிருக்கும் கிராமப்புற ஏழை மாணவர்களை மனதில் வைத்து இந்த முயற்சியை முன்னெடுத்திருக்கிறார்.

தமிழகம் முழுக்க தன்னார்வம் கொண்ட சுமார் 75 ஆசிரியர்கள் ஒன்றிணைந்து இதைச் செம்மையாக நடத்தி வருகிறார்கள். ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை பயிலும் ஆயிரக்கணக்கான மாணவர்கள் இவர்களால் பயன்பெற்று வருகின்றனர். பெரிய முதலீடு, தொழில்நுட்பம் தேவையின்றி தங்கள் மாணவர்கள் மீதான அன்பினாலேயே இதைச் சாத்தியப்படுத்தி இருக்கிறார்கள். ஒரு மாணவருக்கு வகுப்பிற்கென நாள் ஒன்றிற்கு அதிகபட்சம் 300mb டேட்டாதான் இதற்குத் தேவைப்படுகிறது. ஆசிரியர் கார்த்திக் ராஜாவும் அவரது சக ஆசிரியர்களும் பாராட்டுக்கு உரியவர்கள்.

இந்தக் கல்வி ரேடியோ தளத்தினை இதுவரை 3,20,000 தடவைக்கு மேல் பயன்படுத்தப்பட்டுள்ளதும், 14,500 மணி நேரங்களுக்கு மேல் இயக்கப்பட்டுள்ளதுமே இதன் தேவைக்கான அத்தாட்சி. தனி முழுநேர வானொலி உருவாக்கப்படுமானால், ஏழை எளிய மாணவர்களுக்கு மிகப்பெரிய வசதியாக இருக்கும். இதர மாணவர்களுக்கும் தங்களது ஸ்க்ரீன் நேரத்தைக் குறைத்துக்கொள்ள உதவும்.

தமிழக அரசு இதைப் பரிசீலிக்க வேண்டுகிறேன்.

கமல் ஹாசன்,
தலைவர் – மக்கள் நீதி மய்யம்.