அதென்னவோ, இயக்குநர் லோகேஷ் கனகராஜுக்கு இரவின் மேல் அப்படியொரு காதல். தன் முதல் படத்தில் ஒரு இரவில் நடந்த ஒன்றுக்கு மேற்பட்ட கதைகளை ஒரு மாலையாகக் கட்டியவர், இந்தப்படத்தில் மாலையை உதிர்த்தது போல் ஒரே கதைக்குள்ளிருக்கும் ஒன்றுக்கு மேற்பட்ட கதைகளைச் சிதறி விட்டு ரசிக்க வைத்திருக்கிறார்.
நகரில் பரவிக்கொண்டிருக்கும் போதை சாம்ராஜ்யம்தான் அடித்தளம். அப்படி 800 சொச்சம் கோடி மதிப்பிலான போதைப் பொருள்கள் போலீஸ் வசம் சிக்க, அதை வைத்து அந்த கும்பலின் மூளையானவனைப் பிடிக்க போலீஸ் முயல்கிறது. அதேபோல் போலீஸிடம் சிக்கிக் கொண்ட போதைப் பொருள்களை மீட்க, மாபியா கும்பலும் முயல்கிறது.
இந்த கலவர வேட்டைக்குள் சிறையிலிருந்து பத்து வருடங்களுக்குப் பின்னால் வெளிவரும் கைதியான கார்த்தி ஆதரவற்றோர் விடுதியிலிருக்கும் தன் முகம் காணா மகளைக் காண அதே இரவில் வர, மேற்படி ஆபரேஷனுக்குள் சிக்கிக் கொள்கிறார். என்ன நடந்திருக்கும் என்பது எல்லோருக்கும் தெரியும்,. ஆனால், எப்படி நடந்தது என்பதுதான் சுவாரஸ்யம்.
ஆனாலும், கார்த்திக்கு இவ்வளவு தைரியம் வந்தது எப்படி என்றுதான் தெரியவில்லை. மொத்தப் படத்தையும் ஒற்றை ஆளாகச் சுமந்திருக்கிறார்.
படத்தில் அவருக்கு ஒரே ஒரு காஸ்ட்யூம்தான். அவருக்கு ஜோடியும் இல்லை. மொத்தப்படமும் ஒரே இரவுக்குள் நான்கு மணிநேரத்தில் நடக்கிறது. இதையெல்லாம் சொன்னால் எந்த முன்னிலை ஹீரோவாவது ஏற்றுக் கொள்வார்களா தெரியவில்லை. ஆனால், கார்த்தி எளிதாக இதையெல்லாம் கடக்கிறார்.
இன்னும் சொல்லப் போனால், ஒரு ஹீரோவை மிஞ்சி திரைக்கதை செல்கிறது. ஆனால், அதற்காக ஹீரோயிஸம் தூக்கலாகத் தெரிய அவர் எள்ளளவும் மெனக்கெடவில்லை. ஆக்ஷன் காட்சிகளைத் தவிர இது ஒரு ஹீரோவுக்கான கதையே இல்லை என்றுகூடச் சொல்லலாம். ஆனால், புதுமையுடன் கூடிய நல்ல படத்தில் நடிக்க வேண்டுமென்று முடிவெடுத்த கார்த்திக்கு ‘ஹேட்ஸ் ஆஃப்’ பாராட்டுகளை வழங்கலாம்.
பிரியாணி சாப்பிட்டு கழுவிய கையைக் கூட முகர்ந்து பார்த்து ரசிப்பதிலும், தான் சிறப்பு விடுப்பின் பேரில் வெளிவந்திருக்கும் கைதி என்பதற்கான அத்தாட்சிக் கடிதத்தை பாக்கெட்டில் வைத்துக்கொண்டு சண்டைக்காட்சிகளுக்கு இடையிலும் கூட அதை எடுத்து பத்திரப்படுத்திக் கொள்ளும்போதும், “ஜெயிலுக்குள்ள குற்றவாளிகளையே பார்த்த கண்ணூக்கு வெளியே ஒரு நல்லவனைப் பார்த்தாலும் அடையாளம் தெரிஞ்சுடுது…” ஏன்று வசனம் பேசுகையிலும் பத்தாண்டுகள் சிறையில் கழித்த அவஸ்தையையும், அனுபவத்தையும் புரிய வைத்துவிடுகிறார்.
அவ்வப்போது விபூதியை பாக்கெட்டில் இருந்து எடுத்து பூசிக்கொண்டு நமச்சிவாயத்தை வணங்குவது மட்டுமே அவருக்கான மேனரிஸம் இந்தப்படத்தில். அப்படி எடுத்து இட்டுக் கொள்ளும் விபூதியை உடன் இருக்கும் ‘தீனா’விடம் அவர் கொடுக்க, அவரோ “இதிலெல்லாம் நம்பிக்கையில்லை…” என்று சொல்ல, “வரும்…” என்று அமைதியாக கார்த்தி பதில் சொல்வது சிரிக்க வைத்தாலும் எதிர்வரும் ஆபத்துகளையும் புரிய வைக்கிறது.
