November 28, 2024
  • November 28, 2024
Breaking News
October 27, 2022

காலங்களில் அவள் வசந்தம் திரைப்பட விமர்சனம்

By 0 759 Views

காதலே கதி என்று கிடக்கும் நாயகன் உண்மையான காதல் எது என்பதை தெரிந்து கொள்ளும், ஒரு தீப்பெட்டிக்குள் எழுதி அடக்கி விடக்கூடிய கதை.

ஆனால் அந்த காதல்களின் உள்ளே புகுந்து காரண காரியங்களை பிடித்து அந்த ரசவாதம் எப்படி நடக்கிறது என்பதை நீளமாக சொல்லி முடிக்கிறார் இயக்குனர் ராகவ் மிர்தாத்.

புதுமுகம் கௌசிக் ராம் நாயகன் வேடமேற்றிருக்கிறார். ஹீரோவுக்கு ஏற்ற உயரம், அதற்கு ஏற்ற உடல்வாகு, இளைஞர்களுக்கு உரிய அழகான ஹேர் ஸ்டைல் என்று முதல் படத்திலேயே ஒரு ஹீரோவாக நம்மை நினைக்க வைத்து விடுகிறார் கௌசிக்.

மனதில் பட்டதை ஒளிவு மறைவில்லாமல் சொல்லி விடக்கூடிய கௌசிக்கின் பாத்திரப் படைப்பு நன்றாக இருக்கிறது. அதுவே நாயகி அஞ்சலி நாயரைக் கவர்ந்து விட, கண்டதும் காதல் அல்ல கண்டதும் கல்யாணமே செய்து கொண்டு விடுகிறார்.

இந்த அதிரடி முடிவால் அஞ்சலியை காதலிக்கவும் முடியாமல் காதலி ஹீரோஷினியை கைவிடவும் முடியாமல் கௌஷிக் படும் பாடு எதார்த்தமாக இருக்கிறது.

ஹிரோஷினியிடம் தனக்கு கல்யாணம் ஆகிவிட்டது என்று சொல்ல முடியாமல் அவர் படும் பாடு பரிதாபம். ஆனால் ஹீரோஷினியும் தன்னுடைய இன்னொரு காதலனை பிரேக் அப் செய்துவிட்டு அதன் விளைவாகத்தான் தன்னை தேடி வந்திருக்கிறார் என்று புரிந்து கொள்ளும்போது நன்றாக நடித்திருக்கிறார் கௌஷிக்.

நாயகி அஞ்சலி நாயர், இதுவரை பார்த்த படங்களில் இருந்தும் கூட இதில் மிக அழகாக தெரிகிறார். அவர் சொல்படியே நாயகன் ஒரு ‘தத்தி ‘யாக இருந்தாலும் இப்படிப்பட்டவன் தான் தனக்கு வேண்டும் என்று பிடிவாதமாக கல்யாணம் செய்து கொள்வதிலும், அவனது அன்பை பெற முடியாமல் ஏங்குவதிலும் அற்புதமாக செய்திருக்கிறார் அஞ்சலி.

அஞ்சலிக்கு அடுத்தபடியாக நம் கவனத்தை கவருவது காதலியாக வரும் ஹீரோஷினி தான். “மழையில வந்து மணிரத்தினம் ஹீரோ மாதிரி என்னை ப்ரொபோஸ் பண்ணியே அதை மறக்கவே முடியாது..!” என்று அவர் கௌசிக்கை கரெக்ட் பண்ணும் போது தியேட்டரே அதிர்கிறது.

கௌசிக்கின் அப்பாவாக நடித்திருக்கும் மேத்யூ கச்சிதமாக செய்திருக்கிறார். மருமகளின் நிலைக்கண்டு இறங்கி அவளை திடமான முடிவு எடுக்கச் சொல்லி வற்புறுத்திகளில் நல்ல மனிதனாகவும் தெரிகிறார் அவர்.

கௌசிக்கின் அம்மாவாக வரும் ஜெயா சுவாமிநாதனிடம்தான் தமிழ் கொஞ்சம் தகராறு செய்கிறது. ஆனால் கௌஷிக் ஏன் அப்படி இருக்கிறார் என்பதற்கு இந்த அம்மாவை பார்த்தாலே காரணம் புரிந்து விடுகிறது.

காமெடியனாக ஆர்ஜே விக்னேஷ்காந்த் நடித்தாலும் அவருக்காக நாம் அதிகம் சிரிக்கவில்லை. அலுவலக தோழியாக வரும் அனிதா சம்பத்துக்கும் அவ்வளவு பெரிதாக வேலை இல்லை.

இளமை ததும்ப வண்ணமயமாக ஒளிப்பதிவை மேற்கொண்டு இருக்கும் கோபி ஜெகதீஸ்வரனுக்கு முழு பாராட்டுகள். ஹரி எஸ்.ஆரின் இசையும் மிகச் சரியாகவே இருக்கிறது.

ஒரே இடத்திலேயே கதை நகராமல் நின்று கொண்டு இருப்பது ஒரு வித அலுப்பை தந்தாலும் இன்றைய இளைஞர்களின் மனநிலையை படம் பிடித்து காட்டி இருப்பதிலும், இளமையின் கைபிடித்து கதையை நடத்திச் சென்றிருப்பதிலும் இயக்குனர் தேர்வாகி விடுகிறார்.

ஐஸ் கட்டியையும் பப்பாளியையும் வைத்து கலகலப்பைக் கூட்டி இருக்கும் அவர் பட்டாம்பூச்சியை வைத்து இலக்கியத் தரமாகவும் காதலை கையாண்டு இருக்கிறார்.

காலங்களில் அவள் வசந்தம் – காதல் கண்ணாமூச்சி..!