திரையுலகில் நடிக நடிகையருக்கு சில கொள்கைகள் இருக்கும். உதாரணத்துக்கு ராஜ்கிரண் எத்தனைக் கோடிகள் கொடுத்தாலும் வில்லனாக நடிக்க மாட்டார். அதேபோல் தேவயானியும் அம்மா, மாமியார் ரோல்களை ஏற்பதில்லை என்று உறுதியுடன் இருந்து அப்படி வந்த பல வேடங்களை ஒதுக்கி வந்தார்.
இப்போது முதல்முறையாக தன் கொள்கையைத் தளர்த்திக் கொண்டிருக்கிறார் ‘களவாணி மாப்பிள்ளை’ படத்துக்காக. இதில் நாயகன் தினேஷுக்கு மாமியாராக நடிக்கிறார் தேவயானி.
‘நம்ம ஊரு பூவாத்தா’, ‘கட்டபொம்மன்’, ‘நாடோடி மன்னன்’, ‘மாப்பிள்ளை கவுண்டர்’ உட்பட 16 சூப்பர் ஹிட் படங்களைத் தயாரித்த ராஜபுஷ்பா பிக்சர்ஸ் பட நிறுவனம் பதினேழு ஆண்டுகளுக்கு பிறகு ‘களவாணி மாப்பிள்ளை’ படத்தைத் தயாரிக்கிறது.
இதில் தினேஷ் ஜோடியாக அதிதி மேனன் நடிக்கிறார். மற்றும் ஆனந்த்ராஜ், தேவயாணி, ரேணுகா, மனோபாலா, மகாநதி சங்கர், மொட்டை ராஜேந்திரன், முனீஸ்காந்த் உள்ளிட்டோர் நடித்திருக்கின்றனர்.
சரவண்ணன் அபிமன்யு ஒளிப்பதிவை கவனிக்க, என்.ஆர்.ரகுநந்தன் இசையமைக்கிறார். கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கும் காந்தி மணிவாசகத்திடம் தேவயானியை மாமியார் வேடத்தில் நடிக்க வைத்தது எப்படி என்று கேட்டதற்கு…
“முதலில் தேவயானியிடம் கேட்ட போது தயங்கத்தான் செய்தார். முழு கதையையும் கேட்ட பிறகு ஓ.கே.சொன்னார். அந்தளவுக்கு மாமியார் மருமகள் பிரச்சனையை இதில் முக்கியமாகக் கையாண்டிருக்கிறோம். ஜாலியான பொழுது போக்கு படமாக களவாணி மாப்பிள்ளை உருவாகி இருக்கிறது..!” என்றார்.
சென்ற தலைமுறையின் வெற்றி இயக்குநர் மணிவாசகத்தின் மகன்தான் காந்தி மணிவாசகம். தன் படமும் அப்பாவின் வழியிலேயே மெலிதான காதல் கதையில் காமெடி, கமர்ஷியல் கலந்து இஅய்க்கியிருக்கிறேன் என்கிறார்.
படம் இம்மாதம் வெளியாகிறதாம்.