November 22, 2024
  • November 22, 2024
Breaking News
November 16, 2018

காற்றின் மொழி விமர்சனம்

By 0 1010 Views

சமீபத்தில் இப்படி விழுந்து சிரித்து ஒரு படத்தை ரசித்ததில்லை. இதற்கும் இதன் மூலமான ‘துமாரி சுலு’ இந்திப் படத்திலும் இத்தனை சிரிக்க வாய்ப்பிருக்கவில்லை. அதுதான் இயக்குநர் ராதாமோகன் – வசனகர்த்தா பொன்.பார்த்திபன் கூட்டணியின் மேஜிக்.

இன்னொரு விஷயம். படம் ஒன்றும் காமெடிக்கான களமுமில்லை என்பது. படம் சொல்லு விஷயம் படு சீரியஸானது. எந்த சமூக வெளிப்பாட்டையும் கைக்கொள்ள முடியாத நடுத்தர வர்க்க அதிகம் படிப்பறிவில்லாத பெண்களின் நிலையை அழுத்தமாக முன் வைக்கிறது கதை. ஆனால், அதை அப்படியே சொன்னால் மிளகாய் சட்னியில் மிளகாயை மட்டும் வைத்து அரைத்த சட்னியாகவே கண்கள் பொங்கி விடும்.

அதை நயம்படச் சொல்லத்தான் காமெடி ட்ரீட்மென்டை வைத்து கலகலக்க வைத்திருக்கிறார்கள்.

ஜோதிகாவுக்காக எழுதப்பட்ட கதை இல்லை என்றாலும் இது ஜோதிகா படம்தான். அளவாகச் சம்பாதிக்கும் கணவன், வசதிகளை அனுபவிக்கத்துடிக்கும் பள்ளிச் சூழலுள்ள மகன் என்று நடுத்தர வாழ்வின் முடங்கிவிட்ட வாழ்க்கைக்குள் மின்சாரக் கட்டணம் செலுத்தச் செல்வதைக் கூட வீட்டுக்கு வெளியே செல்லும் வைபவமாக மாற்றிக்கொண்ட வாழ்க்கையில் ஜோதிகா வாழ்ந்திருக்கிறார்.

எத்தனையோ திறமைகளைத் தன்னகத்தே கொண்டிருந்தாலும் படிப்பை சீராக முடிக்கவில்லை என்ற ஒரே காரணத்துக்காக கிடைத்த கேப்பிலெல்லாம் அந்த பிட்டைப் போட்டு அவர் மனதைப் புண்படுத்தும் குடும்பச் சூழலில் அதையெல்லாம் மாற்றிக் காட்டுவதற்கு ஒர்டு வாய்ப்பு ஹலோ எப் எம் மில் கிட்ட அதிலும் அவர் வென்று காட்ட, அந்த மகிழ்வை முழுமையாக அனுபவிக்க முடியாத குடும்ப சூழலில் அதை எப்படிக் கையாள்கிறார் என்பதுதான் படத்தின் சாராம்சம்.

கணவனுடன் கட்டிலில் ‘நேத்து ராத்திரி யம்மா…’ பாடல், “கோப்பால்…” என்று சரோஜாதேவியாகும் வசனம், அலுவலகத்தில் ‘ஜிமிக்கி கம்மல்’ ஆட்டம்’ என்ற கொஞ்சம் அவுட் டேட்டட் ஆன அத்தனை விஷயங்களையும் இன்னொரு நடிகை செய்திருந்தால்  அலுப்பாகத்தான் இருந்திருக்கும். ஆனால், அதையெல்லாம் ‘ஜோ’ செய்து காட்டும் அழகு அத்தனைக்கும் புத்துயிர் கொடுக்கிறது.

“நான் ஒரு ஹவுஸ் ஒய்ஃப்…” என்று மிடுக்காகச் சொல்வதில் தொடங்கி, லெமன் அன்ட் ஸ்பூன் ரேஸை ஸ்போர்ட்ஸ் ரேஞ்சுக்கு நினைத்து, அதில் கலந்து கொள்ள பேர் கொடுக்கும்போது “லாஸ்ட் இயர் வின்னர்…” என்று பூரிப்பதில் தொடர்ந்து வேலைக்குப் போகாததை வைத்து விமர்சனம் செய்யும் அதே குடும்பம் வேலைக்குப் போனதும் அதை விடச்சொல்லும்போது மிஞ்சி முடியாது என்று வெடித்து, அதே வேலை கணவன், மகனின் சந்தோஷத்தை அபகரித்த நிலையில் உடைந்து… பலே ஜோ…ர்..!

ஜோதிகாவின் கணவனாக விதார்த்துக்கு புரமோஷன். அந்த ‘லெவல்’ உணர்ந்து அரை அடி தள்ளியே நின்று ஜமாய்க்கிறார்.