அத்துடன் முதன்முதலாக தன் மகளின் குரலைக் கேட்கும்போதும், அவளது படத்தை வாட்ஸ் ஆப்பில் பார்க்கும்போதும் அவர் அடையும் ஆனந்தம் அற்புதமானது என்றால் தன் வாழ்க்கையைப் பத்து வரிகளில் பிளாஷ்பேக்காகக் கூறுமிடும் ‘கிளாஸ்…’ ஆன தேர்ந்த நடிப்பு.
அவருக்கு அடுத்தபடியாக படத்தில் ரசிக்க வைப்பது அவருடன் பயணிக்கும் இளைஞன் ‘தீனா’தான். வழக்கமாக யோகிபாபு ஏற்க வேண்டிய பாத்திரத்தில் அவ்வளவாக அறிமுகம் ஆகாவிட்டாலும் இவர் வந்து கலக்கியிருக்கிறார்.
இரண்டாவது ஹீரோ எனும்படியான பாத்திரம் நரேனுக்கு. வலது கையில் அடிபட்டு வலியுடனேயே கடக்கும் அவரது பாத்திரமும் அரிதானது. ஐஜி உள்பட காவல்துறையின் உயர் அதிகாரிகள் உயிரும் அவரது பொறுப்பில் வந்துசேர்வதுடன், இன்னொரு பக்கம் கமிஷனர் அலுவலகம் தாக்கப்படும் அபாயத்தையும் எதிர்கொள்ள வேண்டிய பாத்திரத்தை சரியாகப் புரிந்து நடித்திருக்கிறார்.
ஆனால், ஏதேதோ வழிகளில் தாங்கள் பயணப்படும்போது எதிரிகள் சரியாக தங்களைத் தாக்குகிறார்களே, தங்களுக்குள் ஒரு ‘கறுப்பு ஆடு’ இல்லாமல் இது நடக்குமா என்ற இயல்பான சந்தேகம் கூடவா அவருக்கு வராது. இதற்கும் அவர் சுடும்போது அந்த நபர் அவர் கையைப்பிடித்துக்கொண்டு சுடாமல் தடுக்கும்போது கூட அவர் யாரென்று தெரிந்து கொள்ள மாட்டாரா..?
இப்படிச் சில லாஜிக் குறைபாடுகள் அங்கங்கே இருந்தாலும் படம் ஆரம்பித்து, முடியும்வரை இம்மி அளவு கூட நம் கவனத்தைச் சிதறடிக்காத துல்லியமான திரைக்கதையும், கதையோட்டமும் படத்தை முழுதுமாக ரசிக்க வைக்கின்றன. லோகேஷ் கனகராஜ் இரண்டாவது முறையும் வென்றிருக்கிறார். இனி ‘ஹேட்ரிக்’தான் பாக்கி.
சின்னச் சின்ன கேரக்டர்களில் வரும் ஜார்ஜுக்கு இதில் பெரிய பொறுப்பான வேடம். நியாயமாக அதை ஒரு இரண்டாவது ஹீரோ அளவிலான நடிகர் செய்திருக்க வேண்டும். ஆனால், அவர் அருமையாகச் செய்து அமர்க்களப்படுத்தியிருக்கிறார். அவருக்கு உதவியாக வரும் மாணவர்களும் நிறைவாகச் செய்திருக்கிறார்கள்.
“எஞ்சினீயரிங் படிச்சுட்டு இப்படியெல்லாம் குடிக்கலாமா..?” என்று அவர் கேட்க மாணவர்களில் ஒருவர், “அதனாலதான் குடிச்சோம்..!” என்பதை எஞ்சினீயர் அல்லாதவர்களும் புரிந்து கைத்தட்டுகிறார்கள்.
வில்லன்கள் ஹரீஷ் உத்தமனும், ஹரீஷ் பெராடியும் இருந்த இடத்திலிருந்தே வில்லத்தனம் செய்கிறார்கள். ரவுடி ‘அன்பு’ பாத்திரத்தில் வரும் புதுமுகம் ‘அர்ஜுன் தாஸ்’ கவனிக்கும்படி செய்திருக்கிறார்.
கார்த்தியின் குழந்தை ‘மோனிகா’வின் அப்பாவித்தனம் நெகிழவைக்கிறது.
பாடல்கள் இல்லாத படத்துக்கு சாம் சிஎஸ்ஸின் பின்னணி இசை விறுவிறுப்பு கூட்டுகிறது. தன் பெயரில் சூரியன் இருந்தாலும் முழுதும் இரவில் நடக்கும் கதையில் ஒளிப்பதிவாளர் சத்யன் சூர்யனால் ஒரு காட்சியைக் கூட சூரிய ஒளியில் காட்ட முடியவில்லை. ஆனால், படு சவாலான இந்தப் பொறுப்பை அதிக கவனத்துடன் கடந்து பாராட்டுப் பெறுகிறார் அவர்.
கைதி – தீபாவளி ரேஸில் முதலிடம்..!