ராதாமோகனின் கம்பனி ஆர்ட்டிஸ்டுகளான எம்.எஸ்.பாஸ்கர், மனோபாலா, குமரவேல் மிஸ் ஆகாமல் இதிலும் ‘ஆஜர்’ ஆகி வழக்கம்போல அதகளம் செய்திருக்கிறார்கள். அதிலும் எம்.எஸ்.பாஸ்கர் அலப்பறை… தன் பார்க்கிங் பிளேஸில் அடுத்தவர் காரை நிறுத்தியதற்கு சண்டைபோட்டு “உங்ககிட்டதான் கார் இல்லயே..?” என்று நியாயம் கேட்டால், “என் வீட்ல வாஷிங் மெஷின் கூடத்தான் இல்ல. அதுக்காக உங்க வீட்டு வாஷிங் மெஷினை என் வீட்ல வைப்பீங்களா..?” என்று லாஜிக்கால் அடிக்கிறார் பாருங்கள்… ஆஸம்..!

குமரவேலும் அப்படியே… தன்னை ஒரு மாகாகவியாக நினைத்துக் கொண்டிருக்கும் அவருக்கு அப்பள விளம்பரத்துக்கு பாட்டெழுத நேர, ஆனாலும் சமாளித்து “ஆலுமா டோலுமா…” மெட்டில் அதைப் பாட, “டியூன் ரொம்ப ஃப்ளாட்டா இருக்கே..?” என்று கேட்கும் விளம்பரதாரரிடம் “அதை நீங்க அனிருத்கிட்டதான் கேட்கணும்…” என்று கலாய்ப்பது அவர் பிராண்ட் காமெடி. 

இதுவரை தன் பட காமெடியில் இரட்டை அர்த்தம் வராமல் பார்த்துக்கொண்ட ராதாமோகன் இந்தப்படத்தில் கொஞ்சம் இறங்கி பி அன்ட் சி பக்கம் வந்திருக்கிறார். மனோபாலா பேசுவதெல்லாம் வெ.ஆ.மூர்த்தி டைப் வசனங்கள். ஆனால், அதை ஒரு அர்த்தத்துடன் அப்பாவியாகச் சொல்வதில் மனோபாலா கவர்கிறார்.

இவர்கள் எல்லோரையும் ஒரே சீனில் ஓவர்டேக் செய்து மயில்சாமி சிரிக்க வைப்பது வெற லெவல்..!. அந்தப் பத்து நிமிஷம் தியேட்டர் 6.5 ரிக்டர் அளவுக்கு சிரிப்பில் அதிர்கிறது.

எஃப்.எம் டீம் ஹெட்டாக வரும் லஷ்மி மஞ்சு மெத்தப் பொருத்தம்..! அந்த ஓங்குதாங்கான உயரம்,பார்த்தவுடன் ஒரு கேரக்டரை எடை போடும் திறமை, கனிவான ஆனால் கண்டிப்பான பேச்சு, திறமையை உடனே பாராட்டும் பாங்கு என்று மஞ்சு ‘பக்கா’ தேர்வு..! ஒரே சீனில் வரும் சிம்பு ‘ஸ்மார்ட்..!’

ஏ.எச்.காஷிப்பின் இசையில் கிளம்பிட்டாளே விஜயலட்சுமி துள்ளல். ஆனால், ஜோ வேலைக்குப் போகும்போது போட வேண்டிய அந்தப்பாடலை இ.பி.பில் கட்டப்போகும்போதெல்லாம் போடுவது ஏன்..? மகேஷ் முத்துசாமியின் ஒளிப்பதிவு முத்து… சாமி..!

இந்தப்படத்தின் வெற்றியே படத்துக்குப் பொருத்தமான தலைப்பும், பாத்திரங்களுக்கேற்ற நடிக, நடிகையரின் தேர்வும்தான். 

குறை என்று சொல்ல வேண்டுமென்றால் ‘துமாரி சுலு’ உள்ளிட்டே எழும் கேள்விகள் இவை. மனிதர்களின் மன பாரத்தை இறக்கிவைக்கும் அந்த நெகிழ்வான நிகழ்ச்சிக்கு ஏன் ஹஸ்கி வாய்ஸில் செக்ஸியாக ‘ஹலோ’ சொல்ல வேண்டும்..? ‘ஜோ’வின் பிரச்சினை இரவுப்பணியில்தான் என்றிருக்க அவர் திறமைக்கு ஏன் பகலில் ஒரு நிகழ்ச்சியை எஃப் எம் நிறுவனம் தந்திருக்கக் கூடாது..? இதற்கும் ஜோ சமையலில் ஒரு புலியாக இருக்கிறார். அதை வைத்து ஒரு ஹிட் நிகழ்ச்சியைப் பகலில் அவர் தர முடியாதா என்ன..? கடைசியில் மீண்டும் அதே நிகழ்ச்சிக்குப் போகிறார் என்பதில் என்ன ‘அச்சீவ்மென்ட்’ இருக்கிறது..? இந்தக் கேள்விகளைக் கேட்டு தமிழிலாவது சரி செய்திருக்கலாம்.  

இந்தக் குறையைத் தவிர்த்து விட்டுப் பார்த்தால் குடும்பத்துடன் சென்று கண்டு களிக்க, சிரித்து ரசிக்க இந்தவார முதல் சாய்ஸ் இந்தப்படம்தான்.

காற்றின் மொழி – கலகலப்புக்கு வழி..!

– வேணுஜி